என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி(வயது 45). இவர்களது மகன் கவியரசன். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். கொள்ளுக்காரன்குட்டையில் தனியார் பள்ளி அருகில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி, இறங்கியபோது ஆதிலட்சுமி தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் படுகாயமடைந்த ஆதிலட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து கணவரும், அவரது மகனும் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடனுக்கு சிக்கன் கொடுக்காததால் கோழிக்கறியில் கொரோனா வைரஸ் இருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2,700-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை உயிர்பலி ஏற்படவில்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பற்றி பீதி நிலவுகிறது. வெளிநாடுகளில் இருந்து கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் வந்தவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள இறைச்சி கடையில் பிராய்லர் இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி ஏற்பட்டது.

    நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள தனியார் சிக்கன் சென்டரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பாண்டி என்பவர் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.

    இந்த தகவலால் நெய்வேலியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். மக்கள் கோழி இறைச்சி கடை பக்கம் செல்லவில்லை. மேலும் வெளியூர்களில் உள்ளவர்கள் அங்கிருந்து செல்போன் மூலம் நெய்வேலியில் உள்ள உறவினர்களிடம் விசாரிக்க தொடங்கினர்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் பற்றிய தகவல் வாட்ஸ் அப்பில் திரும்ப திரும்ப வந்ததால் தனியார் கோழி இறைச்சி கடை உரிமையாளர் பக்ருதீன் அலிமுகமது வியாபாரம் பாதிக்கப்பட்டது. அவர் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் அவர் புகார் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 20 ஆண்டுகளாக நெய்வேலி வட்டம் 29-ல் சூப்பர் பஜாரில் சிக்கன் கடை நடத்தி வருகிறேன். எனது கடைக்கு நெய்வேலி புதுநகர் 21-வது வட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (வயது15) அடிக்கடி வந்து சிக்கன் வாங்கி செல்வான்.

    கடந்த சில நாட்களாக சிக்கனை கடனுக்கு கொடுக்கும்படி சக்திவேல் என்னிடம் கேட்டான். நான் கடன் கொடுக்கவில்லை. எனவே என் கடை மீது களங்கம் ஏற்படுத்த நடிகர் கவுண்டமணி பாணியை சக்திவேல் கடைபிடித்தான்.

    உதயகீதம் சினிமா படத்தில் நடிகர் கவுண்டமணி தேங்காய் விலை அதிகமாக இருந்ததால் தேங்காயில் வெடிகுண்டு உள்ளதாக வதந்தி பரப்புவார். இதனால் தேங்காய் விலை வீழ்ச்சியடையும், அதேபோன்று என் கடையில் உள்ள சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸ் அப்பில் சக்திவேல் தவறான தகவலை பரப்பினான்.

    இந்த வதந்தியால் எனது சிக்கன் கடை வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனது வாடிக்கையாளர்களும், குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சிறுவன் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து நெய்வேலி தெர்மல் போலீசார் சக்திவேலை கைது செய்தனர். இவர் மீது தவறான தகவலை பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைதான சிறுவன் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
    பண்ருட்டி அருகே மாணவர்களை டீ வாங்கி வரும்படி கூறிய தலைமை ஆசிரியரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூங்குணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு பூங்குணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சீனுவாசன் பணிபுரிந்து வந்தார். இவர் வகுப்பு நேரத்தில் மாணவர்களை கடைக்கு அனுப்பி டீ வாங்கி வருமாறு கூறுவார். அதன்படி சம்பவத்தன்றும் அவர் சில மாணவர்களை டீ வாங்கி வரும்படி கூறினார். மாணவர்கள் கடைக்கு சென்று டீ வாங்கி வருவதை யாரோ சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர்.

    இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.

    இதையடுத்து இந்த விவகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரோஸ் நிர்மலாவின் பார்வைக்கு சென்றது.

    இது குறித்து உரிய விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். அதன்படி வட்டார கல்வி அதிகாரிகள், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில் தலைமை ஆசிரியர் சீனுவாசன் மாணவர்களை அவ்வப்போது கடைக்கு அனுப்பி வைத்து டீ வாங்கி வர செய்தது உறுதியானது.

    இது தொடர்பான விசாரணை அறிக்கையை மாவட்ட கல்வி அதிகாரி சுந்தரமூர்த்தியிடம் வட்டார கல்வி அதிகாரிகள் வழங்கினர். அதன் பேரில் தலைமை ஆசிரியர் சீனுவாசனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அதிகாரி சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார்.
    கடலூர் பகுதியில் நிலத்தடிநீரை அனுமதியின்றி உறிஞ்சி எடுத்த 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அன்புசெல்வன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் பொதுப்பணித்துறை(நிலத்தடி நீர்) செயற்பொறியாளர் தமிழ்செல்வி, கடலூர் தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சி எடுத்த 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க சம்பந்தப்பட்ட நிலையங்கள் பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் இந்த அனுமதியை பெறாமல் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது தெரியவந்தது.

