என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் வடலூர் பஸ்நிலையத்தில் இன்று காலை பெண்ணை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஜான் விக்டர். இவர் ராணுவத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பிலோமினா(வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிலோமினா வடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினமும் நெய்வேலி டவுன் ஷிப்பில் இருந்து வடலூருக்கு தனியார் பஸ் மூலம் சென்று வந்தார். அப்போது பிலோமினாவுக்கும் அந்த பஸ் டிரைவர் சுந்தரமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் பஸ்சில் செல்லும் போது பிலோமினா பஸ் டிரைவர் சுந்தரமூர்த்தியிடம் பேசி வந்தார். இதை தவறாக புரிந்து கொண்ட சுந்தர மூர்த்தி, பிலோமினாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில் சுந்தர மூர்த்தி அவரது காதலை பிலோமினாவிடம் தெரிவித்தார். அதை ஏற்க பிலோமினா மறுத்து விட்டார்.

    இதை தொடர்ந்து பிலோமினா, சுந்தரமூர்த்தியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் பிலோமினா மீது ஆத்திரம் அடைந்த சுந்தர மூர்த்தி இன்று காலை வடலூர் பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பிலோமினாவின் வருகைக்காக காத்திருந்தார்.

    பிலோமினா பஸ்சில் இருந்து இறங்கி அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற சுந்தரமூர்த்தி பிலோமினாவை தன்னிடம் பேசுமாறு கூறி வற்புறுத்தினார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். உடனே சுந்தர மூர்த்தி தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை பிலோமினா மீது ஊற்றி தீ வைத்து உயிருடன் எரித்துகொல்ல முயன்றார்.

    தீ பிலோமினா உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிலோமினா உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    இருப்பினும் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுந்தர மூர்த்தியை பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து வடலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திட்டக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை கண்டித்து, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அடுத்த ஈ.கீரனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு சுற்றிலும் உள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியர் மாணவ, மாணவிகளிடம் சாதியை குறிப்பிட்டு பாகுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவ, மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன் பள்ளிக்கு நேற்று ஒன்று திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளிடம் பாகுபாடு காட்டிம், ஆபாசமாக பேசி வரும் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கோ‌‌ஷம் எழுப்பினர்.

    தகவலறிந்த திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு இருக்கிறது. இதை அவர்கள் மாணவ, மாணவிகளிடம் காண்பித்து வருகின்றனர். இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே பிரச்சினைக்குரியவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இது குறித்து தாசில்தார் செந்தில்வேலன் விருத்தாசலம் மாவட்ட கல்வி அதிகாரி பாண்டிதுரைக்கு போன் மூலம் தெரியப்படுத்தினார். அப்போது அவர், தான் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் தாசில்தார் செந்தில்வேலன் கூறியதை அடுத்து, அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பரங்கிப்பேட்டை அருகே கிராம தலைவரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் பாலையா (வயது 54). கிராம தலைவர் ஆவார். அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பாலையா பணம் வசூலித்து கொண்டிருந்தார்.

    இதற்கு அகரம் காலனியை சேர்ந்த சதீ‌‌ஷ் (24) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பாலையாவுக்கும், சதீசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சதீ‌‌ஷ், தான் வைத்திருந்த கத்தியால் பாலையாவை சரமாரியாக வெட்டினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பாலையாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அவர் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து சதீ‌‌சை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்த விபத்தில் 50 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினசரி கல்லூரி பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.

    அதன்படி இன்று காலை சேத்தியாத்தோப்பில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி கல்லூரி பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

    இந்த பஸ் சாஸ்தா வட்டம்- நாச்சியார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த 50 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் வேதனையால் அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். காயம் அடைந்த மாணவ-மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் நாளை கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
    கடலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4, குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து தேர்வில் பல அதிரடி மாற்றங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்வில் கடலூர் அருகே உள்ள கிராமமான கிழக்கு ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், இதில் முறைகேடு நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார் எழுந்தது.

    இதையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

    அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வு சம்பந்தமாக விசாரணைக்கு நாளை(புதன்கிழமை) காலை 11 மணிக்கு கடலூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 பேரும், கடலூர் கிழக்கு ராமாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தேர்வுக்கு முன்னதாகவே பல லட்சம் ரூபாய் கொடுத்து வினாத்தாளை வாங்கி, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இவர்களில் ஒரு குடும்பத்தில் தலா 2 பேர் வீதம் 3 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டை சேர்ந்த தயாநிதி, பத்திரக்கோட்டையை சேர்ந்த தவமணி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் சில அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது.

