என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 3 காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது.
    • வன பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றில் கரையோரத்தில் அமைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நடிகரும், டைரக்டருமான கே.பாக்யராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அந்த வீடியோவில் அவர் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களுக்கு தாங்கள் படப்பிடிப்பிற்காகச் செல்வது உண்டு. அந்த பகுதியில் ஓடும் ஆற்றில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்வார்கள். அப்போது ஆற்றின் சுழலில் சிக்கி சிலர் இறந்து போய் விடுவார்கள். இது சாதாரண விபத்து அல்ல, பணம் பறிக்கும் நோக்கில் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த வீடியோ மேட்டுப்பாளையம் மக்களை மட்டுமல்லாது போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. நடிகர் பாக்கியராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும், அதுபோன்ற குற்றச்சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பதிவாகவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானவை அல்ல என்றும், தண்ணீரில் மூழ்கி நீராடும் நபர்களை நீருக்குள் இருக்கும் சில மர்மநபர்கள் கொடூரமான முறையில் கொலைகள் செய்வதாகவும், அவர்களின் உடல்களை நீருக்குள் தேட உறவினர்களிடம் பணம் கேட்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இவ்வாறு பரவும் வதந்திகள் ஆதாரமற்றது. இதுவரை பவானி ஆற்று பகுதியில் இந்த மாதிரியான கொலை சம்பவம் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை.

    பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 3 காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது. அங்குள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றில் கரையோரத்தில் அமைந்துள்ளது. மேலும், தினமும் சராசரியாக சுமார் 20 ஆயிரம் பக்தர்களும், அதன் வருடாந்திர குண்டம் திருவிழாவின் போது சுமார் 5 லட்சம் பக்தர்களும் வருகின்றனர். 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ரோந்து காவலர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பவானி ஆற்றில் இன்று வரை எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    மேலும் தற்கொலை எண்ணத்துடன் ஆற்றில் குதித்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் மொத்தம் 19 ஆபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டு பவானி ஆற்றில் உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் எச்சரிக்கை பலகைகள், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    எனவே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை. இவ்வாறு வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ள ஆர்.எஸ்.புரத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.

    குண்டுவெடிப்பு நிகழ்ந்த 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று பா.ஜ.க.வினரால் கடைபிடிக்கப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று மாலை 3 மணிக்கு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் கண்டன பொதுக்கூட்டமும் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.


    குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்காக விசுவ இந்து பரிஷத் சார்பில் திதிகொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அதன் முன்பு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ள ஆர்.எஸ்.புரத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.
    • 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர், ஆனைமலை பகுதியில் உள்ள 6 இடங்களில் தொடர்கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

    இதன்படி வால்பாறை டி.எஸ்.பி. ஸ்ரீநிதி மற்றும் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 38) என்பவர் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பகலில் கட்டிடத் தொழிலாளி போல் வலம் வந்துள்ளார். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் வீடு புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் சமீபகாலமாக கோட்டூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    குற்றவாளி ராமச்சந்திரனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை கோட்டூர் போலீஸ் சரகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பூட்டியிருந்த 3 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதம் மேலும் 3 வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்த பகுதிக்கு பரிச்சயம் இல்லாத ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பதிவெண் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கோட்டூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய குற்றவாளி பற்றி தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த கொத்தனார் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தோம். பின்னர் அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    கோட்டூரில் நடைபெற்ற 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது மதுரை மாநகர், மாவட்ட போலீஸ் நிலையங்களில் 15 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் போலீசின் தேடுதல் வேட்டைக்கு பயந்து குடும்பத்துடன் கோவைக்கு வந்து கோட்டூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால் மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

    ராமச்சந்திரனை கைது செய்யும் விஷயத்தில் எங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவியாக இருந்தது. எனவே கோவை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும். மேலும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றால், நாங்கள் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பூண்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பாக இருந்த சாலை நடுப்புற தடுப்புகளை அகற்றினர்.
    • வழியில் இருக்கும் 6 மலையோர பகுதிகளிலும் தற்காலிக கடைகள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் பூண்டியையொட்டி அமை ந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் 7-வது மலை உச்சியில் தென்கயிலை என போற்றப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் ஆண்டுதோறும் கோடை க்காலம் தொடங்கியதும் கூட்டமாக வந்திருந்து படிப்படியாக மலையேறி சென்று, பின்னர் மலைஉச்சியில் வீற்றிருக்கும் சுவாமியை தரிசனம் செய்து செல்வதை பெரும்பாக்கியமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதை முன்னிட்டு சிவபக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி செல்தற்காக பூண்டி மலைஅடிவாரத்துக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை வனத்துறையினர் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். மேலும் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல அனுமதி மறுத்து ஊருக்குள் மறுபடியும் திருப்பி அனுப்பினர். இது மலையேற ஆர்வமாக வந்திருந்த பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்தது. தொட ர்ந்து அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கிடையே சரவணம்பட்டியை சேர்ந்த நாக ராஜன் என்பவர் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மஞ்சுளா, ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண் டும் என வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பூண்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பாக இருந்த சாலை நடுப்புற தடுப்புகளை அகற்றினர்.

