என் மலர்
ஈரோடு
ஈரோடு:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக கூட்டணி தொகுதிகள் தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி என்பது ஏழை எளிய நடுத்தர மக்கள் முன்னேற்றம் அடையும், தமிழக வளர்ச்சிக்கான கூட்டணியாக உள்ளது மக்கள் நம்பிக்கை உடைய கூட்டணியாக நாங்கள் உள்ளோம்.
எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதன் அடிப்படையிலேயே எங்கள் தேர்தல் அறிக்கையும் இருக்கும். தமாகா சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். வேட்பாளர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ஆக இருப்பார்.
எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணி அமைக்காமல் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்து உள்ளோம். தஞ்சாவூர் தொகுதி வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அதுபோக 38 தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற எங்கள் கட்சி கூட்டணி தலைவர்கள் பாடுபடுவார்கள்.
த.மா.கா கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நீதிமன்றத்தை அணுகி முதற்கட்டமாக சைக்கிள் சின்னத்தை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை நாங்கள் அணுகி சைக்கிள் சின்னம் பெற வலியுறுத்துவோம். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தஞ்சாவூர் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் கண்மூடித்தனமாக குறைகளையும் ஆட்சியாளர்கள் பற்றிய தவறான தகவலைக் கூறி வருகிறார்கள் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை அதிமுக சாமானியர்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது முதல்வரும் துணை முதல்வரும் சாமானிய மக்களின் தலைவராக உள்ளனர்.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் கண்டிக்கத்தக்கது மிகவும் வருந்தத்தக்கது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இதனை சிலர் அரசியலாக்குவது மக்கள் நம்ப மாட்டார்கள் அதேபோன்று பொள்ளாச்சி சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு ஏன் இந்தியாவில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தற்போது சிபிஐ க்கு மாற்றப்பட்டு உள்ளது நல்ல விஷயமாகும் என்னை பொருத்தவரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தான் வழங்க வேண்டும். என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #parliamentelection
சென்னிமலை:
சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 65). விவசாயி.
இவரது தோட்டத்தில் மாடு,எருமைகளுக்கு தேவையான தீவனத்திற்காக சோளத்தட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். இதில் இருந்து நேற்று மதியம் கரும்புகை வந்தது.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது தட்டுப்போர் தீயில் எரிந்து கொண்டிருந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மள மளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கூறும் போது, தட்டுப்போரின் அருகில் உள்ள தென்னை மரத்திலிருந்து பலத்த காற்றில் கீழே விழுந்த தென்னை மட்டைகள் அருகில் இருந்த மின் கம்பத்தின் கம்பி மீது விழுந்து அதில் இருந்து ஏற்பட்ட தீ தென்னை மட்டையில் பற்றியுள்ளது.
பின்னர் அது தட்டுப்போரின் மீது விழுந்து இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என்றார்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஜூஸ், இளநீர் குடித்து தங்களது தாகத்தை போக்கிக் கொள்கின்றனர்.
ஆனால் குடிமகன்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க பீர்களை அதிக அளவு அருந்தி வருகின்றனர். இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை ரூ.29.30 கோடிக்கு 2.25 லட்சம் பீர் பாட்டில்களை குடித்து தீர்த்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 197 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் 106 டாஸ்மாக் கடைகளில் கடைகளுடன் இணைந்து பார்கள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் தினசரி 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பண்டிகை காலங்களில் மதுபானங்களின் விற்பனை 5 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 72 ஆயிரம் பீர் பெட்டிகள் ரூ.11.80 கோடிக்கும், பிப்ரவரி மாதத்தில் 85 ஆயிரம் பெட்டிகள் 13 கோடி ரூபாய்க்கும், மார்ச் மாதத்தில் இதுவரை 13 ஆயிரம் பெட்டிகள் ரூ.4.50 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.
ஒரு பெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ரூ.29.30 கோடிக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் குடிமகன்கள் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளில் இருந்து பீர் வகைகளுக்கு மாறியுள்ளனர். இதனால் பீர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏப்ரல், மே மாதங்களில் பீர்விற்பனை இதை விட கூடுதலாக விற்பனையாக வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் விற்பனை ரூ.20 கோடி ரூபாயை நெருங்க வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.
டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு வசூல் செய்வதாக குடிமகன்கள் புலம்பி வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களில் இருந்து அதிக அளவில் பீர் ரகங்களுக்கு மாறி உள்ளோம். இதனால் பீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் பீர் வகைகளுக்கு கூலீங் சார்ஜ் என்று கூறி 10 ரூபாயை அதிகமாக வசூல் செய்து வருகிறார்கள்.
தற்போது கோடையையொட்டி பீர்வகைகள் அதிகமாக விற்பதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். இதன் மூலமாக ஆயிரக்கணக்கான ரூபாயை வருமானம் பார்த்து வருகிறார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களை எவ்வித விசாரணையும் இன்றி பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது குறையும் என்றனர். #TasmacShop
ஈரோடு:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் கல்லூரி மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த கயவர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக சார்பில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் மூலம் நாளுக்கு நாள் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது,
ஈரோட்டிலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுவை போட்டனர்.
பின்னர் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தபால் அறிக்கை அனுப்பினர். ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிர் இலக்கிய அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி என்ற பெண் திடீரென தன் பாட்டிலில் மறைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து அந்தப் பெண்ணிடமிருந்து மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்தனர். அப்போது அவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக தூக்கில் இடவேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை வீரமணி மீது ஊற்றினர். இதையடுத்து சூரம்பட்டி போலீசார் வீரமணியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர் இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #pollachiissue
பவானி:
சித்தோடு அடுத்த செல்லப்பம் பாளையம் மேட்டு காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 27). இவரது மகன் சபரி (5). தந்தை, மகன் இருவரும் சித்தோட்டில் நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில் கோவை நெடுஞ்சாலை செல்லப்பம்பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தங்கராஜ் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்றனர். ரோட்டில் தந்தையும், மகனும் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.
மேலும் பொதுமக்கள் அந்த இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை- சேலம் நெடுஞ்சாலையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசும் விரைந்து சென்று மறியல் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் தடுத்தனர். உடல்களை எடுக்க விடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன. போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் ஆவேசத்துடன், ‘‘இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இப்போது 2 உயிர்கள் பறி போய் விட்டது. இந்த இடத்தில் சர்வீஸ் ரோடு போட வேண்டும். மேலும் விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்று கூறினர்.
இதற்கு போலீசார் உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்துக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.
இதையொட்டி பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு போக்கு வரத்து சீரானது.
ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். ஜேசிபி டிரைவர். இவரது மனைவி கோபிகா (வயது 35).
தமிழ்ச்செல்வனுக்கும் கோபிகாவும் கடந்த 2 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கோபிகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கோபிகா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார்.
கீழ்ப்பகுதியில் தமிழ்ச்செல்வன் மற்றும் அவர் குடும்பத்தினர் தூங்கினர்.
இந்நிலையில் தமிழ்ச்செல்வன் காலை மனைவியை பார்க்க மேல் அறைக்கு சென்றார். அப்போது அறையில் மனைவி கோபிகா தூக்குப் போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆவதால் ஈரோடு ஆர்டிஓ முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஆர்.வடிவேல் (வயது 37).இவரது தந்தை பெயர் ராமன், தாயின் பெயர் சிந்தாமணி இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வளையகாரன் வலசு.
இவர் பிஎஸ்ஸி (கணிதம்)எம்.ஏ.பிஎட். (வரலாறு) பட்ட படிப்பு முடித்து, அம்மா பேட்டை அருகே உள்ள மறவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 17.01.2002 முதல் இன்று வரை 17 வருடங்களாக அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார் இவர் ஐ.ஏ.எஸ். கனவுடன் இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளும் எழுதியுள்ளார்.
கடந்த 2013 முதல் 3 முறை குரூப் 1 தேர்வுகள் எழுதப்பெற்று முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிளாரன்ஸ் இவரும் அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இவருக்கு அறிவமுது (11) என்ற மகளும் அமுதப் பிரியன் ( 9) என்ற மகனும் உள்ளனர்.
டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற இவரை சக ஆசிரியர்களும் அப்பகுதி பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். #tamilnews
ஈரோடு:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே பொது இடங்கள் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள் சின்னம் ஆகியவை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும் ஈரோடு கலெக்டர் அலுவலகம், அனைத்து துறை அலுவலகங்களிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படங்கள் அகற்றப்பட்டுவிட்டன.
நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள், கணக்கு குழுக்கள் ஆகிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் தற்போது வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதே போன்று வீடியோ குழுவினர் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்கள் புகார்களை படத்துடன் தெரிவிக்க தனியாக வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் புகார் கூற விரும்பும் பொதுமக்கள் படத்துடன் புகார் கூறலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நிலையில் சமூக வலை தளங்களான வாட்ஸ்- அப், பேஸ்புக் ட்விட்டர் இன்டோஸ்க்ராம் போன்ற சமூக வலைத்தளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தவறான தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். உதாரணமாக ஒரு சிலர் எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்து விடுவதாக விளம்பரம் செய்வார்கள்.
இவ்வாறு விளம்பரம் செய்வது தண்டனைக்குரியது. இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாமரைபாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியர்.
கடந்த 3 தினங்களுக்கு முன் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்றார்.
இன்று காலை குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தபோது அதிர்ச்ச அடைந்தார். வீட்டின் கதவு பூட்டு நெம்பி உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
பதட்டத்துடன் உள்ளே சென்றனர். அங்கு பீரோவும் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் மேல்பகுதியில் உள்ள ‘‘கபோர்ட்டை’’ திறந்து பார்த்து உள்ளனர். அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
ஒன்றுக்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்று உள்ளனர்.
வீட்டில் பழங்கால கடிகாரம் மற்றும் பழங்கால பொருட்கள் இருந்தது. அதனையும் மர்ம ஆசாமிகள் எடுத்து சென்று உள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கைரேகை நிபுணரும் கைரேகையை பதிவு செய்தார். வீட்டில் சி.சி.டி.வி கேமிரா இருந்திருந்தால் கொள்ளையர்கள் உடனே அடையாளம் தெரிந்திருக்கும். ஆனால் சி.சி.டி.வி. கேமிரா இல்லை. எனினும் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளுக்கு தடை நீடித்து வருகிறது. இதை நீக்க கோரி 15 ஆண்டுகளுக்கு மேலாக கள் இயக்கம் போராடி வருகிறது. பல போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது. இந்த போராட்டத்தில் ம.தி.மு.க.வும் பங்கேற்று உள்ளது. கள் தடை நீக்கம் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றது.
இந்த நிலையில் ம.தி.மு.க. கள்ளை ஆதரிக்காது. கள்ளும் ஒரு போதை பொருள் தான். கள் பற்றி இனி யாரும் வாய் திறக்க கூடாது என வைகோ கூறியுள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வைகோவுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைகோ கள் இயக்கத்துடன் வாதிட்டு கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய ஒரு போதை பொருள் என நிரூபித்து விட்டால் அவருக்கும் அவரது கட்சிக்கும் வலு கூடும். வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக அமையும். அவரது வெற்றி கள் இயக்க போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த வாய்ப்பை வைகோ பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #vaiko #parliamentelection
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல்வாதிகள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
அதன்படி இந்த தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறிய ஒப்புகை சீட்டு நடைமுறை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையம் குறித்தும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
இதன்படி அரசு மற்றும் அனுமதி பெறாமல் தனியார் சுவர்களில் செய்யப்பட்டுள்ள கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசார நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் பறக்கும் கண்காணிப்பு குழுக்கள் நிலை கண்காணிப்பு குழுக்கள் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள் என ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
குறிப்பாக கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் , வயதானவர்கள் சிரமமின்றி வாக்களிக்க பல சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க தனியாக வாட்ஸ்-அப் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் ரூபாய் 50,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல் பணம் எடுத்து சென்றால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
முடிந்த அளவு ஆன்லைன் பணவர்த்தனை முறையை பின்பற்றினால் சிறந்ததாக இருக்கும். இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. வீடியோ குலுக்கல் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மலை கிராம மக்களும் சிரமமின்றி வாக்கு பதிவு செய்ய பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவர் அவர் கூறினார். #LSPolls #collectorKathiravan
ஈரோடு மாமரத்துபாளையம் புது காலனியைச் சேர்ந்தவர் பாலு (வயது 27). தனியார் மில்லில் கேஷியராக உள்ளார். திருமணமாகவில்லை.
இந்த நிலையில் பாலு சம்பவத்தன்று இரவு காரை வாய்க்கால் சொக்கலிங்கம் வீதியை சேர்ந்த செல்வராஜ (46) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மூலப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த கார் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பாலு செல்வராஜ் இருவரும் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வராஜை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