    இந்த நிலையில் தற்போது குரூப்-2 தேர்வு முறைகேடு தொடர்பாக புகார் எழுந்து இருப்பதால், ஏற்கனவே குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைதானவர்கள், தொடர்புடையவர்களாக கூறப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புகார் கூறப்பட்ட 12 பேரும் ஒரே கிராமத்தில் ஒரே தெருவை சேர்ந்தவர்கள் என்பதால் இதில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் கூறப்பட்ட புகாரின் உண்மை தன்மையை அறிவதற்காக குறிப்பிட்ட 12 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருக்கிறோம். விசாரணையின் முடிவில் தான் அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்களா? அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது தெரியவரும். குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 12 பேரும் பத்திரப்பதிவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, நிலஅளவைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இருந்து வருகிறார்கள் என்றார்.


    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மந்தாரக்குப்பம்:

    சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம் செய்தனர். அப்போது அவர்கள் சாலை மறியல் செய்ய முயற்சித்த போது போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

    இந்தசம்பவம் தமிழக முழுவதும் எதிரொலித்தது. போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது.

    முஸ்லிம்களுக்கு ஆதரவாக தி.மு.க. கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதேபோல் வியாபார சங்கத்தினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் சங்கத்தினர், தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று (17-ந் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று வியாபாரிகள் மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் செய்தனர். பெரியாக்குறிச்சியில் இருந்து மந்தாரக்குப்பம் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் முழுவதும் இன்று மூடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜெயப்ரியா பஸ் நிறுத்தம் பகுதியில் இன்று முஸ்லிம் அமைப்பினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர்.

    பண்ருட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண் தலையில் கல்லை தூக்கிபோட்டு கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேலு (வயது25) மெக்கானிக்காக உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.இவர்கள் பண்ருட்டி அன்வர்ஷா நகர் 4-வது தெருவில் வசித்து வந்தார்கள்.

    கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று இரவும் வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குமரவேல் ஆத்திரம் அடைந்து மனைவியை கொல்ல நினைத்தார்.

    இரவில் குழந்தைகள் தூங்கிய நேரத்தில் இரும்புகம்பியால ராஜேஸ்வரி தலையில் அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.

    ஆனால் குமரவேலுக்கு கோபம் தீரவில்லை. வீட்டில் கிடந்த ஆட்டு உரல் கல்லை எடுத்து ராஜேஸ்வரி தலையில் போட்டார். இதில் தலை சிதைந்து அவர் இறந்தார்.

    அதன்பின்னர் இரவோடு இரவாக குழந்தைகளை அழைத்து கொண்டு குமரவேலு அங்கிருந்து தலைமறை வாகி விட்டார்.

    இன்று காலை வீட்டில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு தலை சிதைந்தபடி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ராஜேஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

    குமாரவேலு மெக்கானிக் தொழில் செய்து வந்ததோடு சொந்தமாக கார் ஓட்டி வருகிறார். இவர் அடிக்கடி இரவு நேரங்களில் வாடகைக்கு சவாரி செல்வார். அப்போது ராஜேஸ்வரி பல வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவரம் குமாரவேலுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் ராஜேஸ்வரி இந்த தொடர்பை விடவில்லை.

    காதலர் தினத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்று வந்து உள்ளார். இந்த விவரம் தெரிய வரவே குமாரவேலு தனது மனைவி ராஜேஸ்வரியை மீண்டும் எச்சரித்தார். இதனால் வீட்டில் பிரச்சினை எழுந்தது. எனவே ராஜேஸ்வரியை கொன்று விட தீர்மானித்து  எண்ணத்தை நிறைவேற்றி உள்ளார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    குழந்தைகளுடன் தப்பி ஓடிய குமரவேலுவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியில் நடந்த விழாவில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறை தண்டனையில் உள்ளனர். இதில் தற்போது உச்சநீதிமன்றம் தமிழக  கவர்னர் முடிவின்படி 7 பேர் விடுதலை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு உள்ளது.

    இந்த 7 பேர் விடுதலை சம்பந்தமான முடிவை கவர்னர் 15 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    தற்போது தமிழக அரசு மீண்டும் வாய்தா கேட்டு உள்ளது. மேலும் அவ்வப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அரசு சட்டத்தில் இடமில்லை என தமிழக அரசு சார்பில் கூறி வருகின்றனர். இது மட்டுமின்றி உச்சநீதிமன்றம் கூறியும் கவர்னர் நீண்ட அவகாசம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேரடியாக கவர்னரை வலுக்கட்டாயமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது.