    இதில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் மணவெளி , எம்.புதூர் அரிசிபெரியாங்குப்பம், வழிசோதனைப்பாளையம்ரோடு, காரைக்காடு ஆகிய இடங்களில் உள்ள 7 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும், நேற்று நடைபெற்ற சோதனையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை, கங்கமநாயக்கன்பாளையம், புதுக்கடை, சிங்கிரிகுடி, திருமாணிக்குழி, சங்கொலிகுப்பம் ஆகிய இடங்களில் 12 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என மொத்தம் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளோம் என்றார்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே முறைதவறிய காதலால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ்பேட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி ராக்கினி. இவர்களது மகள் எழில் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குறிஞ்சி கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (28). கூலித்தொழிலாளி. இவர் எழிலின் பெரியம்மாவின் மகன் ஆவார். இதனால் சுரேஷ்குமார் அடிக்கடி எழில் வீட்டுக்கு சென்றுவந்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

    சுமார் 2 ஆண்டுகாலமாக சுரேஷ்குமாரும், எழிலும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் எழில் வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வயல்வேலைக்கு சென்றுவிட்டனர். அப் போது அங்கு சுரேஷ் குமார் எழில் வீட்டுக்கு வந்தார். 2 பேரும் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    திடீரென்று அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் எழிலை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    வயல்வேலைக்கு சென்று விட்டு மாலையில் அந்தோணிசாமி, அவரது மனைவி ராக்கினியும் வீட்டுக்கு வந்தனர். அப்போது கட்டிலுக்கு அடியில் மகள் எழில் முகத்தில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர்கள் சாகுல்அமீது, ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வீட்டுக்குள் பிணமாக கிடந்த எழிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் உறவினர் சுரேஷ்குமார் என்பவர் எழிலை கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அவர் ராமாபுரம் ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அங்கு சென்ற போலீசார் சுரேஷ் குமாரை மடக்கி பிடித்தனர். பின்பு அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் எழிலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன் பின்பு போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். போலீசில் சுரேஷ்குமார் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    எனது தாய் சகாயமேரியின் தங்கை ராக்கினி ஆவர். அவரது மகள் எழில். இதனால் நான் அடிக்கடி ராக்கினி வீட்டுக்கு சென்று வந்தேன். அப்போது எழிலுக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்பு அது காதலாக மாறியது. முறைதவறி நாங்கள் காதலித்து வந்தோம்.

    எழிலை சந்திக்கும்போது எல்லாம் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார். நான் மறுத்து வந்தேன். நேற்றும் எழில் வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். உடனே நான் நாம் இருவரும் அண்ணன், தங்கை உறவாகும். இதனால் நாம் திருமணம் செய்து சேர்ந்து வாழமுடியாது என்று கூறினேன்.

    ஆனால் அவள் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாள். இதனால் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது.

    என்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இதுகுறித்து போலீசில் புகார் செய்வேன் என்று மிரட்டினாள். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எழிலை கொலைசெய்ய திட்டமிட்டேன். உடனே எழிலை தாக்கி கழுத்தை நெரித்தேன்.

    சிறிதுநேரத்தில் அவர் மூச்சிதிணறி இறந்து விட்டாள். இதை அறிந்த நான் பிணத்தை கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் இந்தகொலையில் துப்புதுலக்கி என்னை பிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இளம்பெண் கொலையில் குற்றவாளியை 2 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பாராட்டி உள்ளார்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயப்பிரபா. இவர் அரசு சமூக நலத்துறை வழங்கும் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    இந்தநிலையில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது உறவினரின் திருமண நிதி பெற விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வந்திருந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரி ஜெயபிரபா அவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    லஞ்சப்பணம் கொடுக்க விரும்பாத கோவிந்தராஜ் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின்படி கோவிந்தராஜ் இன்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார்.

    அங்கிருந்த அதிகாரி ஜெயபிரபாவிடம் லஞ்ச பணம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணம் வாங்கிய ஜெயபிரபாவை கையும், களவுமாக பிடித்தார்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி ஜெயபிரபாவை கைது செய்தனர். ஜெயபிரபா இந்த மாத இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தொ.மு.ச. நிர்வாகி வீட்டில் இன்று அதிகாலை மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு வீச்சில் கார் தீப்பிடித்து எரிந்தது.
    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம்-5ல் ராஜேந்திரன் (வயது 60).என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தொ.மு.ச.வின் பகுதி செயலாளராக உள்ளார்.

    ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெய்வேலியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை ராஜேந்திரன் வீட்டின் அருகே மர்மமனிதர்கள் சிலர் வந்தனர். அவர்கள் திடீரென்று ராஜேந்திரன் வீட்டின் முன் பகுதியில் உள்ள கார் செட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

    இதில் ஒரு பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மற்றொரு பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

    பெட்ரோல் குண்டு வெடித்ததில் கார்செட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மேலும் காரின் முன்பகுதியிலும் தீ பரவியது. இதை தொடர்ந்து மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ராஜேந்திரன் வீட்டின் முன் பகுதியில் உள்ள கார் செட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் என்.எல்.சி. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இருப்பினும் கார் செட் மற்றும் காரின் முன் பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கபட்டது.

    இது குறித்து சென்னைக்கு சென்றிருக்கும் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு நெய்வேலிக்கு வந்தார். வீட்டின் முன்பு இருந்த கார் செட் மற்றும் கார் பெட்ரோல் குண்டு வீச்சில் சேதமடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதில் எனது வீட்டின் அருகில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் அப்ரண்டிசாக வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் மதுக்குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாதீர்கள். இங்கு தங்கி உள்ளவர்களுக்கு உங்களின் செயலால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது என்று கூறி அவர்களை நான் கண்டித்தேன்.

    ஆனால் அவர்களின் செயலை மாற்றாமல் தொடர்ந்து மது குடித்து விட்டு எங்கள் பகுதியில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து நான் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து குடிப்போதையில் தகராறு செய்து வந்த என்.எல்.சி. அப்ரண்டிஸ் ஊழியர்களை அந்த வீட்டில் இருந்து காலி செய்ய வைத்தேன். அவர்கள் இதை மனதில் வைத்து கொண்டு எனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது என்.எல்.சி. அப்ரண்டிஸ் ஊழியர்களா? அல்லது வேறு யாராவது வீசினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொ.மு.ச. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் முஸ்லிம்கள் நடத்தி வரும் போராட்டம் 5-வது நாளாக நீடிக்கிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி நாடுமுழுவதும் முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள்.

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற கோரி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பரங்கிபேட்டை, விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி போன்ற இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    பரங்கிப்பேட்டை வாத்தியார்பள்ளி தெருவில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு சவ பெட்டியுடன் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை கடை வீதியில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தை கடந்த 21-ந்தேதி தொடங்கினர். அங்கு இரவும் பகலும் தங்கியிருந்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று 5-வது நாளாக தொடர் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஏதும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது சேப்பாக்கம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சதக்அப்துல்லா. இவரது மனைவி பர்வின்பானு (வயது 35).

    சதக்அப்துல்லா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பர்வின்பானு சேப்பாக்கத்தில் தனது மாமியார், மாமனார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் பர்வின் பானுவின் மாமனார் அபுகனி பாபுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதற் காக அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது மனைவி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

    நேற்று மாலையில் பர்வின் பானு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தனது மாமனாரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தனர். பின்பு அவர்கள் பர்வின்பானுவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்பு அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த ரொக்க பணம் ரூ.40 ஆயிரம் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்றுகாலை பர்வின் பானுவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் புதுவைக்கு சென்றிருக்கும் பர்வின் பானுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    இதை கேட்டதும் பர்வின் பானு உடனடியாக சேப்பாக்கம் வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிகிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை-பணம் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து அவர் வேப்பூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் கொள்ளைநடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேப்பூர் பகுதியில் அடிக்கடி கொள்ளை- வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    வழிபறி-கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்லவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கடலூர் மாவட்டத்தில் காஜா மொய்தீனின் மனைவிகள் மற்றும் ஆதரவாளர்கள் வசித்து வரும் 4 இடங்களில் உள்ள அவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.
    கடலூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் வில்சன் (வயது 57). இவரை களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது பயங்கரவாதிகள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம் (29), தவுபிக் (27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகளான முகமது ஹனிப்கான் (29), இம்ரான்கான் (32), முகமது ஜெயித், இசாஸ் பாஷா (46), மெகபூபாஷா (46), உசேன் ஷெரிப் (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கடலூரை சேர்ந்த காஜாமுகைதீன் தீவிரவாத அமைப்புகளுக்கு தலைவனாக இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் காஜாமுகைதீனை தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    அங்கு சென்ற போலீசார் காஜாமுகைதீனை கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

    கைதான காஜாமுகைதீனுக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி ஆகும். இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி நெய்வேலியை சேர்ந்த இந்திரா, 2-வது மனைவி ராமநாதபுரத்தை சேர்ந்த காஜிராபானு, 3-வது மனைவி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்த பக்ருதீன்நிஷா.

