search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிலோமினாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    X
    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிலோமினாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒருதலை காதலில் விபரீதம்- பெண்ணை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி

    கடலூர் மாவட்டம் வடலூர் பஸ்நிலையத்தில் இன்று காலை பெண்ணை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஜான் விக்டர். இவர் ராணுவத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பிலோமினா(வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிலோமினா வடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினமும் நெய்வேலி டவுன் ஷிப்பில் இருந்து வடலூருக்கு தனியார் பஸ் மூலம் சென்று வந்தார். அப்போது பிலோமினாவுக்கும் அந்த பஸ் டிரைவர் சுந்தரமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் பஸ்சில் செல்லும் போது பிலோமினா பஸ் டிரைவர் சுந்தரமூர்த்தியிடம் பேசி வந்தார். இதை தவறாக புரிந்து கொண்ட சுந்தர மூர்த்தி, பிலோமினாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில் சுந்தர மூர்த்தி அவரது காதலை பிலோமினாவிடம் தெரிவித்தார். அதை ஏற்க பிலோமினா மறுத்து விட்டார்.

    இதை தொடர்ந்து பிலோமினா, சுந்தரமூர்த்தியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் பிலோமினா மீது ஆத்திரம் அடைந்த சுந்தர மூர்த்தி இன்று காலை வடலூர் பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பிலோமினாவின் வருகைக்காக காத்திருந்தார்.

    பிலோமினா பஸ்சில் இருந்து இறங்கி அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற சுந்தரமூர்த்தி பிலோமினாவை தன்னிடம் பேசுமாறு கூறி வற்புறுத்தினார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். உடனே சுந்தர மூர்த்தி தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை பிலோமினா மீது ஊற்றி தீ வைத்து உயிருடன் எரித்துகொல்ல முயன்றார்.

    தீ பிலோமினா உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிலோமினா உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    இருப்பினும் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுந்தர மூர்த்தியை பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து வடலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×