    தொடர்ந்து மலையேற்றத்துக்காக வந்திருந்த பக்தர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் உள்ளதா? என்று சோதனைக்கு உட்ப டுத்தினர். அப்போது ஒரு சிலரிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உணவுப்பொருட்களை பேப்பரில் மடித்து பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு மலையேற வசதியாக நீண்ட கம்புகள் வழங்கப்பட்டன.

    வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம்-கூட்டமாக செல்ல வேண் டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி பக்தர்கள் கூட்ட மாக மலையேறி வருகின்ற னர். மேலும் பக்தர்கள் செல்லும்வழியில் பாது காப்பு மற்றும் ரோந்து ப்பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டு உள்ளன. மார்ச் 8-ந்தேதி மகாசிவராத்திரி வருவதால் அன்றைய தினம் பக்தர்கள் அதிகளவில் திரண்டுவருவர் என்பதால், மலையேற்ற பகுதியில் பாது காப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்ப ட்டு உள்ளன.

    மேலும் வெள்ளியங்கரி மலைக்கு வரும் பக்தர்களை பாதுகாப்புடன் வழிநடத்தும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக தன்னார்வலர்களை ஏற்பாடு செய்யும் பணியும் நடக்கிறது. இதுதவிர மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கண்காணிப்பு கூரை அமைத்தல், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளும் வனத்துறை சார்பில் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வந்திருக்கும் பக்தர்கள் தேநீர் அருந்தவும், சாப்பாடு வாங்கி செல்லவும் ஏதுவாக, வழியில் இருக்கும் 6 மலையோர பகுதிகளிலும் தற்காலிக கடைகள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன்.
    • நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதே பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஓன்றுகூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன் பேசுகையில், எனக்கு தற்போது 88 வயது ஆகிறது. இந்த பள்ளியில் 1983-86ம் ஆண்டுவரை படித்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மிகுந்த கண்டிப்புடன் மாணவர்களை வழிநடத்துவர். எங்களிடம் படித்து முடித்து உயர் பதவிகளை வகிக்கும் மாணவர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.

    ஆசிரியர் செல்வி கூறுகையில், நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். என்னுடன் இதே பள்ளியில் படித்த நண்பர்களை சந்திப்பது உற்சாகம் தருகிறது என தெரிவித்தார். நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம் என நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மயூரா சுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு வந்திருந்த அதே ஆசிரியரிடம் பிரம்பை கொடுத்து அடிக்கும்படி கூறினார். இதற்கு முதலில் மறுத்த ஆசிரியர் பின்னர் செல்லமாக பிரம்பால் ஒரு அடி கொடுத்தார். இது அங்கு வந்திருந்த முன்னாள் மாணவ-மாணவிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    • பொள்ளாச்சி இளநீரின் மொத்த பண்ணை விலை தற்போது அதிகரித்து உள்ளது.
    • ஆனைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் செவ்விளநீர் அறுவடை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் அதிகளவில் தென்னை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள தென்னைகளில் உற்பத்தி யாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு.

    அதிலும் குறிப்பாக கோடைக்காலம் வரும் போது பொள்ளாச்சியில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு அதிகளவில் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளநீர் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி அனல் வெயில் கொளுத்தி வருவதால் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பச்சை இளநீர், செவ்விளநீர் ஆகியவற்றின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்திருந்து, இளநீரை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்று வருகின்றனர். இதுதவிர சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எனவே பொள்ளாச்சி இளநீரின் மொத்த பண்ணை விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    இங்கு கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு இளநீரின் பண்ணை விற்பனை விலை ரூ.18 ஆக இருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி ஒரு இளநீர் ரூ.25 என்ற விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் செவ்விளநீர் அறுவடை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவற்றை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    அங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 2 லட்சம் வரையிலான செவ்விளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை குறைவாக இருந்தாலும், தென்னையில் இளநீர் உற்பத்தி அதிகரித்து உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இளநீர் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்திருந்து, இளநீரை குறிப்பிட்ட விலைக்கு வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் செவ்விளநீரே அதிகளவில் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் உச்சகட்டத்தை எட்டும்போது வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம், மேலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மற்றும் வீடியோக்களில் விளம்பரம் பார்த்தால் தினமும் சராசரியாக ரூ.5 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை பார்த்த லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்தியானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஒண்டிப்புதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் நிறுவன இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது சக்தி ஆனந்தன் உள்ளிட்டடோர், எங்கள் நிறுவனத்துக்கு எதிராக ஒருசிலர் சமூகவ லைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் இடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் போலீஸ் கமிஷனர் முக்கிய ஆய்வுக்கூட்டத்தில் உள்ளார். எனவே எங்களிடம் மனுவை வழங்குங்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டுமென கூறியதுடன், அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் சக்தி ஆனந்தன் மீது போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவுசெய்து, பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு சிலர் திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக வந்த சிலரை போலீசார் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கோவை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இன்றும் பலர் வ.உ.சி பூங்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை தனியார் நிறுவனத்தின் இணையதள செயலியை மாநகர போலீசார் ஏற்கனவே முடக்கம் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த செயலி மீண்டும் தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. இருப்பினும் அந்த இணைய செயலி மூலம் வாடிக்கையாளர் மேலும் சேர முடியாத வகையில் அவற்றின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    • கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
    • கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் கோவையில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இந்த கூட்டம், அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுக்க சிறு, குறு தொழில் செய்பவர்கள் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் கொரோனா உள்ளிட்டவைகளால் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். ஜி.எஸ்.டி.-யில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதை கட்ட முடியாமல் சிறு, குறு தொழில் செய்வோர் தங்களது தொழிலை செய்ய முடியாத சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்."

