என் மலர்
செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து, அங்கு டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் தீவிர முயற்சி காட்டி வருகின்றனர். ஆனால், அதற்கு அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் சுடுகாடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். நேற்று அங்கு புதிதாக கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையறிந்த அந்த கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டனர்.
புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து டாஸ்மாக் கோட்ட அலுவலர் விஜயா, சிதம்பரம் தாசில்தார் மகேஷ், டாஸ்மாக் வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். டாஸ்மாக் கடைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து மதுபாட்டில்களும் திருப்பி எடுத்து செல்லப்பட்டது.






