search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    144 தடை உத்தரவு
    X
    144 தடை உத்தரவு

    144 தடை உத்தரவு: கடலூரில் இருந்து புதுவை செல்ல 2-வது நாளாக அனைத்து வாகனங்களுக்கும் தடை

    கடலூரில் இருந்து புதுவைக்கு இன்று 2-வது நாளாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்லவில்லை. சென்னை செல்லும் பஸ்கள் கடலூர், மாளிகை மேடு, கோலியனூர், திண்டிவனம் வழியாகவே சென்னை செல்கின்றன.
    கடலூர்:

    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கெரோனா வைரஸ் கிருமி இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி தமிழகம் மற்றும் புதுவையிலும் கொரோனா வைரஸ் கிருமியை தடுக்க சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உடனடியாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் புதுவை மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். அதன்படி புதுவை மாநில எல்லைகள் சீல்வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த பகுதியில் புதுவை மாநில போலீசார், போக்குவரத்து போலீசார், மருத்துவகுழுவினர் குவிக்கப்பட்டனர்.

    கடலூர்- புதுச்சேரி கிழக்குகடற்கரை சாலையில் உள்ள முள்ளோடை புதுவை மாநிலத்தின் எல்லையாக உள்ளது. இந்த வழியாகத்தான் கடலூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் புதுவைக்கு செல்ல வேண்டும். 144 தடைஉத்தரவையொட்டி கடலூர் பகுதியில் இருந்து புதுவை நோக்கி சென்ற எந்த வாகனங்களையும் நேற்று இரவு 9 மணி முதல் அனுமதிக்கவில்லை.

    நேற்று காலை இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. புதுச்சேரி மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்களுக்கு அடையாள அட்டை அல்லது அதற்குரிய ரசீது இருந்தால் மட்டும் போலீசார் புதுவைக்குள் செல்ல அனுமதி வழங்கினர்.

    புதுவை எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடலூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் மாளிகை மேடு, கோலியனூர், திண்டிவனம் வழியாக சென்னை சென்றது. சென்னையில் இருந்து வந்த வாகனங்கள் இதே வழியில் கடலூர் வந்தது.

    கடலூரில் இருந்து புதுவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் செல்லவில்லை. நேற்று மாலை முதல் இருசக்கர வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    மாலையில் வேலைகளுக்கு சென்று புதுவை திரும்பிய தொழிலாளர்களை கடலூர் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். முன்கூட்டியே தெரிந்தால் நாங்கள் முன்எச்சரிக்கையாக இருந்திருப்போம் என்று கூறினர். 20 நிமிட வாக்குவாதத்துக்கு பின்னர் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கடலூர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் வேறு யாரும் இருசக்கர வாகனத்தில் கடலூர் செல்ல அனுமதிக்கவில்லை.

    இன்று 2-வது நாளாகவும் கடலூரில் இருந்து புதுவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்லவில்லை. சென்னை செல்லும் பஸ்கள் கடலூர், மாளிகை மேடு, கோலியனூர், திண்டிவனம் வழியாகவே சென்னை செல்கின்றன.

    தமிழக பதிவெண்கள் கொண்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் புதுவை செல்ல அனுமதிக்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு சென்ற வாகனங்கள் ஆவணங்களை காட்டிய பின்னரே அனுமதிக்கப்பட்டது.

    இதே போல புதுவையில் இருந்து கடலூர் வரும் புதுவை பதிவு எண்கள் கொண்ட எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கடலூரில் இருந்து புதுவை செல்லும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் முள்ளோடையில் நிறுத்தப்படுகிறது. அதன் பின்னர் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து தங்களது வீடுகளுக்கு செல்கின்றனர்.

    வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்குமாறு அவ்வப்போது போலீசாருக்கு புதுவை மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் ரத்தனா சிங், ராகுல் அல்வால், சுப்பிரமணி ஆகியோர் உத்தரவினை பிறப்பித்துஉள்ளனர். அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
    Next Story
    ×