என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் இன்று கார்களை துரத்திய யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்லம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, கரடி, சிறுத்தை, புள்ளி மான்கள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதில் ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிகம் வசிக்கின்றன. யானைகள் அவ்வபோது சாலையின் நடுவில் நின்று கொண்டும், வாகனங்களை துரத்தி கொண்டும் செல்வது நடக்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை காரப்பள்ளம் அருகே 6 யானைகள் தண்ணீர் குடித்துவிட்டு ரோட்டை கடக்கும் போது அவ்வழியாக சென்ற கார்கள் அதிக ஒலி எழுப்பியதால் யானைகள் திடீரென காரை துரத்த ஆரம்பித்தது. அந்த கார் பின்னோக்கி சென்றதால் யானையிடம் இருந்து தப்பியது.

    அந்த யானைகள் கூட்டம் 30 நிமிடம் ரோட்டில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது.

    யானைகள் கூட்டம் ரோட்டை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அதிக அளவு ஒலி எழுப்ப கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் வண்டியூரான் கோவில், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது50). இவரது மனைவி ராணி. இவர்களுக்கு கோபால், நந்தகுமார் என 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி நேதாஜி மார்க்கெட்டில் பழ மண்டி வைத்துள்ளார்.

    சுப்பிரமணியனின் அண்ணன் மாதேஸ்வரன். இவரது மகள் மோனிகா. மாதேஸ்வரன் நாராயண வலசில் குடி இருந்து வருகிறார். சுப்பிரமணியன் வீடு ஒரு மாடி கொண்டது. முதல் மாடியில் சுப்பிரமணியன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ்ப்பகுதியில் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் பகுதியில் மூஸ்தரி (62) என்ற மூதாட்டி தனது மகன், மருமகளுடன் குடியிருந்து வருகிறார்.

    சுப்பிரமணியன் அண்ணன் மகள் மோனிகாவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். இது சம்பந்தமாக கடந்த 3-ஆம் தேதி மேட்டுப்பாளையத்திற்கு சுப்பிரமணியன் மட்டும் அவரது அண்ணன் மாதேஸ்வரன் குடும்பத்துடன் சென்று விட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3.30மணி அளவில் 2 மர்ம ஆசாமிகள் சுப்பிர மணியன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 50 ஆயிரம் ரொக்க பணம், மற்றும் 17 பவுன் நகையை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கீழே இறங்கி வந்த மர்ம ஆசாமிகள் மூதாட்டியின் வீட்டு ஜன்னல் ஓரமாக சென்று பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

    சத்தம் கேட்டு மூதாட்டி மூஸ்தரி எழுந்தார். உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து கூச்சல் போட்டனர். அதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மூதாட்டி வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இது குறித்து அவர் ஈரோடு கருங்கல் பாளையம் போலீசுக்கு புகார் கூறினார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் முகத்தில் மாஸ்க் (முகமூடி) அணிந்து வந்ததாக மூதாட்டி போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் கொள்ளையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பெருந்துறை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது மகனுடன் இளம்பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையம் புத்தூர் புதுப்பாளையம் வேலவன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி பெயர் ரூபியா (வயது 20). 2 வயதில் ஒரு மகன் உள்ளான். ரூபியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. வீட்டு வேலை ஏன் ஒழுங்காக பார்க்க மாட்டேன்கிறாய்? என்று கூறி ராஜ்குமார் மனைவியை சத்தம் போட்டு கண்டித்தாராம்.

    மேலும் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ராஜ்குமார் வேலைக்கு போய்விட்டார். மதியம் வீட்டுக்கு வந்த போது வீட்டில் மனைவியையும், குழந்தையையும் காணவில்லை.

    கணவர் சத்தம் போட்டு தன்னை அடித்ததால் கோபித்து கொண்டு ரூபியா தனது மகனுடன் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் ராஜ்குமார் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    தாளவாடி அருகே தீயில் கருகி தாயும், மகளும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் நாகண்ணா இவரது மனைவி ராஜம்மா (வயது 30) இவர்களுக்கு கீதா (வயது 18) என்ற மகளும் மாதேவபிரசாத் என்ற மகனும் உள்ளனர்.

