என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஏசி பஸ்கள், நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், வெளிமாநிலம் செல்லும் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் ஆகியவற்றிற்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது.
    சிதம்பரம்:

    சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று உலக மக்களையே அச்சுறுத்தி உள்ளது.

    தற்போது சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை ஆலோசனையின் படி அனைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகளில் கிருமிநாசினி தெளித்து பஸ்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடலூர் மண்டலம் சிதம்பரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஏசி பஸ்கள், நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், வெளிமாநிலம் செல்லும் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் ஆகியவற்றிற்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஊழியர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் நேற்று மாலை முதல் பயோமெட்ரிக் முறை திடீரென்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    நெய்வேலி:

    உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்க்கு உலகளவில் 3,800 பேர் பலியாகி உள்ளார்கள்.

    சீனாவில் மட்டும் 3,120 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 45 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தமிழகத்திலும் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியபட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நோய் அறிகுறியுடன் இருப்பவர்கள் தனிமைபடுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் முறையிலான வருகை பதிவு செய்வதை வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    நெய்வேலி என்.எல்.சி.யின் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழிலக பகுதிகள் மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள், அவர்களின் வருகையை பதிவு செய்வதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி விரல் ரேகையை பதிவு செய்து வந்தனர்.

    நேற்று மாலை முதல் பயோமெட்ரிக் முறை திடீரென்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை பயோமெட்ரிக் பஞ்சிங் எந்திரத்தின் எதிரே காட்டினால் போதும் என்று என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
    பேஸ்புக் காதலனை பார்க்க இலங்கையில் இருந்து சென்னை வந்த காதலி மாயமான சம்பவம் குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பண்ருட்டி:

    இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன். குவைத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் ரிஸ்வி பாத்திமா குப்தா (வயது21).

    இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் (25 ) என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

    சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் முகமது முபாரக் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி பேஸ்புக் மூலம் ரிஸ்வி பாத்திமா குப்தாவுடன் கருத்துக்களை பரிமாறினார். இதனால் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் தினமும் பதிவுகளை தெரிவித்து தங்களது காதலை வளர்த்தனர்.

    இதற்கிடையே ரிஸ்வி பாத்திமா குப்தா தனது காதலனிடம் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று பேஸ்புக் மூலம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த காதலன் முகமது முபாரக் கண்டிப்பாக பார்க்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

    அதன்படி ரிஸ்வி பாத்திமா குப்தா கடந்த 26-ந் தேதி டூரிஸ்ட் விசா எடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து தனது செல்போனில் காதலனிடம் பேசினார். பின்னர் 2 பேரும் சென்னையில் சந்தித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் பண்ருட்டி வந்தனர்.

    இந்த தகவல் காதலியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் குவைத்தில் இருந்து அவசரமாக விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் த.மு.மு.க. அமைப்பை தொடர்பு கொண்டு நடந்த விவரம் குறித்து தெரிவித்தனர். அங்கு காதலனின் முகவரியை பெற்றுக்கொண்டு நேராக பண்ருட்டி த.மு.மு.க.நகர செயலாளர் அலாவுதீனை தொடர்பு கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து காதலியின் தந்தை ஜெயினுலாபுதீன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ்விடம் புகார் மனு கொடுத்தார். அதில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலமையிலான போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் முகமது முபாரக்கை தேடி வி. ஆண்டிக்குப்பம் கிராமத்துக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. தனது காதலியுடன் மாயமாகி விட்டது தெரியவந்தது. உடனே 2 பேரின் போட்டோவின் மூலம் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புவனகிரி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புவனகிரி:

    புவனகிரி அருகே உள்ள சின்னூர் பகுதியை சேர்ந்தவர் கமல்மதி (வயது 39). தொழிலாளி. இவரது மனைவி மயில்வேல் அழகி(36). சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மயில்வேல் அழகி, கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கமல்மதி தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் மயில்வேல் அழகியை, கமல்மதியுடன் அனுப்பி வைக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மயில்வேல் அழகி, அவரது உறவினர்கள் உதயகுமார், சாந்தி ஆகிய 3 பேரும் கமல்மதியை தாக்கி, கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் பலத்த காயமடைந்த கமல்மதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மயில்வேல் அழகி, உதயகுமார், சாந்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    விருத்தாசலத்தில் ஓட்டல், கடைகளில் சுகாதார அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நகர பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவிலை சுற்றிலும் உள்ள 4 கோட்டை வீதிகள் மற்றும் கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டல்களில் நகர துப்புரவு அலுவலர் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் நாட்டுத்துரை, ராஜா கண்ணன், வீரமணி, கோவிந்தசாமி, மற்றும் நகராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உணவு தரமாக சமைத்து நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறதா?, பாத்திரங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா?, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்தனர். மேலும் சுகாதாரமான உணவு வழங்குவது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர்.