    இவர்களில் இந்திராவுக்கு ஒரு மகனும், பக்ருதீன் நிஷாவுக்கு 2 மகனும் உள்ளனர். ஒரு மகனுக்கு அபிபுல்லா என்றும் இன்னொரு மகனுக்கு ஒசாமா பின்லேடன் என்றும் காஜா முகைதீன் பெயரிட்டுள்ளான். இவன் 3 மனைவிகளிடமும் ஏராளமான ஆண் குழந்தைகளை பெற்று பயங்கரவாத அமைப்பை உருவாக்கவேண்டும் என்று அடிக்கடி மூளை சலவை செய்துள்ளான்.

    இவனது திட்டத்துக்கு முதல் மனைவியான இந்திரா உடன்படவில்லை. எனவே காஜாமுகைதீன் காஜிராபானு, பக்ருதின் நிஷாவிடம் மட்டும் வாழ்ந்து வந்தான்.

    கடந்த 2004-ம் ஆண்டு காஜாமுகைதீன் நெல்லிக்குப்பம் பகுதியில் தீவிரவாத அமைப்பை உருவாக்குவதற்காக வகுப்புகள் நடத்தி உள்ளான். இது தொடர்பாகவும் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. அதோடு நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் 2003-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து காஜாமுகைதீன் 2014-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டான்.

    இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கிலும் காஜா முகைதீனுக்கு தொடர்பு உள்ளது. இவரது பெயரில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை விற்று அதில் வரும் பணத்தை வைத்து பயங்கரவாத அமைப்பை தொடங்கினான். இந்த அமைப்பு மூலம் தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்களை நடத்த திட்டமிட்டிருந்தான்.

    இந்த நிலையில் காஜா மொய்தீனின் டிரைவரான ஜாபர் அலி என்பவரது வீடு மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ளது. மேலும் காஜாமொய்தீனின் கூட்டாளியான அப்துல் சமது வீடு பரங்கிபேட்டையில் உள்ளது.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வுதுறை அதிகாரிகள் இன்று காலை கடலூர் மாவட்டத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காஜா மொய்தீனின் மனைவிகள் மற்றும் ஆதரவாளர்கள் வசித்து வரும் காட்டு மன்னார்கோவில், நெய்வேலி, மேல்பட்டாம்பாக்கம், பரங்கிபேட்டை ஆகிய 4 இடங்களில் உள்ள அவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதை தொடர்ந்து அந்த வீடுகளின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேல் பட்டாம்பாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரான்கோ தலைமையிலான தேசிய புலனாய்வுதுறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையினால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கடலூர் முதுநகர் அருகே கார் கவிழ்ந்து பெண் ஒருவரும், சாலையோரம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரும் பலியானார்கள்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே கார் கவிழ்ந்து பெண் ஒருவரும், சாலையோரம் ஆடு மேய்த்துக்கொண்டி ருந்தவரும் பலியானார்கள். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வமணி (வயது 55). இவர் புவனகிரி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி செந்தாமரை(52). இவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்வமணி தனது மனைவியை காரில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். செந்தாமரைக்கு சிகிச்சை முடிந்த பின் இருவரும் காரில் நெய்வேலிக்கு திரும்பினர். காரை செல்வமணி ஓட்டி சென்றார்.

    கடலூர் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டையில் உள்ள கடலூர்-விருத்தாசலம் சாலையில் சென்ற போது அங்கு சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னதுரை (53) மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் கார், அவரது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் காரில் பயணம் செய்த செந்தாமரையும் சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வமணி படுகாயமடைந்தார்.

    படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலத்தில் உள்ள அரசு சொந்தமான தொழிற்சாலையில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செராமிக் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பீங்கான் பொம்மைகள், அகள் விளக்குகள் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு செராமிக் பொருட்கள் தயாரிக்கும் வகையில் அரசு சார்பில் சுடுசூளை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுடுசூளையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு தளவாட பொருட்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த சுடுசூளை மூடப்பட்டுள்ளது. இங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் சுடுசூளை ஆலையின் கதவை உடைத்து இரும்பு தளவாட பொருட்களை கொள்ளையடித்தனர். அப்போது இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த காவலர் ஒருவர் திருடர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் திருடிய தளவாட பொருட்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் திருடி சென்ற பொருட்களின் மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.

    உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அருகில் உள்ள செராமிக் தொழிற்சாலை ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதைத்தொடர்ந்து தொழிற்சாலை ஊழியர்கள் தப்பி சென்ற மர்ம மனிதர்களை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றனர்.

    அப்போது விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஒரு இரும்பு கடையில் மர்ம மனிதர்கள் திருடிசென்ற இரும்பு பொருட்கள் இருப்பதை பார்த்தனர். இதுகுறித்து அந்த இரும்புகடை உரிமையாளரிடம் அவர்கள் விசாரித்தனர். ஆனால் அவர்கள் இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×