என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 29). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமல், காய்ச்சல் என திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கருதி உடனே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் லட்சுமி நாராயணன் இறந்துள்ளார் என்று கூறினர்.

    ஆனால், லட்சுமி நாராயணனின் தாய் மாலதி கூறுகையில், டாக்டர்கள் சரிவர கவனிக்காததால் எனது மகனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது என்றார்.

    இருப்பினும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், கொரோனா பாதித்த உடலை தங்களது ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தினர். சமரத்துக்கு பின்னர் லட்சுமி நாராயணின் உடல் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.
    கடலூர் நகராட்சியில் உள்ள வார்டுகளில் தூய்மைப்படுத்தும் வகையில் கிருமிநாசினி தெளிப்பது, குளோரின் பவுடர் தூவுவது ஆகிய பணிகளில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் தூய்மைப்படுத்தும் வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தி கிருமிநாசினி தெளிப்பது, குளோரின் பவுடர் தூவுவது ஆகிய பணிகளில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் 27-வது வார்டுக்குட்பட்ட மாரியம்மன் கோவில்தெரு, சன்னதிதெரு, எருமராஜ அக்ரஹாரம் திருவரசன் பிள்ளைதோட்டம், ஆனைக் காரன்தெரு, போடிச்செட்டித்தெரு மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து, குளோரின் பவுடரையும் தூவினார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடுகள் தோறும் வாசலில் வேப்பிலையை கட்டி தொங்கவிட்டனர். அதேபோல் கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
    கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. வெளிநாடு சென்று வந்தவர்கள், வெளி மாநிலங்களக்கு சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 

    இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 30ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். 

    அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவரது ரத்த மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகள் வரவில்லை. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் இன்று காலை உயிரிழந்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ராஜவல்லி (வயது 35). இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளது.

    இதற்காக டயாலசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறி கடந்த 30-ந் தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்குள்ள கொரோனா வார்டில் இவரது ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டது. அவை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. என்றாலும் இவர் கொரோனா அச்சத்தில் இருந்தார். இன்று காலை ராஜவல்லி இறந்தார்.

    இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், ராஜவல்லியின் ரத்த பரிசோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபின்னர் தான் அவருக்கு கொரோனா இருந்ததா? என்பதை உறுதி செய்ய முடியும் என்றனர்.
    கடலூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைத்தும் கடைகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள தனியார் மருந்து கடையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கடலூர் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, தாசில்தார் செல்வக்குமார், வருவாய்த்துறை அதிகாரி சுகந்தி மற்றும் அதிகாரிகள் கடை உரிமையாளரை எச்சரித்தனர். தொடர்ந்து அந்த கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதேபோல் கடலூர் முதுநகர் பிரதான சாலையில் உள்ள மளிகை கடையிலும் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த மளிகை கடையையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறியதாக கடலூர் மாவட்டத்தில் 118 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    கொரானோ வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விதித்து வந்தது. ஆனால் இதனையும் மீறி கடலூர் மாவட்டத்தில் பலர் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தலைமையில் போலீசார் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருகிறோம் என கூறிக்கொண்டு தேவையில்லாமல் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் வெளியில் வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து விரட்டியடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தடையை மீறி வாகனத்தில் வரக்கூடிய பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த 80 பேர் மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பொதுமக்கள் தடையை மீறியும், தேவையில்லாமல் வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    நேற்றும் கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் அதிகளவில் இருசக்கர வாகனத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுற்றித் திரிந்தனர் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டன. மேலும் 144 தடை உத்தரவு எப்போது தளர்த்தப்படுகிறதோ அதன்பிறகு வாகனங்கள் வழங்கப்படும் என போலீசார் திட்டவட்டமாக கூறி அனுப்பி வைத்தனர்.
    கடலூரில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதில் 50 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    சீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் பல உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவையும், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதில் 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் மாலை 6 மணி முதலும், ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு 12 மணி முதலும் அமலுக்கு வந்தது.

    இதையொட்டி கடலூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டது. அதாவது ராமநத்தம், வேப்பூர், கடலூர் ஆல்பேட்டை, வல்லம்படுகை, பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட அனைத்து பகுதி எல்லைகளும் தடுப்பு கட்டைகள் வைத்து காவல்துறை மூலம் மூடப்பட்டது. மேலும் நகரின் பல இடங்களில் சாலையின் குறுக்கே கயிறு கட்டியும், தடுப்பு கட்டைகள் அமைத்தும் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. மேலும் எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் சிலர் கொரோனா வைரசின் பாதிப்பை உணராமல் தடை உத்தரவையும் மீறி நேற்று சாலைகளில் சுற்றித்திரிந்தனர்.

