என் மலர்
கடலூர்
- ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினந்தோறும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
- பணம் கணக்கில் காட்டாத பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினந்தோறும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரிடம் இருந்த கைப்பையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது கட்டுகட்டாக பணம் இருந்தது.
இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக 57 வயது மதிக்கத்தக்க நபரையும் பணத்தையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் பணத்தை எண்ணியபோது ரூ.35 லட்சம் இருந்தது என தெரிய வந்தது. மேலும் இந்த நபர் குறித்தும், பணம் எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பதனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணம் கணக்கில் காட்டாத பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
சமீப காலமாக கடலூர் வழியாக லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமதாசை அன்புமணி சந்தித்தது சந்தோஷம், மகிழ்ச்சி அளிக்கிறது.
- பா.ம.க. வலிமையான கட்சி.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் சுமார் 25 நாட்களுக்கு பிறகு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி சந்தித்தார். இது குறித்து பா.ம.க. கவுரவதலைவர் ஜி.கே.மணியிடம் கேட்டபோது கூறியதாவது:-
டாக்டர் ராமதாசை அன்புமணி சந்தித்தது சந்தோஷம், மகிழ்ச்சி அளிக்கிறது. 2 பேரும் சுமூகமாக செயல்பட முயற்சி செய்தேன். பா.ம.க. வலிமையான கட்சி. இந்த கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி சோதனையானது டாக்டர் ராமதாசை அன்புமணி சந்தித்தது எனக்கும் மட்டுமின்றி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு விரைவில் தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமதாஸ்- அன்புமணி மோதலால் ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிக்கிறது.
- ஆறுதலை தெரிவிக்கவே எனது சகோதரர் ராமதாஸை சந்தித்தார்.
கடலூர்:
பா.ம.க.வில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது:-
* ஆறுதலை தெரிவிக்கவே எனது சகோதரர் ராமதாஸை சந்தித்தார். இதில் எந்த அரசியலும் இல்லை.
* ராமதாஸ்- அன்புமணி மோதலால் ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிக்கிறது.
* பா.ம.கவில் நான் இணைய உள்ளதாக பத்திரிகைகள் கூறும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.
* பா.ம.க.வில் ஒரு போதும் இணையமாட்டேன் என்றார்.
- காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல.
- மக்களுக்காக களத்திற்கு வராதவர் விஜய்.
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழக உரிமைகள், தமிழ்த்தேசிய அரசியலை தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.
* த.வெ.க. தலைவர் விஜய் நிகழ்ச்சி குறித்து தான் சொல்லாததை திரித்து கூறுகிறார்கள். மாணவர்களுடன் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியை நான் கொச்சைப்படுத்தி பேசியதாக வதந்தி பரப்பப்படுகிறது.
* பெற்றோர் முன்னிலையில் ஒரு நடிகரை மாணவிகள் கட்டிப்பிடிப்பது தமிழ் கலாச்சாரம் அல்ல.
* கலையை கலையாக பார்க்காமல், நடிகரை தூக்கி வைத்து கொண்டாடுவது வருந்தத்தக்கது.
* விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை வாழ்த்து கூறினேன்.
* சினிமாக்காரர்களிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுக்க பெற்றோர் அனுமதிக்க கூடாது என்று கூறினேன்.
* தமிழராக விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை, ஆனால் வந்தவுடனேயே முதலமைச்சர் கனவுடன் வரக்கூடாது.
* தவெக தொண்டர்கள் என்னை மிரட்டுவதெல்லாம் வேண்டாம், அனைத்தையும் பார்த்துவிட்டு வந்தவன் நான்.
* காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல.
* காமராஜரோடு விஜயை ஒப்பிடுவதை ஏற்க முடியாது, மக்களுக்காக களத்திற்கு வராதவர் விஜய் என்றார்.
- சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
- ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக பயன்பட்டு வருகிறது.
மேலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும், விவசாயிகளும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 342 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50அடியை எட்டி உள்ளது.
மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வழிகளான வடவாறு, செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 47.50 அடி கொள்ளளவை எட்டியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 650 மில்லியன் கன அடியாக சரிந்த நிலையில் தொடர்ந்து நீர் வரத்தின் காரணமாக ஏரியில் நீர் வரத்து 2 வாரங்களில் உயர்ந்துள்ளது.
இன்னும் சில நாட்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தண்ணீரை விரயமாக்காமல் கவனமாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிதம்பரம் வைப்புச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பி.எச்.டி. படித்து வந்தேன்.