    இதேபோல் விருத்தாசலம் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதா என்றும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 15 கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கினர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மீன் மார்க்கெட் வெளிப்புறத்தில் விற்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 100 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட்டில் விற்ககூடிய மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் கலந்து விற்கப்படுகிறதா? எனஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி கடலூர் மஞ்சகுப்பம், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகர் பகுதியில் இன்று காலை மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி, கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுந்தன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அங்கு விற்கப்படும் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? கெட்டு போன மீன்கள் உள்ளதா? என்று சோதனை செய்தனர்.

    மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மீன் மார்க்கெட் வெளிப்புறத்தில் விற்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 100 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை கைப்பற்றி அதனை அப்புறப்படுத்தினர். இதையடுத்து மீன் விற்கும் நபர்களை கடுமையாக கண்டித்தனர். இதுபோன்ற மீன்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.
    கடலூர்:

    சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எனவே சுகாதார குழுவினர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது.

    இந்தியாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு நாடு முழுவதும் உஷார்படுத்தியுள்ளது.

    அதன்படி தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தேவையான உடல் கவசங்கள், முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் 52 பேர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அந்தந்த சுகாதார செவிலியர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு கூறுகையில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

    இதேபோல் விருத்தாசலம், பண்ருட்டி, வேப்பூர், திட்டக்குடி போன்ற 11 வட்டார மருத்துவமனைகளிலும் தனிவார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    கம்மாபுரம் அருகே சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கம்மாபுரம்:

    கம்மாபுரம் அருகே கோ.ஆதனூர் கிராமத்தில் தெற்கு தெரு பகுதியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் கோ.ஆதனூர் பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் புதிதாக சாலை அமைக்கக்கோரி அங்குள்ள விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவலின் பேரில் கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று முஸ்லிம் ஜமாத் மற்றும் உலாம சபை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
    மந்தாரக்குப்பம்:

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முஸ்லிம்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று வடலூரில் முஸ்லிம் ஜமாத் மற்றும் உலாம சபை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

    இதில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வடக்குத்து, குள்ளஞ்சாவடி, வெங்கடாம்பேட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், டெல்லியில் நடை பெற்ற கலவரத்தை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.
    முஸ்லிம்கள் ரத்ததானம் கொடுக்க வந்த போது முகாம் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    காட்டுமன்னார்கோவில் :

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் நேற்று 11-வது நாளாக நீடித்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில், காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இதுபற்றி அறிந்த போராட்டக்காரர்கள் ரத்ததானம் செய்வது என்று முடிவு செய்து, முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர். அங்கு, நாங்கள் அனைவரும் ரத்ததானம் வழங்க முன்வருகிறோம், எனவே நாங்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு வந்து ரத்தம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ரத்த தானம் பெற இயலாது. இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்குங்கள் என்று முகாம் நடத்துபவர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் முகாம் நடந்த இடத்திற்கு ரத்தம் வழங்க சென்றனர். அவர்களிடம் இருந்து ரத்ததானம் பெறுவதற்கான பணிகள் நடந்தது.

    இதற்கிடையே மருத்துவ குழுவினருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. அதில், தற்போது நடைபெறும் ரத்ததான முகாமை வேறு ஒரு நாளில் நடத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு யாரிடமும் ரத்த தானம் பெறாமல், ரத்ததான முகாம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள், “ எங்கள் போராட்டத்தை கைவிட செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக தான் ரத்ததான முகாமை நிறுத்தி விட்டனர்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து விட்டு, அங்கிருந்து தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு சென்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    கடலூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரவணாநகரை சேர்ந்தவர் தேவகுரு. இவருடைய மகள் கீர்த்திகா (வயது 17). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீர்த்திகா, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று காலை கார் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஐவ்வதுகுடியில் மத்திய அரசால் நடத்தப்படும் மாதிரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வேப்பூர் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் கூத்தங்குடியை சேர்ந்த செந்தில்குமார் மகள் புவனா (15) என்பவர் இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் ஸ்ரீவித்யா (15) என்பவரும் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை 9 மணிக்கு மாணவிகள் ஸ்ரீவித்யா, புவனா ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று மாணவிகள் மீது மோதியது. இதில் 2 மாணவிகளும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மாணவி புவனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த மற்றொரு மாணவி ஸ்ரீவித்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×