    அந்த வகையில் கடலூரிலும் பலர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த கடலூர் அண்ணா பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை எச்சரித்து திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் போலீசார் கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் சாலையில் சுற்றித்திரிந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த போலீசார் வாகன ஓட்டிகளை லத்தியால் விரட்டியடித்தனர். மேலும் சில வாகனங்களின் முகப்பு விளக்குகளை அடித்து நொறுக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த வழியாகவே திரும்பி சென்று விட்டனர். இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை விரட்டியடித்தனர். மேலும் தடையை மீறி சுற்றித்திரிந்ததால் மாவட்டம் முழுவதும் 50 பேருடைய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி கடலூர் நகரில் சுற்றித்திரிந்த 15 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    கடலூரில் இருந்து புதுவைக்கு இன்று 2-வது நாளாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்லவில்லை. சென்னை செல்லும் பஸ்கள் கடலூர், மாளிகை மேடு, கோலியனூர், திண்டிவனம் வழியாகவே சென்னை செல்கின்றன.
    கடலூர்:

    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கெரோனா வைரஸ் கிருமி இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி தமிழகம் மற்றும் புதுவையிலும் கொரோனா வைரஸ் கிருமியை தடுக்க சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உடனடியாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் புதுவை மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். அதன்படி புதுவை மாநில எல்லைகள் சீல்வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த பகுதியில் புதுவை மாநில போலீசார், போக்குவரத்து போலீசார், மருத்துவகுழுவினர் குவிக்கப்பட்டனர்.

    கடலூர்- புதுச்சேரி கிழக்குகடற்கரை சாலையில் உள்ள முள்ளோடை புதுவை மாநிலத்தின் எல்லையாக உள்ளது. இந்த வழியாகத்தான் கடலூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் புதுவைக்கு செல்ல வேண்டும். 144 தடைஉத்தரவையொட்டி கடலூர் பகுதியில் இருந்து புதுவை நோக்கி சென்ற எந்த வாகனங்களையும் நேற்று இரவு 9 மணி முதல் அனுமதிக்கவில்லை.

    நேற்று காலை இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. புதுச்சேரி மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்களுக்கு அடையாள அட்டை அல்லது அதற்குரிய ரசீது இருந்தால் மட்டும் போலீசார் புதுவைக்குள் செல்ல அனுமதி வழங்கினர்.

    புதுவை எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடலூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் மாளிகை மேடு, கோலியனூர், திண்டிவனம் வழியாக சென்னை சென்றது. சென்னையில் இருந்து வந்த வாகனங்கள் இதே வழியில் கடலூர் வந்தது.

    கடலூரில் இருந்து புதுவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் செல்லவில்லை. நேற்று மாலை முதல் இருசக்கர வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    மாலையில் வேலைகளுக்கு சென்று புதுவை திரும்பிய தொழிலாளர்களை கடலூர் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். முன்கூட்டியே தெரிந்தால் நாங்கள் முன்எச்சரிக்கையாக இருந்திருப்போம் என்று கூறினர். 20 நிமிட வாக்குவாதத்துக்கு பின்னர் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கடலூர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் வேறு யாரும் இருசக்கர வாகனத்தில் கடலூர் செல்ல அனுமதிக்கவில்லை.

    இன்று 2-வது நாளாகவும் கடலூரில் இருந்து புதுவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்லவில்லை. சென்னை செல்லும் பஸ்கள் கடலூர், மாளிகை மேடு, கோலியனூர், திண்டிவனம் வழியாகவே சென்னை செல்கின்றன.

    தமிழக பதிவெண்கள் கொண்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் புதுவை செல்ல அனுமதிக்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு சென்ற வாகனங்கள் ஆவணங்களை காட்டிய பின்னரே அனுமதிக்கப்பட்டது.

    இதே போல புதுவையில் இருந்து கடலூர் வரும் புதுவை பதிவு எண்கள் கொண்ட எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கடலூரில் இருந்து புதுவை செல்லும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் முள்ளோடையில் நிறுத்தப்படுகிறது. அதன் பின்னர் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து தங்களது வீடுகளுக்கு செல்கின்றனர்.

    வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்குமாறு அவ்வப்போது போலீசாருக்கு புதுவை மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் ரத்தனா சிங், ராகுல் அல்வால், சுப்பிரமணி ஆகியோர் உத்தரவினை பிறப்பித்துஉள்ளனர். அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே கடன் தொல்லையால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் பூதங்குடி ஊராட்சி அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (வயது 45). இவரது மனைவி ஜெயா (40). இவர் பூதங்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 மகள்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் வீட்டில் எதிர்புறம் உள்ள ஒரு வேப்பமரத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செல்வராசு தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    தூக்கில் பிணமாக தொங்கிய செல்வராசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்வராசு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் பஞ்சாயத்து தேர்தலில் தனது மனைவி ஜெயா வெற்றி பெறுவதற்காக செல்வராசு அதிக அளவு கடன் வாங்கியிருந்தார். அதை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் செல்வராசு தற்கொலை செய்ததாக தெரியவந்தது.

    ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் துபாயில் இருந்து வந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    நெல்லிக்குப்பம்:

    துபாயிலிருந்து சத்யா என்கின்ற பெண் நேற்றிரவு நெல்லிக்குப்பம் அருகே பில்லாலி பகுதிக்கு வந்தடைந்தார். இத்தகவல் காட்டுத் தீ போல் அந்தப் பகுதியில் பரவியது. இதனைத்தொடர்ந்து இந்தப் பெண் முழுமையான சோதனைக்கு பிறகு இங்கே வந்தாரா? என்பது அந்த பகுதி மக்களுக்கு சரியான முறையில் தெரியவில்லை.

    இதனால் பீதியடைந்த இந்த பகுதி மக்கள் நேற்று காலை திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சுகாதார ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து புறப்பட்டு பெங்களூரு மற்றும் சென்னை வழியாக முழு மருத்துவ பரிசோதனை செய்து கொரானோ வைரஸ் அறிகுறியோ அல்லது பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் காராமணிக் குப்பம் பகுதியில் கேரளா மாநிலத்திற்கு கரும்பு வெட்டும் பணிக்காக கணவன் சுப்பிரமணி, மனைவி விஜயா ஆகியோர் சென்றுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு காராமணி கும்பத்திற்கு வந்துள்ளனர். அதன்பிறகு 2 பேருக்கும் சளி, இருமல் தொடர்ச்சியாக இருந்து வந்தது.

    இத்தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவியை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    அப்போது சாதாரண சளி மற்றும் இருமல் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர்களை உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியிலுள்ள கல்லூரியிலிருந்து விடுமுறை விடப்பட்டதால் மாணவர் திருக்கதிர் காரமணிக்குப்பத்திற்கு வந்தார்.

    இந்த மாணவரையும் சுகாதாரத்துறையினர் மருத்துவ சோதனை செய்தனர். அவருக்கு எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்து சென்றனர். 

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை சிதம்பரம் நடராஜர், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

    இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் கூடும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டது.

    தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்களை வருகிற 31-ந் தேதி வரை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநில மக்களும் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய 4 வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய சன்னதிகளில் உள்ள வாசல்கள் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அங்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது. கிழக்கு வாசல் வழியாக மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் வெங்கடேஷ் கூறும்போது, உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பூலோகம், வைலோகம் என்றழைக்கப்படுகிறது. இங்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதியும், உலக நன்மையை வேண்டியும் இந்த கோவிலில் நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம்.

    தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கோவிலில் 6 கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் 4 வாசல்களின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அதுபோல் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலிலும் இன்று முதல் 31-ந்தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வழக்கம்போல் கோவிலில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை சாமிதரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆனால், கோவிலில் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடக்கும் என்றார்.

    புதுவை மாநிலம் திருநள்ளாறில் சனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலும் இன்று முதல் 31-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் அருகே விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூரில் தடையை மீறி ஆட்டுச்சந்தை இன்று நடந்தது.
    விருத்தாசலம்:

    கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் நிலையில் அதிக கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஆட்டுச்சந்தையையும் மூடும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூரில் தடையை மீறி ஆட்டுச்சந்தை இன்று நடந்தது. இதில் கடலூர், அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வெளியூர்களைச் சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனை செய்வதற்காகவும், வாங்கிச் செல்வதற்காகவும் வந்து குவிந்தனர்.

    வழக்கத்தைவிட ஆட்டு சந்தையில் அமோகமாக விற்பனை நடந்தது. இன்று நடந்த சந்தையில் எந்தவித மருத்துவ வசதிகளும் செய்து தரப்படவில்லை. கொரோனா நோய் விழிப்புணர்வு எதுவும் செய்யப்படவில்லை. இதனால் இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் சந்தைகளில் நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×