என் மலர்
கோயம்புத்தூர்
- பாரதிய ஜனதா ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட அதிகமான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
- பா.ஜ.க. புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழகத்தில் மாறி வருகிறது.
கோவை:
பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தை விட பின்தங்கி இருந்த மாநிலங்கள் தற்போது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசு கட்டுப்பாடுகள் போடுவதால் மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் தமிழகத்தில் தாமதம் ஆகிறது.
தமிழக அரசால் கோவை விமான நிலையப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலைய நடவடிக்கையை மட்டுமே மத்திய அரசு அமல்படுத்த முடியும்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 10 ஆண்டுகள் குறித்து வெள்ளை அறிக்கையை கொடுத்திருக்கிறார். அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக சமமான நிதி பங்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது
பாரதிய ஜனதா ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட அதிகமான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கும் சட்டமாக பார்க்க வேண்டும். பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் என்ற வகையில் அதனை நான் வரவேற்கிறேன்.
அரசியலில் தனிப்பட்ட தாக்குதல் இருக்கக்கூடாது. கூட்டணி தொடர்பான தெளிவான முடிவுகள் வரும் வரை தேவையற்ற பேச்சுக்களை அ.தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும்.
பா.ஜ.க. புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழகத்தில் மாறி வருகிறது. பாஜகவை, மோடியை எதிர்த்தவர்கள் தற்போது பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாரதிய ஜனதா ஆட்சி பல ஆண்டுகள் தொடரும்.
- அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கோவை:
டெல்லியில் பாரதிய ஜனதாவில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சேலஞ்சர் துரை, சின்னசாமி, ரத்தினம், செல்வி முருகேசன் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு பாரதிய ஜனதாவினர் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்புக்கு பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, சின்னசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா ஆட்சி பல ஆண்டுகள் தொடரும். கோவைக்கு தேசிய நீரோட்டம் தான் பக்கபலமாக இருக்கும். அதை நினைத்து தான் நாங்கள் பாரதிய ஜனதாவில் இணைந்திருக்கிறோம்.

ஊழல் பட்டியல் வெளியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரது கரத்தை வலுப்படுத்துவோம். அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பா.ஜ.க.வில் தற்போது இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வினர் வயதானவர்கள் என விமர்சிக்கின்றனர். அப்படியானால் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பா.ஜ.க. துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி. ராமலிங்கம் கூறுகையில் எம்.ஜி.ஆர். உடன் பணிபுரிந்த நேர்மையானவர்கள் இன்று தூய ஆட்சியை தமிழகத்துக்கு பாரதிய ஜனதாவால் தான் தர முடியும் என்பதற்காகவும், அண்ணாமலை கரத்தை வலுப்படுத்தவும் இணைந்துள்ளனர். தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வரும்போது அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்து இன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர் என்றார்.
- பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.
குனியமுத்தூர்:
டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்த கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. தற்போது அந்த கூட்டணி உடைந்து ள்ளது. இதன் காரணமாக டாக்டர் கிருஷ்ணசாமி, எந்த அணியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கிறது. எனவே வலுவான கூட்டணியில் இடம்பெற திட்டமிட்டுள்ளோம். அது எண்ணிக்கை மற்றும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும். தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.
2019-ல் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் நாங்கள் இடம்பெற்றோம். தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது இல்லை. புதிய அரசியல் சூழல் நிலவுகிறது.
புதிய தமிழகம் கட்சி சுதந்திரமாக செயல்பட நினைக்கிறது. பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட் டணி என்பது காலம் கடந்துவிட்டது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாங்கள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.
தமிழகத்தில் தற்போது 3 அணிகள் உள்ளன. நாங்கள் வெற்றிக்கூட்டணியில் இடம்பெறுவோம். பாராளுமன்றத்தில் எங்களது குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்களின் நோக்கம் ஆகும். இம்முறை நாங்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
- தமிழகத்தில் 36 இடங்களில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று (06-02-2023) நடைபெற்றது. இதில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மணிவண்ணன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது
"கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆவது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 2 அன்று வேலூரை வந்தடைந்தது. இந்த ரதமானது வேலூர் நகரின் பல்வேறு இடங்களுக்கு பயணித்த பிறகு காட்பாடி, ஆற்காடு, சோளிங்கர், கே.வி.குப்பம், குடியாத்தம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு பிப் 10 ஆம் தேதி வரை பயணிக்க உள்ளது.
கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு கோவை ஈஷா யோக மையத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் 36 இடங்களில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ராணி மஹாலில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு மூலம் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்."
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் குணசீலன் மற்றும் விஜயகுமார் உடன் பங்கேற்றனர்.
- தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது.
- விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி-பாலக்காடு சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மேலும் விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பொள்ளாச்சி நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.
