search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் குண்டுவீச்சில் சேதமடைந்த கார்.
    X
    பெட்ரோல் குண்டுவீச்சில் சேதமடைந்த கார்.

    நெய்வேலியில் தொ.மு.ச நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தொ.மு.ச. நிர்வாகி வீட்டில் இன்று அதிகாலை மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு வீச்சில் கார் தீப்பிடித்து எரிந்தது.
    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம்-5ல் ராஜேந்திரன் (வயது 60).என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தொ.மு.ச.வின் பகுதி செயலாளராக உள்ளார்.

    ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெய்வேலியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை ராஜேந்திரன் வீட்டின் அருகே மர்மமனிதர்கள் சிலர் வந்தனர். அவர்கள் திடீரென்று ராஜேந்திரன் வீட்டின் முன் பகுதியில் உள்ள கார் செட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

    இதில் ஒரு பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மற்றொரு பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

    பெட்ரோல் குண்டு வெடித்ததில் கார்செட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மேலும் காரின் முன்பகுதியிலும் தீ பரவியது. இதை தொடர்ந்து மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ராஜேந்திரன் வீட்டின் முன் பகுதியில் உள்ள கார் செட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் என்.எல்.சி. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இருப்பினும் கார் செட் மற்றும் காரின் முன் பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கபட்டது.

    இது குறித்து சென்னைக்கு சென்றிருக்கும் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு நெய்வேலிக்கு வந்தார். வீட்டின் முன்பு இருந்த கார் செட் மற்றும் கார் பெட்ரோல் குண்டு வீச்சில் சேதமடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதில் எனது வீட்டின் அருகில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் அப்ரண்டிசாக வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் மதுக்குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாதீர்கள். இங்கு தங்கி உள்ளவர்களுக்கு உங்களின் செயலால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது என்று கூறி அவர்களை நான் கண்டித்தேன்.

    ஆனால் அவர்களின் செயலை மாற்றாமல் தொடர்ந்து மது குடித்து விட்டு எங்கள் பகுதியில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து நான் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து குடிப்போதையில் தகராறு செய்து வந்த என்.எல்.சி. அப்ரண்டிஸ் ஊழியர்களை அந்த வீட்டில் இருந்து காலி செய்ய வைத்தேன். அவர்கள் இதை மனதில் வைத்து கொண்டு எனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது என்.எல்.சி. அப்ரண்டிஸ் ஊழியர்களா? அல்லது வேறு யாராவது வீசினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொ.மு.ச. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×