என் மலர்
செய்திகள்

திட்டக்குடி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி அழகம்மாள் (வயது 60), உறவினர்கள் சுதா (35), பெரியசாமி (48). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் சோளம் பயிரிட்டு இருந்தனர்.
அறுவடை செய்த சோளத்தை வீட்டுக்கு கொண்டுவந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். அங்கு வந்த வியாபாரிகள் இன்னும் சில நாட்கள் வைத்திருந்தால் விலை கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு அழகம்மாள் வீட்டில் உள்ள ஒரு அறையில் சோளத்தை கொட்டிவைத்தனர். பின்னர் 3 பேரும் அருகில் உள்ள அறையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர் ஒருபகுதி திடீரென இடிந்து 3 பேர் மீது விழுந்தது. இதில் அவர்கள் படுகாயத்துடன் கூச்சல் போட்டனர்.
சத்தம் கேட்டு கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அழகம்மாள், பெரியசாமி, சுதா ஆகியோர் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