    நாகண்ணா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் மனைவி ராஜம்மா மகன்-மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்து கூலி வேலைக்கு சென்று வந்தார் மகன் கேரளாவில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு தனியாக குடிசை வீடு அமைத்து ராஜம்மா தனது மகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் அந்த குடிசை வீடு தீ பற்றி எரிந்தது. காற்றுக்கு தீ மளமளவென்று பரவி வீடு முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

    இதில் உள்ளே இருந்த ராஜம்மா அவரது மகள் கீதா ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    சம்பவ இடத்திற்கு தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மேலும் 2 பெண்கள் சாவில் பல சந்தேகங்களும் ஏற்பட்டு உள்ளது. வீடு திடீரென தீ பிடித்ததில் 2 பேரும் தீக்கு பலியானார்களா? அல்லது தாயும் மகளும் தற்கொலை செய்ய தீக்குளித்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இன்று இரு சக்கர வாகனத்தின் மீது லாரி விபத்தில் மில் தொழிலாளி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னிமலை அருகே உள்ள கே.ஜி. வலசு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 38). இவர் ஈரோடு அடுத்த ஆலுச்சாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் இன்று காலை இரண்டு சக்கர வாகனத்தில் ஈரோட்டுக்கு வந்தார். அவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த ஒரு மினி லாரி நாச்சிமுத்து வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் வீரப்பன் சத்திரம் பகுதியில் பொது மக்கள் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். விபத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற நடைமுறை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது உள்ள தேர்தல் முறையில் விகிதாசாரம் கொண்டு வரப்பட்ட வேண்டும்.

    புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கும் காலக்கெடு வேண்டும். ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு என்பது ஏற்படையுதல்ல உணவு தட்டுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. அதற்கு ஆதரவாக தான் காவிரி ஆணையம், மத்திய அரசு செயல்படுகிறது.

    தமிழகத்தில் பொதுவாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. 6500 ரூபாயிலிருந்து 9500ரூபாய் தற்போது ஒரு லாரி தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை வரபோவது என தமிழக அரசு முன்கூட்டியே தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

    தமிழக முழுவதும் உள்ள ஏரி, குளத்தை முறையாக தூர் வாரி இருந்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்காது. இனி வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.

    சேலம், சென்னை 8 வழிச்சாலை தடையை மீறி மத்திய அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தை கைவிட்டு பழைய வழி தடத்தையே பின்பற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கப்பட்டு வருவது மிகவும் அபாயகரமான ஒன்று அதனை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    தி.மு.க. சார்பில் நீண்ட காலமாக பணி செய்து வரும் சண்முகம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் ஆகிய இருவரையும் நாடாளுமன்ற மேல் அவைக்கு செல்ல இருப்பதால் வாழ்த்துகள். உள்ளாட்சி தேர்தல் நடத்தபடாததால் உள்ளாட்சி நிர்வாகம் செயலற்று கிடக்கிறது.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரதாதற்கு தி.மு.க. காரணம் தெரிவிக்கும்.


    தமிழகத்தில் ஆவணக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சட்ட ரீதியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார்.

    ஈரோட்டில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் எல்ஐசி நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோகுலகிருஷ்ணன்(21). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோகுலகிருஷ்ணன் குடும்பத்தினர் நேற்று கோயிலுக்கு சென்றிருந்தனர்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த கோகுலகிருஷ்ணன் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டிற்கு திரும்ப வந்த கோகுலகிருஷ்ணன் பெற்றோர் பார்த்த போது மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, கோகுலகிருஷ்ணனின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாளவாடி அருகே இன்று அதிகாலை ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வாழ்ந்து வருகிறது. முன்பெல்லாம் சிறுத்தை மற்றும் புலியை பார்ப்பது மிகவும் அரிதாக இருந்தது. தற்போது இவை வெளியே ரோட்டோரம் நடமாடுவது அதிகமாகி விட்டது. நேற்று அதிகாலை சத்தி- திம்பம் மலைப்பாதை 25- வது துறையில் ரோட்டோரம் உள்ள தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை படுத்து கிடந்தது. அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் இதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். 

