என் மலர்tooltip icon

    கடலூர்

    • கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
    • கொளஞ்சியப்பனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு 5-வது தெருவில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன்( 63). ஓய்வு பெற்ற என்.எல்.சி.ஊழியர். தற்போது நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பத்மாவதி (55 ).இருவரும் வேறொருவருடன் திருமணம் ஆகி பிரிந்தவர்கள்.

    கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஓரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக பத்மாவதிக்கு கொளஞ்சியப்பன் மீது சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட கொளஞ்சியப்பனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி நெய்வேலி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொளஞ்சியப்பன் நள்ளிரவில் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது பத்மாவதி தனது கணவனை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் கொளஞ்சியப்பன் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.

    மேலும் கணவர் உடலுடன் விடியற்காலை வரை பத்மாவதி வீட்டிலே இருந்துள்ளார். பின்னர் காலையில் தனது உறவினருக்கு போன் செய்து தனது கணவனை கொன்று விட்டதாக கூறியதையடுத்து உறவினர் அங்கு வந்து பார்த்தபோது கொளஞ்சியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது . இது குறித்து நெய்வேலி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்து நெய்வேலி டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கணவரை கொலை செய்த பத்மாவதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர். கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர்.
    • தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர்.

    சிதம்பரம்:

    பூலோக கைலாயம் என்ற ழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடை பெற்றது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

    முன்னதாக இன்று அதிகாலை சித்சபையில் இருந்து புறப்பட்ட சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர், தேர் நிலையான கீழரத வீதியில் தனித்தனியே அமைக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டனர்.

    சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர். திரளான பக்தர்கள் இன்று காலை 8 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதனை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர், அம்மன் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    முன்னதாக தேரின் முன்பு பெண்கள் கும்மியடித்த படியும், ரத வீதிகளில் கோலம் போட்டபடியும் சென்றனர். மேலும் பக்தர்கள் சிவன்-பார்வதி வேடமிட்டபடி நடனமாடி சென்றனர்.

    தேரானது கீழரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழி யாக மீண்டும் தேர்நிலையான கீழரத வீதிக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். பின்னர் இரவு 8 மணிக்கு சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

    நாளை ஜூலை 2-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சி யும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் சாமிகள் முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டு மல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஜூலை 3-ந் தேதி பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி ஞானகாச பிரகாசம் கோவில் குளத்தில் தெப்போற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கான பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில், தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த எருமனூர் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக குடிநீருடன் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் குடிப்பதற்கோ, சமையலுகோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் கடந்த ஒரு வார காலமாக முற்றிலும் குடிநீர் வழங்கப்படாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் விருத்தாசலம்-முகாசாபரூர் சாலையில் இன்று காலை திடீரென மறியல் போாரட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி குடிநீர் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனைதொடர்ந்து போலீசார் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கிராம மக்கள் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    • பெண் மீது மேலும் 5 பேர் புகார் அளித்துள்ளனர்.
    • 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    விருத்தாசலம்:

    சென்னை சூரப்பட்டு பகுதியை சேர்ந்த 58 வயதுள்ள ஒருவர் கறிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    3 மாதம் மட்டும் வேலை செய்துள்ளார். அப்போது கறிக்கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பழக்கத்தின் அடிப்படையில் அந்த பெண்ணுக்கு கறிக்கடைக்காரர் கடனாக ரூ.6 லட்சம் பணமும், 8 பவுன் நகையும், ½ கிலோ வெள்ளி பொருட்களும், வெள்ளி கொலுசு மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்.

    பின்பு இந்த பணத்தையும், நகையையும் திரும்ப கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் விருத்தாசலம் வந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த 20-ந்தேதி கறிக்கடைக்காரர் விருத்தாசலம் வந்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டபோது தர முடியாது என மறுத்து மகன்களுடன் சேர்ந்து திட்டி, தாக்கி, கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கறிக்கடைக்காரர் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே அந்த பெண் குறித்து கறிக்கடைக்காரர் கூறும்போது, 'எனக்கு கணவர் கிடையாது. உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் என கூறி ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்டு பணம், பொருட்களை வாங்கினார். என்னை பிரிந்த பிறகு விருத்தாசலம் வந்து விசாரித்தபோது தான் அவர் இதுபோன்று ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமும் பணம் மற்றும் நகைகள் வாங்கி ஏமாற்றி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது என்றார்.

    இதுபோன்று அந்த பெண் மீது மேலும் 5 பேர் புகார் அளித்துள்ளனர். அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஒருவரும் புகார் அளித்து உள்ளார். அதில் எனது தந்தையுடன் அந்த பெண் சில நாட்கள் மனைவியாக வாழ்ந்தார். அவரிடமும் நகை, பணமும் அபேஸ் செய்துள்ளார் என்று கூறி உள்ளார்.

    அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த ஒருவர் 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்ததாகவும், தன்னையும் திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் இருந்ததாகவும் அப்பெண் மீது புகார் அளித்துள்ளார்.

    அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த மற்றொருவரும் தன்னையும் திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் இருந்துள்ளார். அப்போது அவருக்கு ரூ.2 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்தும் வீடு வாடகைக்கு அட்வான்ஸ் ரூ.70 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

    அதுபோல் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனது கணவருடனும் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருந்ததால் கணவரை விவாகரத்து செய்து வாழ்க்கையை இழந்துள்ளேன் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்து ஏமாற்றி அவரை பிரிந்து வந்துள்ளதாகவும், இதுபோல் மொத்தம் 6 பேரை திருமணம் செய்து அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வாங்கியதாகவும் தற்போது அந்த பெண் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே உள்ள ஒரு டீ கடையில் வேலை செய்து வருவதாகவும், இதனால் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார்கள் கொடுத்தனர்.