ஒரு போலீஸ் அதிகாரி மோட்டார் சைக்கிள் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அந்தளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும்.
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பொறுத்த வரை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்று கொள்பவர்களுடனே நாங்கள் கூட்டணி அமைப்போம். அப்படி வருபவர்களை சேர்த்து கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.
- விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் எனறு விரும்புகிறார்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி எந்தெந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது பற்றி பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் குறிப்புகள் அளிக்கப்பட்டது.
தமிழகத்தை பொறுத்த வரை முதல் அல்லது இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும். ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது.

அரசியலுக்கு திசை கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அவர் அத்வானி தான். அவர் பா.ஜ.க.வை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில் மகத்தான பங்கு வகித்தவர்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. சட்டமன்ற தேர்தலில் அதுகுறித்து விவாதிக்கலாம். விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் எனறு விரும்புகிறார். அதனை வரவேற்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்குவதாக தெரிவித்தார். அப்போது அவர் பேசியதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகள். மேலும் கமல்ஹாசனுக்கு ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கமல்ஹாசன் ஊழலுக்கு எதிரானவர் இல்லை. ஊழலுக்கு துணை போகக் கூடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜக நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.
- பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர். பா.ஜ.கவும் தேர்தல் பணியை தமிழகத்தில் தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த முறையை விட இந்த முறை தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதுடன், தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வகையில் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடனான மத்திய குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், எச்.ராஜா, கே.டி.ராகவன், ஜி.கே.நாகராஜ், கரு.நாகராஜன் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியதை அடுத்து, தங்கள் கூட்டணியில் எந்தெ ந்த கட்சிகளை சேர்க்கலாம். யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். தமிழகத்தில் நமக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என பல்வேறு விஷயங்களை தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார்.
மேலும் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிப்பது? அதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டார். அவர்களும் பல்வேறு கருத்துக்களை தேசிய அமைப்பு பொதுச்செயலாளரிடம் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் கூறிய அனைத்து கருத்துக்களையும் கேட்டு கொண்ட தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாராளுமன்ற தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள் என கூறியதோடு, வெற்றிக்கான சில வழிகளையும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தொகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் சென்று கட்சியினர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். அவர்களிடம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறி வாக்குகளை சேகரியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிடமும் அவர்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டு, அதனை உடனே நிறைவேற்று வதற்கான நடவடிக்கையும் எடுங்கள். அடிக்கடி மக்களை சந்தித்து கொண்டே இருங்கள்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் அந்தந்த நிர்வாகிகள் தங்கள் முழு பலத்தையும் இறக்கி தேர்தல் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தாக தெரிகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிலும் குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் போட்டியிடக் கூடிய முக்கிய வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க கோவை, நீலகிரி உள்பட பல்வேறு தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது. குறிப்பாக நீலகிரி தொகுதியில், மத்திய மந்திரியாக இருக்க கூடிய எல்.முருகன் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் எல்.முருகனும், நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகாமிட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறார்.
இதையெல்லாம் பார்க்கும் போது, அவர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் விரைவில் முதற்கட்ட வேட்பாளர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகனின் பெயர் உள்பட இன்னும் சில முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர்.
- பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.
கோவை:
கோவை வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லஆயன் உயர்நிலைப்பள்ளியில் 1980-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புவரை படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்தது, பலரது முகத்திலும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, பூரிப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவர்கள் தங்களுக்கான அடையாளம், நட்பு, பாசத்தை ஒருவருக்கொருவர் புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள்பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர். மேலும் முன்னாள் மாணவர் சந்திப்புக்காக இதே பள்ளியில் கடந்த 1990-ம் ஆண்டு படித்த ஆர்.எஸ். புரத்தை சேர்ந்த கார்த்தி (வயது 54) என்பவர், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக, அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த காக்கி அரைக்கால் டவுசர் மற்றும் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வந்தி ருந்தார்.
இது அங்கு திரண்டு இருந்த பழைய நண்பர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கார்த்தி கூடலூர் பகுதியில் உள்ள கோவிலில் தலைமை குருக்களாக பணியாற்றி வருகிறார்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பேசுகையில், இன்றைய தலைமுறை மாணவர்கள் இந்த நாட்டிற்காக தான் கற்ற கல்வியை பிறர் பயன்பட நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாக பேசி, முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பிள மின் மரியஜோசப் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.
- கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டு மானாலும் வரலாம்.
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை காலை இருப்பதால் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம் 12-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இயக்கத்தின் பணிகள், தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
செயற்குழு கூட்டத்திற்கு பின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டு தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து வெளிவரும்.
கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் என்னுடைய கட்சியின் இறுதி முடிவை என்னால் கூட சொல்ல முடியாது. செயற்குழு உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்கள் எல்லாம் கருத்துக்களை கூறிய பிறகு தான் முடிவு களை கூற முடியும். மற்ற கட்சிகளுக்காக நான் பேசுவதற்கு எந்த தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. அந்த அதிகாரமும் இல்லை.
பாரதிய ஜனதா தலைவர்களை பாராளுமன்றத்தில் பார்ப்பதெல்லாம் வழக்கமான ஒன்றாகவே இருக்கி றது. அது புதிதல்ல. தேர்தல் குறித்து பேசுகின்ற நேரம், காலம் இருக்கின்ற போது அதைப் பற்றி பேச தானே செய்வோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டு மானாலும் வரலாம். அத ற்கு ஜனநாயகத்தில் எந்த தடையும் இல்லை, தடங்கலும் கிடையாது அதே நேரத்தில் ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள். அவர்களது முடிவு தான் இறுதி முடிவு. மேலும் வாக்காளர்களின் எண்ணம் போல் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடுவதற்காகவும், அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
- அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழகத்தில் ஜெயிக்க முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.
கோவை:
கோவையில் இன்று நடைபெறும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தனர்.
விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் இன்று 2-வது முறையாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடுவதற்காகவும், அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டணி குறித்து, வேட்பாளர்கள் குறித்து தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள். மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டால் அதற்கான பணியை செய்யவும் தயாராக உள்ளோம்.
விஜய் புதிய கட்சி தொடங்கினாலும், பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அவர்கள் பார்வையாளர்களாக இருப்பர் என அவரே சொல்லிவிட்டார். பாராளுமன்ற தேர்தலில் அவருடைய பங்கு குறைவாக தான் இருக்கும்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலை மையில் 19 சதவீத வாக்குகள் மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் வெற்றி என பார்த்தோம். அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழ கத்தில் ஜெயிக்க முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.
நாட்டை பாதுகாக்கும் முக்கிய அமைப்பு என்.ஐ.ஏ. நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
அவர்களின் வேலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
- கோவையில் இன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
- கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தம் வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை என பல்வேறு பணிகளில் அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவையில் இன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொள்கிறார்கள். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் பங்கேற்கிறார். தேசிய தலைவர் நட்டாவுக்கு அடுத்து பெரிய பொறுப்பில் உள்ள இவர் இன்று கோவை வருகை தந்து தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மேலும் 39 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில் வேறு எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை, வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது, தேர்தல் அறிக்கையை எவ்வாறு அமைப்பது? என்பது போன்ற விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க.வின் பலம் என்ன, குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி பா.ஜ.க.வின் வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிகள் பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் பி.எல். சந்தோஷ் ஆலோசிக்கிறார். வெற்றி வாய்ப்பு குறித்து தமிழக பா.ஜ.க.வினருக்கு அவர் பல ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் எந்தெந்த தேதிகளில் பிரசாரத்தை வைத்துக் கொள்வது என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வெற்றியை பெற்று விடுவது என்ற முனைப்பில் ஆலோசிக்கப்பட உள்ளதால் கோவையில் இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
- மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் வந்தடைய உள்ளன.
தென் கைலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வலம் வர இருக்கிறது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (பிப் 3) நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு மகேந்திரன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:
கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆவது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ரதங்கள் தமிழ்நாடு மற்றும் புதுவையின் நான்கு திசைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஜனவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரையிலான இரண்டு மாதங்களில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக இந்த ரதங்கள் பயணிக்க உள்ளன. இந்த யாத்திரையை அந்தந்த ஊர்களிலுள்ள பெருமக்கள் வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகிக்கு பூ, பழம் மற்றும் ஆரத்தி உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து சிறப்பாக வரவேற்று வருகிறார்கள். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை பயனுள்ளதாக உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு ஆதியோகி ரதம் இந்த மாதம் வருகை தர உள்ளது. சென்னையை பொருத்த வரை வரும் பிப் 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரையில் அம்பத்தூர், போரூர், கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் பயணிக்க உள்ளது. மேலும் திருவள்ளூரில் பிப் 22 ஆம் தேதியும் மற்றும் செங்கல்பட்டில் வரும் மார்ச் 4 ஆகிய தேதியிலும் ஆதியோகி ரதங்கள் வலம் வர இருக்கின்றன. திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் வந்தடைய உள்ளன.
இதோடு, சிவ யாத்திரை எனும் பாதயாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். பிப்ரவரி 16 அன்று தொடங்கப்படும் இந்த யாத்திரை மார்ச் 6 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் முடிவடைய உள்ளது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கும் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அவரோடு திரு. சீனிவாசன், வழக்கறிஞர் இந்து மற்றும் மருத்துவர் திரு. பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.






