என் மலர்
செய்திகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் வண்டியூரான் கோவில், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது50). இவரது மனைவி ராணி. இவர்களுக்கு கோபால், நந்தகுமார் என 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி நேதாஜி மார்க்கெட்டில் பழ மண்டி வைத்துள்ளார்.
சுப்பிரமணியனின் அண்ணன் மாதேஸ்வரன். இவரது மகள் மோனிகா. மாதேஸ்வரன் நாராயண வலசில் குடி இருந்து வருகிறார். சுப்பிரமணியன் வீடு ஒரு மாடி கொண்டது. முதல் மாடியில் சுப்பிரமணியன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ்ப்பகுதியில் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் பகுதியில் மூஸ்தரி (62) என்ற மூதாட்டி தனது மகன், மருமகளுடன் குடியிருந்து வருகிறார்.
சுப்பிரமணியன் அண்ணன் மகள் மோனிகாவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். இது சம்பந்தமாக கடந்த 3-ஆம் தேதி மேட்டுப்பாளையத்திற்கு சுப்பிரமணியன் மட்டும் அவரது அண்ணன் மாதேஸ்வரன் குடும்பத்துடன் சென்று விட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.30மணி அளவில் 2 மர்ம ஆசாமிகள் சுப்பிர மணியன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 50 ஆயிரம் ரொக்க பணம், மற்றும் 17 பவுன் நகையை கொள்ளையடித்தனர்.
பின்னர் கீழே இறங்கி வந்த மர்ம ஆசாமிகள் மூதாட்டியின் வீட்டு ஜன்னல் ஓரமாக சென்று பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
சத்தம் கேட்டு மூதாட்டி மூஸ்தரி எழுந்தார். உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து கூச்சல் போட்டனர். அதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மூதாட்டி வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இது குறித்து அவர் ஈரோடு கருங்கல் பாளையம் போலீசுக்கு புகார் கூறினார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் முகத்தில் மாஸ்க் (முகமூடி) அணிந்து வந்ததாக மூதாட்டி போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் கொள்ளையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.






