என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்ற கணவர்
    X

    நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

    சிதம்பரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்துக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 68), விவசாயி. இவரது மனைவி அம்புஜம் (60). இவர் அதே பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு சுந்தர்ராஜன் என்ற மகனும், ஜெயா, கற்பகம் என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகிவிட்டது.

    காத்தமுத்துவுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி அம்புஜத்திடம் தகராறு செய்து வந்தார். காத்தமுத்து தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு காத்தமுத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். குடிபோதையில் அம்புஜத்திடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் 2 பேரும் வீட்டில் தூங்கினர். இன்று அதிகாலை 3 மணிக்கு காத்தமுத்து திடீரென விழித்தார்.மனைவி மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    தூங்கிக்கொண்டிருந்த அம்புஜத்தின் தலையில் உருட்டு கட்டையால் ஓங்கி அடித்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அம்புஜத்தை மீண்டும், மீண்டும் கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் அம்புஜம் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் காத்தமுத்துவின் வீட்டு முன்பு திரண்டனர். வீட்டை விட்டு வெளியே வந்த காத்தமுத்து அவர்களிடம் தனது மனைவியை யாரோ அடித்துக் கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர் என கூறினார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அம்புஜத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காத்தமுத்துவிடம் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காத்த முத்துவிடம் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது மனைவியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையொட்டி காத்தமுத்துவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×