என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நள்ளிரவில் விவசாயி வீட்டின் பின்பக்க வாசல் கதவை உடைத்து ரூ.18 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சிவஞானம். விவசாயி. நேற்று இரவு இவர் தனது மனைவி செல்லக்கிளி என்பவருடன் காற்றுக்காக வீட்டு வராண்டாவில் கட்டில் போட்டு தூங்கினார்.

    நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பின்பக்க வாசல் கதவு தாழ்ப்பாளை இரும்பு கம்பியால் நெம்பினர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்தனர். பின்னர் அதில் இருந்த நகை பெட்டியை தூக்கி சென்றனர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் செல்லக்கிளி தண்ணீர் குடிக்க எழுந்து வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டில் விளக்கு எரிந்ததோடு மின் விசிறி ஓடியது. உடனே பீரோ இருந்த அறைக்கு சென்றார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த நகை பெட்டி மாயமானது கண்டு பதறினார். அந்த பெட்டியில் 55 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் செல்லக்கிளி கூச்சல் போட்டார்.

    சத்தம் கேட்டு வராண்டாவில் தூங்கி கொண்டிருந்த சிவஞானம் எழுந்து வந்தார். இவரது வீட்டின் அருகே அண்ணன்-தம்பி வீடுகள் உள்ளது. உடனே வெளியே வந்த சிவஞானம் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்களும் எழுந்து வந்தனர். பின்னர் டார்ச்லைட் மூலம் வீட்டில் அருகே உள்ள வயல் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி உள்ளனரா? என்று பார்த்தனர்.

    அப்போது வயல் பகுதியில் பணம் பெட்டி கிடந்தது. ஆனால் அதில் இருந்த நகை- பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ. 18 லட்சம் ஆகும்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் சிவஞானம் வீட்டு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ராமநத்தம் போலீசில் சிவஞானம் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அங்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்களும் சென்றனர். அவர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பழைய கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி (22).

    இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 9 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது மது குடித்து வருவார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    நேற்று இரவு 9 மணிக்கு மகேஸ்வரியும், மணிகண்டனும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். சிறிது நேரத்தில் மகேஸ்வரி எழுந்தார். பின்னர் அவர் சேலையால் தூக்கில் தொங்கினார்.

    திடுக்கிட்டு எழுந்த மணிகண்டன் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்து விட்டதை அறிந்தார்.

    இதையடுத்து மனவேதனை அடைந்த மணிகண்டனும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வெகுநேரமாகியும் மகேஸ்வரி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். வீட்டில் மணிகண்டனும், அவரது மனைவி மகேஸ்வரியும் பிணமாக கிடந்தனர்.

    2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்து கொண்ட கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர் முதுநகரில் வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் கே.வி.ரெட்டி தெருவை சேர்ந்தவர் தினே‌‌ஷ் பெஞ்சமின். இவருடைய மகன் ஜெய்வின் ஜோசப் (வயது 18). கடலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த ஜெய்வின் ஜோசப், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தாய் பிரதீபா, காணாமல் போன தனது மகனை மீட்டு தரக்கோரி கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் ரவி தமிழ்வாணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் ஜெய்வின் ஜோசப்பின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவர் தனது நண்பர்களான காத்தவராயன் மகன் விஜய் (21), ஞானசேகரன் மகன் பிரபா என்கிற பிரபாகரன்(27) ஆகியோரிடம் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் நெய்வேலி மற்றும் காரைக்காடு பகுதியை சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து ஜெய்வின் ஜோசப்பின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை உப்பனாறு அருகே புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், பிரபா ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் ஜெய்வின் ஜோசப்பின் உடலை புதைத்ததாக விஜய், பிரபா ஆகியோர் கூறிய இடத்தில் தோண்டி, உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி விஜய், பிரபா ஆகியோரை காரைக்காடு உப்பனாறு பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கூறிய இடத்தில் கடலூர் தாசில்தார் செல்வகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி முன்னிலையில் ஜெய்வின் ஜோசப்பின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அங்கேயே மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு அங்கேயே மீண்டும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நெய்வேலியை சேர்ந்த 2 பேர், காரைக்காட்டை சேர்ந்த 2 பேர், ஈச்சங்காட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கடலூர் அருகே தென்னைமரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை 2-வது நாளாக மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி புலியூர் மார்க்கெட் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பிரேம் (வயது 19). இவர் நேற்று மாலை 4 மணி அளவில் சூரப்பன் நாயக்கன் சாவடிக்கு சென்றார்.

    அங்கு ஒரு விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் திடீரென்று ஏறினார். அப்போது தோட்டத்தில் நின்றவர்கள் அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள். ஆனால் பிரேம் தென்னை மரத்தில் இருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    உடனே அங்கு நின்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூரில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதுபோல் திருப்பாதிரி புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.

