என் மலர்
கடலூர்
சிதம்பரம்:
சிதம்பரம் கீழவீதியில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டல் நுழைவு வாசலில் தபால் அட்டை ஒன்று கிடந்தது. அது அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் முகவரிக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
மேலும் அதில் ‘சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
இது குறித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு சென்று, இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில், வெடிகுண்டு சோதனை நிபுணர் பாபு தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு விரைந்தனர். பின்னர், கோவிலில் ஆயிரங்கால் மண்டபம், தீர்த்தகுளம் என அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.
மேலும் மோப்ப நாய் ஜேக் உதவியுடன் கோவிலில் சோதனை செய்யப்பட்டது. இதில் வெடிகுண்டுகள், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அல்கொய்தா பெயரில் கடிதம் அனுப்பிய மர்ம வாலிபர் யார்? என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோவில் வளாகத்திலும், 4 தேரோடும் வீதிகளிலும் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிபவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
இந்த கடிதத்தை மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் யாராவது அனுப்பி இருக்கலாம் அல்லது கோவிலில் உள்ளவர்களுக்கும், சாமி கும்பிட வந்தவர்களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதை முன்விரோதமாக கொண்டுகூட இதுபோன்று மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளில் எழுத்து பிழைகள் அதிக அளவில் உள்ளன. அல்கொய்தா என்ற வார்த்தையை கூட தவறாக எழுதி, அதன் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இதை அலட்சியமாக விட முடியாது.
தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலை கண்காணித்து வருகிறோம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடைமைகள் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மிரட்டல் கடிதம் விடுத்த நபரை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 68), விவசாயி. இவரது மனைவி அம்புஜம் (60). இவர் அதே பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு சுந்தர்ராஜன் என்ற மகனும், ஜெயா, கற்பகம் என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகிவிட்டது.
காத்தமுத்துவுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி அம்புஜத்திடம் தகராறு செய்து வந்தார். காத்தமுத்து தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு காத்தமுத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். குடிபோதையில் அம்புஜத்திடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் 2 பேரும் வீட்டில் தூங்கினர். இன்று அதிகாலை 3 மணிக்கு காத்தமுத்து திடீரென விழித்தார்.மனைவி மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
தூங்கிக்கொண்டிருந்த அம்புஜத்தின் தலையில் உருட்டு கட்டையால் ஓங்கி அடித்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அம்புஜத்தை மீண்டும், மீண்டும் கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் அம்புஜம் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் காத்தமுத்துவின் வீட்டு முன்பு திரண்டனர். வீட்டை விட்டு வெளியே வந்த காத்தமுத்து அவர்களிடம் தனது மனைவியை யாரோ அடித்துக் கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர் என கூறினார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அம்புஜத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காத்தமுத்துவிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காத்த முத்துவிடம் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது மனைவியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையொட்டி காத்தமுத்துவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் சரியான சூழ்நிலை வரும் போது இணையும். எம்.ஜி.ஆர். மறைந்த போது அ.தி.மு.க.வில் 2 அணிகள் உருவாகியது. அதன்பிறகு 2 அணிகளும் சேர்ந்தது. அதேபோல் தற்போதும் 2 அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு தற்போது அவசியமும் இல்லை, தேவையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ரூ.100 கோடி செலவில் பல்வேறு நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் சகஜானந்தா மணிமண்டபம், திண்டுக்கல்லில் திப்புசுல்தான், கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தலைவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட 10 ஊர்களில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் உள்பட 3 ஊர்களில் சுழற்சி முறையில் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி கடலூரில் பொருட்காட்சி நடக்கிறது. இனி கடலூரில் ஆண்டுதோறும் தொடர்ந்து பொருட்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடியைச் சேர்ந்தவர் ஜெகஜீவன்ராம் (வயது 42). இவர் சித்த மருத்துவம் படித்து விட்டு கருவேப்பிலங்குறிச்சியில் மருந்தகத்தில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும், நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்படி விருத்தாசலம் தலைமை மருத்துவ அலுவலர் சாமிநாதன் தலைமையிலான டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள அந்த மருந்தகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஜெகஜீவன்ராம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் போலி டாக்டர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவக்குழுவினர் அங்கிருந்த மருந்துகள், ஊசி, மருத்துவ பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த மருந்தகத்திற்கு ‘சீல்’ வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜெகஜீவன்ராம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெக ஜீவன்ராமை கைது செய்தனர்.
சிதம்பரம்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து, அங்கு டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் தீவிர முயற்சி காட்டி வருகின்றனர். ஆனால், அதற்கு அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் சுடுகாடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். நேற்று அங்கு புதிதாக கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையறிந்த அந்த கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டனர்.
புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து டாஸ்மாக் கோட்ட அலுவலர் விஜயா, சிதம்பரம் தாசில்தார் மகேஷ், டாஸ்மாக் வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். டாஸ்மாக் கடைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து மதுபாட்டில்களும் திருப்பி எடுத்து செல்லப்பட்டது.