    மேலும் புகார் கொடுத்தவர்களின் உறவினர்கள் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், நான் ஒருவரை மட்டும்தான் திருமணம் செய்தேன். மற்ற 5 பேரை திருமணம் செய்யவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். அவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தீவலூரை சேர்ந்தவர் பொன்னரசன். இவரது மகன் முத்தமிழ் நிலவன் (வயது12). இந்த ஊரில் சிலருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்தபோது சிறுவன் முத்தமிழ் நிலவன், அவனது தாய் முத்தழகி, 2 சகோதரிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரிய வந்தது.

    இதில் சிறுவன் முத்தமிழ் நிலவன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவனது தாய், அக்காள் ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இங்குள்ள குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    எனவே தீவலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சவுமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
    • ஒரே குடும்பமாக வாழ வேண்டும்.

    பா.ம.க.வில் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே நிலவி வரும் மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு முன்வைத்து வரும் ராமதாஸ், சவுமியாவையும் விமர்சித்து இருந்தார். இது அரசியல் மட்டுமின்றி ராமதாஸ் குடும்பத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடைபெற்ற ராமதாசின் 60-வது மணிவிழாவில் அன்புமணியின் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் சவுமியா அன்புமணி கலந்து மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து பேசிய சவுமியா அன்புமணி, திருமணமாகும் மணப்பெண்கள் மாமனார் மற்றும் மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இதையடுத்து, பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார். அவரை பா.ம.க. நிர்வாகிகள் வரவேற்றனர். கோவிலின் 2-ம்நிலை ராஜகோபுரம் அருகில் அவருக்கு அர்ச்சகர்கள் கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். திருவிளக்கு ஏற்றி, சிறப்பு அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்.

    • பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராம பஸ் நிறுத்தத்தில் சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் இலவச பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென பின்பக்க படிக்கட்டின் கீழ் உள்ள டயரில் இருந்து அதிக அளவில் புகையும் துர்நாற்றமும் ஏற்பட்டதால் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    பஸ் டயர் தேய்மானம் ஆகி உள்ளே உள்ள டியூப் ஆகியவை சூடு ஏறி புகை வந்துள்ளது என தெரிகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில் பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு பயணிகள் பழுது இல்லா பஸ்சை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.
    • விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திரு மஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் கொடியேற்றி பூஜைகளை நடத்தினார்.

    நாளை (24-ந் தேதி) வெள்ளி சந்திரபிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 25-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

    27-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனம், 28-ந் தேதி வெள்ளி யானை வாகனம், 29-ந் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.

    2-ந் தேதி அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது.

    அன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆனிதிருமஞ்சன தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. 4-ந் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.
    • சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கினர். பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.

    இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மூதாட்டி காயமடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். காடாம்புலியூரில் பதுங்கியிருந்த சுந்தரவேல் தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்தனர்.

    சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பாட்டாளி மக்கள் கட்சி விவகாரம் அவர்களது உட்கட்சி விவகாரம்.
    • தமிழ்நாட்டில் நீங்கள் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட முடியாது.

    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    சமக்ர சிஷ்யா அபியான் திட்டத்தின்படி ஆண்டுதோறும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை.

    தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் நாங்கள் இந்த நிதி தர மாட்டோம் என நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.

    இதனால் தமிழக கல்வித்துறைக்கு ஆயிரக்கணக்கான கோடி வந்து சேரவில்லை. அது தொடர்பாக எந்த நீதிபதியும் கருத்து சொல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.

    கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டும். இந்த அடிப்படையில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிற தி.மு.க. தலைவர் எங்களோடு உரையாடும்போது சூழலை கருத்தில் கொண்டு, கூட்டணியின் நலனையும் கருத்தில் கொண்டு தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம்.

    நாங்கள் இந்த கூட்டணியில் தான் இருப்போம். தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

    தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு.க. கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை என்ற கவலை அவர்களுக்கு இருக்கிறது.

    பாட்டாளிமக்கள் கட்சி விவகாரம் அவர்களது உட்கட்சி விவகாரம். இதில் நான் கருத்து செல்வதற்கு ஒன்றுமில்லை.

    தமிழ் இன உணர்வாளர்களை சனாதன சக்தியாக மாற்றுவதற்கு கவர்னர் முயற்சிக்கிறார். முருக பக்தர்களை பா.ஜ.க. ஆதரவாளராக மாற்றுவதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது.

    இவர்களுக்கான கோரிக்கை அரசியல் ஆதாயம் என்பது தான் மாநாட்டின் நோக்கம். அப்படித்தான் வள்ளுவரையும் சனாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    உங்கள் முயற்சி ஒருபோதும் பலிக்காது. தமிழ்நாடு ஏற்கனவே பண்படுத்தப்பட்ட, பக்குவப்பட்ட மண். முருக பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் மத சார்பற்றவர்களாக தான் இருப்பார்கள்.

    ஐயப்ப பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் மத சார்பற்றவர்களாகதான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் நீங்கள் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட முடியாது. ஆதாயம் தேட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேல் நாரியப்பனூரில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
    • கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.

    கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (75) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா வைரசால் உயிரிழந்த முதியவரின் உடல் சுகாதார ஊழியர்கள் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டார்.

    ×