    அங்கு சென்ற போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தென்னைமரத்தில் இருந்து பிரேமை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்காட்டேன் என்றும், தென்னை மரத்தில் ஏறி என்னை மீட்க முயன்றால் கீழே குதித்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து பிரேமிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள்.

    ஆனால் அவர் திட்ட வட்டமாக கீழே இறங்க மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அங்கு 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. இரவு 10 மணிவரை பிரேமிடம் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்துவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்கும்படி போலீசார் கூறினர். மின் விளக்கை அணைத்த பிறகு பிரேம் கீழே இறங்குவார் என போலீசார் நினைத்தனர். ஆனால் அவர் கீழே இறங்கவில்லை.

    அவரை மீட்க பலமுறை போலீசார் முயற்சி செய்தும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத்தொடர்ந்து பிரேம் தென்னைமரத்தின் உச்சியின் மேல் ஏறி தென்னைமட்டையை பிடித்த படி விடிய விடிய பிரேம் தென்னை மரத்திலேயே இருந்தார். அவர் கீழே விழுந்தால் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க தென்னை மரத்தின் கீழே வலை கட்டப்பட்டிருந்தது.

    போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தென்னைமரம் அருகே நின்று கொண்டிருந்தனர். இன்று காலை 6 மணி அளவில் பிரேமை கீழே இறங்கும்படி போலீசார் மீண்டும் வற்புறுத்தினார்கள். அப்போதும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் உயரமான ஏணியை கொண்டுவந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தென்னைமரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துவரும் வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துவரும் வாலிபர் பிரேம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
    கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு முதல்-அமைச்சர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கொரோனாவை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதனை தொடர்ந்து பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

    சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில மாணவ- மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். முதல்-அமைச்சர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    விடுதியில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகள் உடனே வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பல்கலைக்கழக பணியாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.

    இந்த தகவலை பல்கலைகழக பதிவாளர் கிருஷ்ணமோகன் தெரிவித்து உள்ளார்.
    கடலூர் முதுநகரில் பாலிடெக்னிக் மாணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பெஞ்சமின். இவரது மனைவி பிரதீபா. இவர்களது மகன் ஜெய்வின்ஜோசப் (வயது 18).

    இவர் கடலூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி ஜெய்வின்ஜோசப் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் பல இடங்களில் ஜெய்வின் ஜோசப்பை தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

    இதுகுறித்து அவரது தாய் பிரதீபா கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவரை தேடி வந்தனர்.

    மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க முதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் மாணவர் ஜெய்வின்ஜோசப் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். போலீசார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டபோது, மாணவன் ஜெய்வின் ஜோசப்பை கொலை செய்து புதைத்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பல தகவல்கள் கிடைத்தனர். அந்த வாலிபர்கள் 2 பேரும் மாணவர் ஜெய்வின் ஜோசப்பை காரைக்காடு அருகே அழைத்து சென்றனர். அங்கு வைத்து மாணவருக்கு அவர்கள் மது கொடுத்தனர்.

    மதுகுடித்ததும் மாணவர் ஜெய்வின்ஜோசப்புக்கு போதை ஏற்பட்டது. அப்போது அவர்கள் 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெய்வின்ஜோசப் கழுத்தை அறுத்தனர். ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் ஜெய்வின்ஜோசப் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    அதன்பின்பு அவர்கள் இறந்துபோன ஜெய்வின் ஜோசப் உடலை உப்பனாற்றில் குழிதோண்டி புதைத்தனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

    மாணவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். இதற்கிடையே மாணவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இன்று காலை கடலூர் வருவாய் தாசில்தா ர் செல்வகுமார், தடயஅறிவியல் நிபுணர் சாரா மற்றும் மருத்துவகுழுவினர், போலீசார் உப்பநாற்றுக்கு விரைந்து சென்றனர். ஏராளமான பொது மக்களும் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். கழுத்தை அறுத்து கொன்று புதைக்கப்பட்ட மாணவரின் உடலை தோண்டி எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் மகன் மரிய வின்சென்ட்(வயது 20). இவர் சேப்ளாநத்தத்தில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் மகன் அந்தோணிராஜ் (24) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

    புதுக்கூரைப்பேட்டை அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வின்சென்ட், அந்தோணி ராஜ் இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நிலத்தகராறில் பனியன் கம்பெனி ஏஜெண்டு அடித்து கொலைசெய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சரகம் தே. பவழங்குடியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 60.)

    இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கனகராஜ் (40). இவர்கள் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது கனகராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டினர். இதனால் வாக்குவாதம் வலுத்தது.

    அப்போது கனகராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோர் கைகளால் தமிழ்ச்செல்வனை தாக்கினர். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த கணவன்-மனைவியும் அங்கிருந்து ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது தாக்குதலில் தமிழ்செல்வன் இறந்துவிட்டது தெரியவந்தது. உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவான கனகராஜ், அவரது மனைவி செல்வியை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அரிசி சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த மணலூரில் இந்திய உணவு கழகத்தின் அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளது.