    இந்த நிலையில் இன்று அதிகாலை தாளவாடி அருகே ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தி வனப்பகுதி தாளவாடி அருகே அண்ணா நகரில் மாதவிநாயக்கா என்பவரின் வீடு உள்ளது. அருகே இவரது விவசாய தோட்டமும் உள்ளது. 

    இன்று அதிகாலை விவசாயி மாதவிநாயக்கா தோட்டத்துக்கு சென்ற போது அங்கு ஒரு சிறுத்தை நடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பயந்து போய் வீட்டுக்குள் சென்று விட்டார். நன்றாக விடிந்ததும் ஊரில் அவர் தெரிவிக்க ஊர் மக்கள் பீதி அடைந்தனர். 

    மேலும் தாளவாடி வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. வனதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து வன ஊழியர்கள் பொதுமக்களிடம் கவனமாக எச்சரிக்கையாக இருங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
    ஈரோட்டில் இன்று காலை மண்ணுக்குள் அரசு பஸ் வசமாக சிக்கி கொண்டது. உடனே கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ் மீட்கப்பட்டது.

    ஈரோடு:

    சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் 8.30 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே சத்தி ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

    அப்பகுதியில் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணி முடிந்து குழி மண்ணால் மூடப்பட்டிருந்தது.

    இந்த மூடப்பட்ட மண் குழியில் அரசு பஸ் வசமாக சிக்கி கொண்டது. பஸ்சின் டயர்கள் மண்ணில் புதைந்ததால் பஸ்சை எடுக்க முடியாமல் டிரைவர் தவித்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டன.

    பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ் மீட்கப்பட்டது. சுமார் முக்கால் மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. 

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய நிலத்தில் குவியல் குவியலாக கிடந்த எலும்பு துண்டுகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப் பகுதி தாளவாடி அடுத்த தர்மாபுரம் பகுதியில் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் மஞ்சள், வாழை, மிளகாய் பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் திடீரென துர்நாற்றம் வீசியது. இதில் சிலருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் கரும்புகை வந்தது. இதை கண்ட அவர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.

    அங்கு சென்று பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் குவியல் குவியலாக கழிவுகள் மற்றும் எழும்பு துண்டுகள் இருந்தது.

    அந்த கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. தொடர்ந்து தூர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தை கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் குத்தகைக்கு எடுத்தார். சில நாட்கள் கழித்து லாரிகள் மூலம் மூட்டை மூட்டையாக கழிவுகள் அவர் விவசாய நிலத்தில் கொட்டபட்டது. நாங்களும் விவசாய நிலத்துக்கு தேவையான குப்பையாக இருக்கும் என்று நினைத்து விட்டோம்.

    தற்போது அந்த கழிவுகளை தீ வைத்த போது தான் துர்நாற்றம் வீசுகிறது. அந்த கழிவு குவியலில் எழும்பு துண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது மாடுகளின் எழும்புகளா? அல்லது மனித எழும்புகளா? என எங்களுக்கு அச்சமாகவும், சந்தேகமாகவும் உள்ளது.

    எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து உரிய ஆய்வு மேற் கொண்டு எங்கு இருந்து கழிவுகள் கொண்டு வரப்பட்டது? என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஈரோடு அருகே சூதாட்ட கிளப்பில் சிக்கிய போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்த குமார், செங்கோடம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரதீப், பழைய பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ், கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளையங்கிரி என தெரிய வந்தது.

    இதில் வெள்ளிங்கிரி என்பவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ் வெள்ளிங்கிரியை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
    பெருந்துறை அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் துரைசாமி (27). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

    இவர் தனது உறவினரான ஈரோடு, பெரிய சேமூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பரது மகன் சக்திவேல் (35) வுடன் தனது பைக்கில் பெருந்துறை வந்துள்ளார். பெருந்துறையில் இருந்து பெரியசேமூர் செல்வதற்காக பைபாஸ் ரோட்டில் பைக்கில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    பெருந்துறையை அடுத்துள்ள வாவிக்கடை பம்பிங் ஸ்டேசன் பகுதியில் சென்ற போது, ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக பைக் மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையிலான போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இறந்து போன சக்திவேல் ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். துரைசாமி ஓட்டி வந்த பைக் ரெஜிஸ்ட்ரேசன் செய்யப்படாத புதிய பைக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    ×