search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் விரட்டியடித்த காட்சி.
    X
    தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் விரட்டியடித்த காட்சி.

    144 தடை உத்தரவை மீறி, வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை விரட்டியடித்த போலீசார்

    கடலூரில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதில் 50 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    சீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் பல உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவையும், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதில் 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் மாலை 6 மணி முதலும், ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு 12 மணி முதலும் அமலுக்கு வந்தது.

    இதையொட்டி கடலூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டது. அதாவது ராமநத்தம், வேப்பூர், கடலூர் ஆல்பேட்டை, வல்லம்படுகை, பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட அனைத்து பகுதி எல்லைகளும் தடுப்பு கட்டைகள் வைத்து காவல்துறை மூலம் மூடப்பட்டது. மேலும் நகரின் பல இடங்களில் சாலையின் குறுக்கே கயிறு கட்டியும், தடுப்பு கட்டைகள் அமைத்தும் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. மேலும் எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் சிலர் கொரோனா வைரசின் பாதிப்பை உணராமல் தடை உத்தரவையும் மீறி நேற்று சாலைகளில் சுற்றித்திரிந்தனர்.

    அந்த வகையில் கடலூரிலும் பலர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த கடலூர் அண்ணா பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை எச்சரித்து திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் போலீசார் கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் சாலையில் சுற்றித்திரிந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த போலீசார் வாகன ஓட்டிகளை லத்தியால் விரட்டியடித்தனர். மேலும் சில வாகனங்களின் முகப்பு விளக்குகளை அடித்து நொறுக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த வழியாகவே திரும்பி சென்று விட்டனர். இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை விரட்டியடித்தனர். மேலும் தடையை மீறி சுற்றித்திரிந்ததால் மாவட்டம் முழுவதும் 50 பேருடைய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி கடலூர் நகரில் சுற்றித்திரிந்த 15 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    Next Story
    ×