    இங்கு 6-க்கும் மேற்பட்ட குடோன்கள் உள்ளன. இதில் உள்ள 1-பி என்ற குடோனில் 3,500 அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    நேற்று இரவு அந்த குடோனில் மின்கசிவின் காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    உடனே ஊழியர்கள் அனைவரும் குடோனை விட்டு வெளியே வந்தனர். பின்னர் இது குறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கபாஷ்சியம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து தொடர்பாக சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி வந்தனர்.
    சிதம்பரம்:

    சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி உள்ளது. இதையொட்டி அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி பள்ளி, கல்லூரிகள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ்சை தடுக்க நெய்வேலி என்.எல்.சி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து பணியாளர்களும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பால் கோவில்களிலும் பக்தர்கள் வருகை குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று வந்தனர். அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு பினனர் கோவிலில் உள்ள கோபுரங்களின் அழகை கண்டு மெய்சிலிர்த்து நின்றனர்.

    அப்போது கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி வந்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டினர் சுற்றுலா பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகர் விஜய் வீட்டில் மட்டும் வருமானவரி சோதனை நடத்துகிறார்கள் என்றும் அவர் மட்டும்தான் ரூ.80 கோடி ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறாரா? என்றும் கே.எஸ்.அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். 22 நாள் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

    இந்த போராட்டம் தொடர்ந்து 22 நாளாக நடைபெற்று வருகிறது. மேலும் மோடியும் அமித்ஷாவும் காந்தி வழியில் உள்ள இந்தியாவை மதசார்பின்மை நாடாக ஆக்கி வருகின்றனர்.

    ஏனென்றால் அசாம் மாநிலத்தில் 19 லட்சம் மக்களை குடியுரிமை அல்லாதவர்கள் என கணக்கெடுத்து உள்ளனர். இதில் இஸ்லாமியர்கள் 10 லட்சம் பேரும், இந்துக்கள் 9 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களை வெளியேற்ற மோடிக்கு வாகனம் இருக்கிறதா? எந்த நாட்டிற்கு அனுப்புவார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்தி பேசும் 7 மாநிலத்தில் வெற்றி பெற்றால் போதும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற அளவில் உள்ளது.

    நடிகர் விஜய் வீட்டில் மட்டும் வருமானவரி சோதனை நடத்துகிறார்கள். அவர் மட்டும்தான் ரூ.80 கோடி ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறாரா? மற்ற நடிகர்கள் எல்லாம் 80 ரூபாய் 100 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்களா? இது ஜனநாயக நாடு. மற்றவர்களையும் அவ்வாறு நடத்தப்பட வேண்டும்.

    பா.ஜ.க. கொண்டு வந்த இந்த குடியுரிமைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க. வின் 11 வாக்குகளும், பா.ம.க. 1 வாக்கு உள்பட மொத்தம் 12 வாக்குகள் போட்டதால்தான் இந்த சட்டத்தை இயற்றப்பட்டது. பா.ஜ.க. கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமைச் சட்டம் இந்திய மக்களை சீர்குலைக்கும் சட்டம்.

    வேளாண்மை மண்டலமாக அறிவித்தது வெறும் பெயரளவுக்குத்தான். ஆனால் காவிரி டெல்டா வேளாண் மண்டலத்தில் என்ன தொழில் செய்யலாம் என்ன தொழில் செய்யக்கூடாது என்பதை எடப்பாடி அரசு தெளிவாக சொல்லவில்லை. 25 லட்சம் விவசாயிகள் 30 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்று கூறவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மணிரத்தினம், இளைஞர் அணி செயலாளர் கமல் மணிரத்தினம், மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, செந்தில்நாதன், மணிமொழி, மகளிரணி தலைவி கரோலின் அண்ணாதுரை, இளைஞர் அணி மாவட்ட தலைவர் தியாகராஜன், நகர தலைவர் அன்வர்ஷானு, குமராட்சி வட்டார தலைவர் பாபு உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் வருகிற 31-ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகைபதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.
    சிதம்பரம்:

    சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பீதி மக்களை விட்டு அகலவில்லை.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காராணமாக பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து பரவுவதாக தெரிவித்து உள்ளனர்.

    இதன் காரணமாக முக்கிய அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்.எல்.சி.யில் பயோமெட்ரிக்முறை வருகை பதிவு ரத்துசெய்வதாக நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 31-ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகைபதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது. அதற்கு பதிலாக தங்களது அட்டையை பயோமெட்ரிக் மிஷினில் காண்பித்து தங்கள் வருகையை பதிவு செய்யலாம் என தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த தகவலை பல்கலை கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பதிவாளர் கிருஷ்ணமோகன் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்து உள்ளார்.
    ×