நெய்வேலி அருகே உள்ளது பெரிய பாப்பன்குளம். இந்த பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் உக்கிரவேல்.
நேற்று இவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது வெங்கடேசன் ஆபாசமாக உக்கிரவேலை பேசினார். இதை அறிந்த உக்கிரவேலுவின் நண்பர்கள் பாண்டியன், தர்மராஜ் ஆகியோர் வெங்கடேசன் வீட்டுக்கு சென்றனர்.
எப்படி திட்டலாம் என்று கூறி வெங்கடேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
தாக்குதலில் காயமடைந்த வெங்கடேசன் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியன், தர்மராஜை தேடி வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சனை இருக்கிறது. உள்கட்சி பிரச்சனை உருவாகுவதற்கோ, உருவாக்கி செயல்படுத்துவதிலோ பாரதிய ஜனதாவின் பங்கு இருக்கிறது. கட்சி 2 ஆக பிரிவது, மீண்டும் இணைவது அனைத்திலும் பாரதிய ஜனதா தலையீடு உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற அ.தி.மு.க.வை எப்படி பகடைகாயாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.

ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமை ஆக்க வேண்டும் அல்லது அவரது சொத்துகளுக்கு யாராவது உரிமை கொண்டாடினால், அது பற்றி உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.
தமிழக அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல் வறட்சியில் இருந்து முற்றிலுமாக தமிழகத்தை மீட்பதற்கு, மத்திய அரசிடம் உரிய நிதியை கோரி, விவசாயிகளை காப்பற்றுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் தீர்க்காவிட்டால் மீண்டும் அனைத்துக்கட்சிகளும் ஒன்று கூடி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்தால் கூட்டணி ஏற்படுமா? என்று கேட்கப்படுகிறது. கூட்டணிக்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கடலூர் வந்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்கடைகளை அரசு எங்கும் திறக்கக்கூடாது. மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மக்களுடன் இணைந்து த.மா.கா. போராடும்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பக்கூடிய அளவில் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு தான் தமிழகம் முழுவதும் உள்ளது. இதனை சரிசெய்ய தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் குடிநீர் பிரச்சனை ஏற்படாதவகையில் மின்சாரம் சரிசெய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைக்கு போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை கட்டாமல் இருந்தால் ஜப்தி நடவடிக்கை இருக்க கூடாது. மேலும் விவசாயிகள் இறந்ததற்கு வறட்சி மட்டும் காரணமில்லை. சொந்த பிரச்சனையும் காரணம் என நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது விவசாயிகளை இழிவுபடுத்தும் செயலாகும்.
எனவே தமிழக அரசு தங்களது அறிக்கையை மாற்ற வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள அன்னதானம்பேட்டை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை அமைந்திருந்தது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் பஸ் நிலையத்தில் நிற்கும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்து வந்தனர்.
இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கிராம மக்கள் இந்த டாஸ்மாக் கடைமுன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்து சூறையாடினர்.
இதையடுத்து அவர்கள் டாஸ்மாக் கடையின் முன்பு கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வடலூர் போலீசார் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
டாஸ்மாக் கடையை சூறையாடியது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள செல்லஞ்சேரியை சேர்ந்தவர் ஏழுமலை. அரசு பஸ் டிரைவர். இவர் காரணப்பட்டு கிராமத்தில் இருந்து கடலூர் நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார்.
உடலப்பட்டு கிராமத்தில் பஸ் வந்த போது, அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 26), அன்பு(25) ஆகியோர் ரோட்டில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
இதனால் டிரைவர் ஏழுமலை பஸ்சை நிறுத்தினார். ரோட்டில் இருந்த 2 பேரையும் எழுந்து செல்லுமாறு கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஏழுமலையை தாக்கினர். பின்னர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார், அன்பு ஆகியோரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குமராட்சி அருகே கீழபருத்துக்குடியில் புகழ்பெற்ற உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமனிதர்கள் இந்த கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன்னாலான சாமி சிலையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தகொள்ளை குறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
வெள்ளூர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கீழாங்காடு பகுதியை சேர்ந்த வீரப்பாண்டியன்(36) என்பதும் உத்திராபதீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலையை திருடிய வெள்ளூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
அந்த சிலையை போலீசார் மீட்டு வீரபாண்டியனை கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் இவர் சென்னையில் நடந்த அலுவலக உதவியாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஊருக்கு திரும்பி வந்த போது, திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரின் ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பிரகாசுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதை கண்டறிந்தனர்.
பின்னர், ஆஸ்பத்திரியில் அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பன்றிக்காய்ச்சலால் பலியான பிரகாசுக்கு சாந்தி (36) என்ற மனைவியும், கிஷோர் (9) என்ற மகனும், சாருமதி (4) என்ற மகளும் உள்ளனர்.