    "கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மின் கட்டண உயர்வு தொடர்பாக பலமுறை தொழில்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும்," என்று தெரிவித்தார். 

    • ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

    கோவை மாநகரில் 2035-ம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகத்துக்காக ரூ.780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது கூட்டுக்குடி நீர் திட்டம் கோவை மாநக ராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பில்லூர் 3-வது திட்டத்துக்காக முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டன்மலைக்கு தண்ணீர் செல்கி றது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு, பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளை (11-ந் தேதி) பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. குடிநீர் வினியோகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் இதற்கான விழா நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பங்கேற்று பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.362.20 கோடி மதிப்பீல் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அன்னூர், சூலூர், அவினாசி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

    இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகிறார். அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால் தற்போது 10 நாள், 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யும் நிலை உள்ளது. இந்த பில்லூர் திட்டம் தொடங்கினால் தினமும் தண்ணீர் அளிக்கும் நிலை ஏற்படும்.

    கோவையின் மக்கள் தொகை 22 லட்சமாக உள்ளது. இவர்களுக்கு 300 எம்.எல்.டி. தண்ணீர் இருந்தால் தினமும் தண்ணீர் வழங்க முடியும்.

    ஆனால் 300 எம்.எல்.டி. தண்ணீருக்கு மேலாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிச்சி பகுதிக்கு 8 எம்.எல்.டி. கவுண்டம் பாளையம் பகுதிக்கு 22 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்படுகிறது.

    மேலும் பில்லூர்-2 திட்டத்தின் கீழ் மாவட்ட த்திற்கு மொத்தம் 125 எம்.எல்.டி. கிடைக்கும் நிலையில் நகராட்சிக்கு 3 எம்.எல்.டி. மட்டுமே வழங்கி வருகிறோம். பில்லூர் 2 திட்டத்தில் நகராட்சிக்கு 125 எம்.எல்.டி. தண்ணீர் வருகிறது. எனவே பில்லூர் 3-வது திட்டம் வந்தால் மாநகரில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தினமும் வழங்க முடியும். இத்திட்டத்தை உடனடியாக கோவைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை.
    • மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள்.

    கோவை:

    அ.தி.மு.க நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி ஆ.ராசா எம்.பி. அவதூறாக பேசியதாக கூறி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்.பற்றி அவதூறாக பேசியதற்காக பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.

    தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது குறித்து ஆ.ராசா எம்.பி.யிடம் கோவையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளித்து ஆ.ராசா எம்.பி. கூறியதாவது:-


    எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம் என கூறுகிறீர்கள்.

    அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, முதலமைச்சர் குடும்பத்தினரை பற்றி பேசியது தொடர்பாக ஐகோர்ட்டில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அதன்பிறகு நடந்த மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி முதலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். எம்.ஜி.ஆர் முகத்தை வைத்து தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது என பழனிசாமி கூறுகிறார். அது தனிக்கதை. அதைப்பற்றி பின்னர் தனியாக பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீ வேகமாக பரவ தொடங்கியது.
    • 130 தொழிலாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவை:

    கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகை பெட்டி தயாரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீ வேகமாக பரவ தொடங்கியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    குடோன் முழுவதும் பரவிய தீ, அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கும் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    குடோனில், சமையல் எரிவாயு சிலிண்டரும் பயன்பாட்டில் இருந்துள்ளது. 130 தொழிலாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    • யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக - கேரளா எல்லையான வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் மதிவேந்தன் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * யானைகள் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    * யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    * யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம் என்று அவர் கூறினார்.

    ×