- உதவி பேராசிரியர் மீது 3 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். அந்த மாணவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே புகார் செய்தார். மேலும் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
அதில், நான் சிதம்பரம் வைப்புச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பி.எச்.டி. படித்து வந்தேன். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நோயியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ராஜா என்னுடன் பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டார். அதை அவர் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டி வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உதவி பேராசிரியர் ராஜா மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழரசி வழக்குப்பதிவு செய்தார். மேலும் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் உதவி பேராசிரியர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 ஆண்டுகளுக்கு பின்னர் கொடுக்கப்பட்ட இப்புகாரின் உண்மைத்தன்மையை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதே சமயம் இடைப்பட்ட காலத்திலும் பெண்ணுக்கு பேராசிரியர் தொந்தரவு கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
- ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர், மே. 29-
வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டு மன்னார் கோவில், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 857 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கீழணையில் இருந்த வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு இந்த ஏரி நிரப்ப்படும்.
மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தாலும் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும். கோடை வெயில் மற்றும் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர் மட்டம் 43.10 அடியாக சரிந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கீழணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 46.65 அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் 9 அடி நீர் மட்டம் உள்ள கீழணையில் தற்போது 3.6 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
- கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
- காட்டுமன்னார் கோவில் பகுதியில் வடவாற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் நிரம்பி செல்கிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்த ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 756 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கோடை காலத்தில் ஏரியில் குறைந்த அளவு நீர் இருந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனல் கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் வடவாறு வழியாக வினாடிக்கு 1,900கன அடி வீதம் அனுப்பப்படுகிறது. இதனால் காட்டுமன்னார் கோவில் பகுதியில் வடவாற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் நிரம்பி செல்கிறது.
கீழணையின் மொத்த உயரம் 9 அடியாகும். தற்போது 5.5 அடிக்கு நீர் உள்ளது. கல்லணையில் இருந்து கீழணைக்கு வரும் உபரி நீரில் 1,920 கன அடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வெளியேற்றப்படுகிறது.
வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50அடியாகும். இதில் தற்போது 44.10 அடி நீர் உள்ளது.
உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை சார்பில் வடவாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சிவானிஸ்ரீ தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த பிரபு-தேன்மொழி தம்பதியினர். தற்போது கேரளாவில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் மகள் சிவானிஸ்ரீ. இவர் விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
இந்நிலையில் இன்று காலை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சிவானிஸ்ரீ 500-க்கு 201 மதிப்பெண் எடுத்தால் மனஉளைச்சலில் இருந்த வந்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பார்த்தபோது சுயநினைவு இழந்து இறந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவானிஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பா அறுவடைக்கு பின்பு மேட்டூர் அணை தண்ணீர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்தது.
- பிப்ரவரி 14-ந் தேதி கீழணையில் நீர் மட்டம் முற்றிலும் வறண்ட நிலையில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலமாக 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கன அடியாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி வரை கீழணயில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.
இதனால் ஏரியின் முழு கொள்ளளவான 1465 மில்லியன் கன அடி தண்ணீர் நிரப்ப பட்டதால் ஏரி 2 முறை முழு கொள்ளளவை எட்டியது.
சம்பா அறுவடைக்கு பின்பு மேட்டூர் அணை தண்ணீர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்தது.
இதன் எதிரொலியாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது.அதே சமயம் பாசனத்திற்கும் தண்ணீர் தேவை இல்லாமல் போனது.
பிப்ரவரி 14-ந் தேதி கீழணையில் நீர் மட்டம் முற்றிலும் வறண்ட நிலையில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது. பின் ஏரியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் தினமும் சென்னை மக்களின் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது கடுமையான வெயில் கொளுத்துகிறது. கோடை வெயில் தாக்கத்தால் ஏரியின் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கன அடியில் தற்போது நீர் மட்டம் படிப்படியாக குறைந்து 600 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.
இருப்பில் உள்ள தண்ணீரை ஒரு மாதம் வரை மட்டுமே சென்னைக்கு அனுப்ப முடியும். அதே வேளையில் மேட்டூரில் 108அடி தண்ணீர் இருப்பு உள்ளதால் வழக்கம் போல் ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
இக்கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம் வேணுகோபாலன் சேவை தங்க விமானம், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கருட மகா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் முக்கிய வீதிகளில் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் முக்கிய வீதியில் சாமி வீதி உலா நடைபெற்று பின்னர் நிலையை வந்து அடைந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று இரவு பானக பூஜையும், நாளை மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், நாளை மறுநாள் காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
- பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது . இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் .
இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது . பின்னர் பல்லக்கில் சாமி , மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலை லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், புஷ்பயாகம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