    அதற்கு மாறாக தமிழக அரசு அழுத்தம் தந்து இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக தலையிட முடியாது என்பது மட்டும் தெரிவித்து வருகிறார்கள். அது ஏன் என தெரியவில்லை.

    நாங்கள் சட்டத்தின்படி தான் இதுவரை இந்த வழக்கை அணுகி வருகின்றோம். உச்சநீதிமன்றம் 15 நாளில் முடிவு சொல்ல வேண்டுமென அறிவுறுத்தலின்படி கவர்னர் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து தலைவர்களும் பேரறிவாளன் உள்பட பலரை விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    இதன் மூலம் தமிழக முதல்வர், கவர்னரை அணுகி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பலமுறை முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சர், மத்திய அமைச்சர் என அனைவரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக முடிவு தெரிந்த பிறகு அனைவரையும் நேரில் சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திட்டக்குடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் மாணிக்கம், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மக்காச்சோளம் பயிர் அறுவடை பணி நடைபெற்றது. இதையடுத்து இரவு 10 மணியளவில் அறுவடை செய்த மக்காச்சோள பயிரை மாணிக்கம் மனைவி அழகம்மாள்(வயது 60) மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களான அதேஊரை சேர்ந்த தங்கராசு மகன் பெரியசாமி(46), பச்சமுத்து மனைவி சுதா(35) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணிக்கம் வீட்டில் உள்ள ஒரு அறையில் கொட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து பயங்கர சத்தத்துடன் அழகம்மாள் உள்பட 3 பேர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். பெரியசாமி, சுதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வீட்டு சுவர் இடிந்து விழுந்த இடத்தை திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதோடு, அழகம்மாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
    திட்டக்குடி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி அழகம்மாள் (வயது 60), உறவினர்கள் சுதா (35), பெரியசாமி (48). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் சோளம் பயிரிட்டு இருந்தனர்.

    அறுவடை செய்த சோளத்தை வீட்டுக்கு கொண்டுவந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். அங்கு வந்த வியாபாரிகள் இன்னும் சில நாட்கள் வைத்திருந்தால் விலை கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு அழகம்மாள் வீட்டில் உள்ள ஒரு அறையில் சோளத்தை கொட்டிவைத்தனர். பின்னர் 3 பேரும் அருகில் உள்ள அறையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர் ஒருபகுதி திடீரென இடிந்து 3 பேர் மீது விழுந்தது. இதில் அவர்கள் படுகாயத்துடன் கூச்சல் போட்டனர்.

    சத்தம் கேட்டு கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அழகம்மாள், பெரியசாமி, சுதா ஆகியோர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது.

    இங்கு வந்து சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தங்களது கோரிக்கைளை துண்டு சீட்டில் எழுதி அங்கு உள்ள மரத்தில் கட்டுவார்கள். கோரிக்கை நிறைவேறியதும் மீண்டும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல அரசியல் கட்சி தலைவர்களும் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள்.

    இன்று காலை மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் விருத்தாசலம் வந்தார். கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்ற அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

    அப்போது தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். தொடர்ந்து 15 நிமிடங்கள் வழிபட்ட அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அவருடன் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்,ஏ. உள்பட பலர் வந்திருந்தனர். 

    நடிகர் ரஜினியை பற்றி திமுகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடந்தது.

    மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் இளைஞரணி பொறுப்பை ஏற்கும் போது பல சவால்கள் இருந்தன. அவற்றை உங்கள் உதவியோடு முறியடித்தேன். நமக்கு 10 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க தலைமை இலக்காக நிர்ணயித்தது. ஆனால், 2 மாதத்தில் 8 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம்.

    அந்த இலக்கை 50 லட்சமாக மாற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் உத்தரவிட்டுள்ளார். அந்த இலக்கை அடைவதற்கு என்னோடு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    திராவிட இயக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் இளைஞர்களை மட்டுமே புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தகுதியான இளைஞர்களை சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நமது பணி சிறப்பாக இருந்தது. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் 60 சதவீத வெற்றியை பெற்றுள்ளோம்.

    உள்ளாட்சி தேர்தலில் இளைஞரணிக்கு குறிப்பிட்ட அளவே போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞரணியினருக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க கட்சி தலைமையிடம் வலியுறுத்துவோம்.

    நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே ஒருவர் அரசியலுக்கு வருகிறேன்... வருகிறேன்... என்று சொன்னார். ஆனால், அவர் இன்று வரை வரவில்லை.

    அவரை பற்றி தி.மு.க. வினர் யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் பாரதிய ஜனதா துணையுடன் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிட தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×