என் மலர்tooltip icon

    கடலூர்

    மழைவேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் வருண ஜெபம் நடைபெற்றது.
    சிதம்பரம்:

    மழைவேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் வருண ஜெபம் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை குளத்தில் பொது தீட்சிதர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.

    பின்னர் குளத்திற்குள் இறங்கிய தீட்சிதர்கள், வேத மந்திரங்களை உச்சரித்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் இந்த பூஜை நடைபெற்றது.

    இதில் தீட்சிதர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பூஜை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
    நெய்வேலி அருகே காண்டிராக்டர் மனைவியை கத்தியால் குத்தி ரூ.2 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த தென்குத்து பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 60). காண்டிராக்டர். இவரது மனைவி மணிமேகலை (55). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர் வீட்டிற்குள் திடீரென்று உள்ளே புகுந்தனர். அவர்களில் 2 பேர் சுந்தரமூர்த்தியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். நகை, பணத்தை தருமாறு கூறினர். மணிமேகலை அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி தறுமாறு எச்சரித்தனர். அதற்கு அவர் மறுத்தார். உடனே மணிமேகலையை கத்தியால் சரமாரியாக குத்தினர். அவர் அலறினார். அவர் கையிலிருந்து ரத்தம் கொட்டியது.

    பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி கொலுசு, கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். படுகாயமடைந்த மணிமேகலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டனர். தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்றுநின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கடலூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கொள்ளை நடந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. முகமூடி கொள்ளையர்களை  தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளைசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கிருமாம்பாக்கம் அருகே தாறுமாறாக வந்த கார் மோதியதில் எல்.ஐ.சி. முகவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    பாகூர்:

    கடலூர் அண்ணா நகர் ஆர்.பி.எஸ். தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). எல்.ஐ.சி. முகவர். நேற்று இரவு இவரும், இவரது நண்பரான கடலூர் மஞ்சக்குப்பம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரும் புதுவை சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    கிருமாம்பாக்கம் அருகே காட்டு குப்பம் என்ற இடத்தில் வந்த போது, எதிரே தாறுமாறாக வந்த கார் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாண்டியன் உடல் நசுங்கி இறந்து போனார். கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேவன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெய்வேலி அருகே சில நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோவிலில் திருடு போன ஐம்பொன் சிலையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே கொள்ளிருப்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 9ந்தேதி இந்த கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான மாரியம்மன் சிலையை திருடிச்சென்றனர்.

    இதுகுறித்து தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், கொள்ளிருப்பில் இருந்து மேலக்குப்பம் செல்லும் வழியில் பழனிவேல் என்பவரது நிலத்தின் ஓரத்தில் அம்மன் சிலை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்தவர்கள் தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த சிலை கொள்ளிருப்பு மாரியம்மன் கோவிலில் திருடுப்போன ஐம்பொன் சிலை என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிலையை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    திருடி நிலத்தில் வைத்துவிட்டு சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் போக்குவரத்து பணிமனையில் ஓய்வூதியத்தொகை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் வன்னியர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 68). இவர் கடலூர் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை கடலூர் இம்பிரீயல் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு வந்த கலியமூர்த்தி தனக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை. இதனால் மனமுடைந்த கலியமூர்த்தி போக்குவரத்து பணிமனையின் முதல் மாடியில் உள்ள 20 அடி உயரமுள்ள மின் விளக்கு டவரில் ஏறினார். பின்னர் தனக்கு ஓய்வூதியம் வழங்காவிட்டால் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

    அப்போது அங்கிருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலியமூர்த்தியிடம் உங்கள் கோரிக்கை நிறைவேற்ற அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துவோம் என கூறினார். இதைத் தொடர்ந்து கலியமூர்த்தி மின்விளக்கு டவரில் இருந்து கீழே இறங்கினார்.

    அவரிடம் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காட்டுமன்னார்கோவில் அருகே தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் கிருஷ்ணபிரியா(வயது 17). இவர் புத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

    தேர்வு எழுதிவிட்டு, முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதில் தமிழ் பாடத்தில் கிருஷ்ணபிரியா தோல்வி அடைந்திருந்தார்.

    இதனால் மனமுடைந்த கிருஷ்ணபிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் கிருஷ்ணபிரியா உடல் கருகியது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ணபிரியா இறந்து விட்டதாக கூறினர். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

    இது குறித்து புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி அருகே ஆட்டோவில் தவறவிட்ட ரூ.40 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை சப்-இன்ஸ்பெக்டர் பாராட்டி கவுரவித்தார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகரை சேர்ந்தவர் மோகன் ஆட்டோ டிரைவர். இவருக்கு சொந்தமான ஆட்டோவில் பண்ருட்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டைக்கு சென்றார். அப்போது இவரது ஆட்டோவில் தொரப்பாடியை சேர்ந்த நதியா என்பவர் பயணம் செய்தார்.

    புதுப்பேட்டையில் இறங்கி நதியா வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் பண்ருட்டி வந்த ஆட்டோ டிரைவர் மோகன் ஆட்டோவில் ஒரு பை அனாதையாக கிடைந்ததை பார்த்தார். அதை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது. இந்த பணத்தை ஆட்டோ டிரைவர் மோகன் பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தார்.

    பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி விசாரணை நடத்தினார். அதில் ஆட்டோவில் பயணம் செய்த தொரப்பாடியை சேர்ந்த நதியா என்பவரது பணம் என தெரியவந்தது. உடனடியாக பணத்திற்கு உரியவரான நதியாவிடம் ரூ.40 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி வழங்கினார். நேர்மையாக நடந்துகொண்டு பணத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி பாராட்டி கவுரவித்தார்.
    பண்ருட்டி அருகே ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக பேசிக்கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் தாமோதரன்(30) ஆட்டோ டிரைவர். இவர் இவருக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி சென்றார். அப்போது தொரப்பாடி பகுதியில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஆட்டோ மோதியது.

    இதனால் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(47) என்பவருக்கும் ஆட்டோ டிரைவர் தாமோதரனுக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. தாமோதரனுக்கு ஆதரவாக தொரப்பாடியை சேர்ந்த சரவணன்(38), பாலமுருகனுக்கு ஆதரவாக கோட்டலாம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி(30) ஆகியோரும் ரகளையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் அசிங்கமாக திட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக பேசிக்கொண்டிருந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா ரகளையில் ஈடுபட்ட தாமோதரன், பாலமுருகன், சரவணன், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    விருத்தாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையின் தகர கொட்டகையை பெண்கள் ஆவேசத்துடன் அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் எடுத்து உடைத்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தொரவளூரில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

    இந்த நிலையில் விருத்தாசலம்-மே.மாத்தூர் சாலையில் கச்சிபெருமாநத்தத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக தகர கொட்டகை அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் எதிர்ப்பை மீறி நேற்று அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த கச்சிபெருமாநத்தம் பகுதியை சேர்ந்த பெண்கள் உருட்டு கட்டைகளுடன் அந்த கடைக்கு திரண்டு வந்தனர்.

    புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையின் தகர கொட்டகையை ஆவேசத்துடன் அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் எடுத்து உடைத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பி ஓடினர்.

    மேலும் விருத்தாசலம்- மே.மாத்தூர் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்தால், கடையை அடித்து நொறுக்குவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரியில் இருந்து காரில் கடத்திய 444 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலூர் ஆல்பேட்டையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெபஸ்டீன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் சீல் வைக்கப்பட்ட அட்டைப் பெட்டிகள் இருந்தது.

    அதை திறந்து பார்த்த போது புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 444 மதுப்பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த கார் டிரைவர் மணிவண்ணன் (வயது 32), என்பதும் மற்றொருவர் சுந்தரசேகர் (27) என்பதும் தெரிய வந்தது.

    சுந்தரசேகர் தனது உறவினருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்கு தேவையான பொருட்களை புதுவையில் இருந்து காரில் எடுத்து வர வேண்டும் என்று கூறி கடலூரில் இருந்து மணிவண்ணனை புதுவைக்கு அழைத்து சென்ற விவரமும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காரில் கடத்தி வரப்பட்ட 444 மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விளையாடிக்கொண்டிருந்த போது மாணவனை புதருக்குள் இருந்த பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தான்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் ஆனந்த் மகன் ஹரிஹரன் (வயது 11). இவர் அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் தன்னடைய நண்பர்களுடன் அதேப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்.

    அப்போது பந்து புதருக்குள் ஓடி விழுந்தது. ஹரிஹரன் சென்று பந்தை எடுத்தப்போது புதருக்குள் இருந்த பாம்பு கடித்துள்ளது. உடனே அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

    புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் அருகே கார்-பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சென்னை மணமகனின் பெற்றோர் பலியாயினர். திருமணம் முடிந்து மணமக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் சுப்பிரமணியன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி புவனேஸ்வரி(55). இவர்களது மகன் சிவராமன்(27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சிவராமனுக்கும், கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவரும், கடலூர் மாவட்ட முன்னாள் தீயணைப்புத்துறை அதிகாரியுமான குமாரசாமி மகள் சொர்ணலதா(25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி சிவராமனுக்கும், சொர்ணலதாவிற்கும் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணி அளவில் பாலசுப்பிரமணியனும், புவனேஸ்வரியும் மணமக்களுடன் சாமி கும்பிடுவதற்காக மயிலம் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். காரை பாலசுப்பிரமணியன் ஓட்டினார்.

    கடலூர்-புதுச்சேரி சாலையில் பெரியகாட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது காரும், புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் சுற்றுலா பஸ்சும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கார் அப்பளம்போல நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இதில் மணமகனின் தந்தை பாலசுப்பிரமணியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மணமகனின் தாயார் புவனேஸ்வரி, மணமக்கள் சிவராமன்-சொர்ணலதா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இந்த விபத்து காரணமாக மோதிக் கொண்ட இரு வாகனங்களும் நடுரோட்டில் நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவலின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காரின் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த புவனேஸ்வரி, சிவராமன், சொர்ணலதா ஆகிய 3 பேரையும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். மேலும் மணமக்கள் சிவராமன், சொர்ணலதா ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய காரையும், பஸ்சையும் கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து சீரானது. விபத்து குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் முடிந்ததும் மணமக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் மணமகனின் பெற்றோர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×