search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விருத்தாசலத்தில் அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையில் ரூ.3½ லட்சம் இரும்பு பொருட்கள் திருட்டு

    விருத்தாசலத்தில் உள்ள அரசு சொந்தமான தொழிற்சாலையில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செராமிக் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பீங்கான் பொம்மைகள், அகள் விளக்குகள் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு செராமிக் பொருட்கள் தயாரிக்கும் வகையில் அரசு சார்பில் சுடுசூளை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுடுசூளையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு தளவாட பொருட்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த சுடுசூளை மூடப்பட்டுள்ளது. இங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் சுடுசூளை ஆலையின் கதவை உடைத்து இரும்பு தளவாட பொருட்களை கொள்ளையடித்தனர். அப்போது இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த காவலர் ஒருவர் திருடர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் திருடிய தளவாட பொருட்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் திருடி சென்ற பொருட்களின் மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.

    உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அருகில் உள்ள செராமிக் தொழிற்சாலை ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதைத்தொடர்ந்து தொழிற்சாலை ஊழியர்கள் தப்பி சென்ற மர்ம மனிதர்களை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றனர்.

    அப்போது விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஒரு இரும்பு கடையில் மர்ம மனிதர்கள் திருடிசென்ற இரும்பு பொருட்கள் இருப்பதை பார்த்தனர். இதுகுறித்து அந்த இரும்புகடை உரிமையாளரிடம் அவர்கள் விசாரித்தனர். ஆனால் அவர்கள் இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×