என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
    • திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இநத கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மாசிமக திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 23-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தினந்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. தேர்த்திரு விழாவை யொட்டி காரமடை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்த நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, அரங்கநாத சுவாமி பக்தர்கள் கொண்ட காரமடை ஸ்ரீ தாசப்பளஞ்சிகா மகாஜன சங்கம் சார்பில் 55 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான சப்பரம் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளி சப்பரத்தில் மரகத பச்சை கற்களில் சங்கு, மாணிக்க கற்களில் சக்கரம், சிகப்பு மற்றும் வெள்ளை பவளத்தில் திருநாமம் என விலையுயர்ந்த வைடூரிய கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

    கோவிலுக்கு வழங்கப்படும் தேக்குமரத்தில் வெள்ளியால் வேயப்பட்ட இந்த சப்பரத்தில் அரங்கநாத சுவாமி உருவபடத்தை வைத்து கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியே உலா கொண்டு வரப்பட்டு கோவிலில் முறைப்படி ஒப்படை க்கப்பட்டது. பின்னர் கோவிலின் உள்ளே இந்த சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பக்தர்கள் பல வண்ண வாண வேடிக்கை நிகழ்த்தினர்.

    • மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.
    • இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கள ஆய்வானது, நாளை காலை 9 மணி வரை நடக்கிறது.

    பொள்ளாச்சி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் தாலுகா அளவில் கிராமங்களில் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆனைமலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு பொதுமக்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, ஆனைமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் நலத்திட்ட பணிகள் மற்றும் அரசால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மக்களையும் சந்தித்தார். அப்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர். தொடர்ந்து அவர் ஆனைமலை பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு சங்கங்கள், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், தாசில்தார் சிவகுமார் உடனிருந்தனர்.

    இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கள ஆய்வானது, நாளை காலை 9 மணி வரை நடக்கிறது. இன்று இரவு ஆனைமலை பகுதியில் உள்ள சேத்துமடை கிராமத்தில் தங்கும் அவர் மக்களை நேரடியாக சந்திக்கிறார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளார்.

    • கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்ட காட்சி.

    கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு.

    • செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பொள்ளாதி கிராமம், சின்னத்தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள செல்போன் டவர் உச்சியில் நின்றபடி ஒரு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபரின் பெயர் சந்திரன் (வயது 25) என்பதும், இதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    சின்னத்தொட்டியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சந்திரன் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த வார்டு கவுன்சிலர் சுரேஷ் என்பவர், குடிபோதையில் இருந்த சந்திரனை கண்டித்து உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து வார்டு கவுன்சிலர் சுரேஷை சரமாரியாக தாக்கினார். பின்னர் வீட்டுக்கு சென்ற சந்திரன் அங்கிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கையில் குத்திக்கொண்டு ரத்தக்காயங்களுடன் வெளியேறினார்.

    தொடர்ந்து சின்னதொட்டிபாளையம் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறிய சந்திரன் அங்கிருந்தபடி, நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என மிரட்டல் விடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் டவரை சுற்றிலும் பாதுகாப்பு வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் நைசாக செல்போன் டவரின் மேல் ஏறி சென்று, அங்கு இருந்த சந்திரனை லாவகமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கினார்கள். அப்போது அவருக்கு கையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரியில் சேரும் அரசு பள்ளி படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
    • திட்டத்தின் மூலம் அந்த மாணவர்களும் கல்லூரிக்கு வரும் நிலையை உருவாக்கி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவிகளும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி மாதந்தோறும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கி அவர்களின் வாழ்விலும், கல்வியிலும் ஒளியேற்றியுள்ளது.

    அதேபோன்று தற்போது அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க கூடிய தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தை நடப்பாண்டு முதல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களை சாதனையார்களாக உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

    மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து கல்லூரி மாணவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

    கோவை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வரும் மாணவர் முகிலன் கூறியதாவது:-

    தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த திட்டமானது கல்லூரி படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் திட்டமாகும்.


    இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயின்று வரும் ஏழை மாணவர்கள் மிகவும் பயன் அடைவார்கள். கல்லூரியில் சேரும் அரசு பள்ளி படித்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்கள் உள்பட தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றி கொள்ளவும் இந்த திட்டமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் பரத் கூறியதாவது:-

    தமிழக அரசு ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படித்து கல்லூரி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதுபோன்று தற்போது அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் உயர் கல்வி படிக்க கூடிய அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


    சில ஏழை மாணவர்கள் தங்கள் குடும்ப வறுமை காரணமாக கல்லூரி செல்ல முடியாமல் வேலைக்கு செல்வதும் ஆங்காங்கே இருக்க தான் செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அந்த மாணவர்களும் கல்லூரிக்கு வரும் நிலையை உருவாக்கி உள்ளனர். இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    எம்.சி 3-ம் ஆண்டு படிக்கும் சக்திவேல் கூறியதாவது:

    இந்த திட்டமானது கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் நல்லது. ஆரம்பத்திலேயே பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவித்த போது, அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி.

    ஏழை மாணவர்கள் பலரும் இந்த திட்டம் மூலம் பயன் அடைவார்கள். வழக்கம் போல மாதந்தோறும் ரூ.1000 கொடுத்து வந்தால் மாணவர்களும் நமக்கு அரசு உதவி செய்கிறது படிக்க வேண்டும் என்று நினைத்து படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இது அவர்கள் படிப்பு செலவுக்கும் உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு கல்லூரியில் எம்.சி. 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிவக்குமார், வினோத் கூறுகையில், இந்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இது மாணவர்களின் படிப்புக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டம் மூலம் மாணவர்கள் பெற்றோருக்கு எந்தவித இடையூறும் கொடுக்காமல் தங்களுக்கு தேவையான படிப்பு உதவிகளை அவர்களே செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தை கொண்டு வந்ததற்கு தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    • மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன.
    • காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட எண்ணற்ற வன விலங்குகள் உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இதன் காரணமாக வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் அங்குள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டுக்குள் அங்கு மிங்குமாக அலைந்து திரிந்து வருகின்றன.

    எனவே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப்ஸ்டாலின் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அங்கு தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் குளம், குட்டை மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    இதனை கருத்தில் கொண்டு காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அங்கு தினந்தோறும் தண்ணீரை நிரப்பும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வன நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். மேலும் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறுவதும் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம்.
    • பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும்.

    விரதம் என்பது உணவின் மீதான பற்றை தற்காலிகமாக கைவிடுதல். காரணம் ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தின் மிக முக்கிய அங்கமாக இருப்பது உணவு. நம் புராணங்களில், இலக்கியங்களில் பல்வேறு விதமான விரதம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    சஷ்டி விரதம், நவராத்திரி விரதம், மஹா சிவராத்திரி விரதம், ஏகாதசி விரதம் என ஏராளமான விரத முறைகள் உண்டு. ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு குணநலன்களும், பலன்களும் உண்டு. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் நோக்கம் என்பது கட்டாயம் இருக்கும். அந்த வகையில் ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆன்மீகம், ஆரோக்கியம் என எந்த நோக்கத்தோடு ஒருவர் விரதம் அனுசரித்தாலும், இறுதியில் அது அந்த குறிப்பிட்ட நபரின் நல்வாழ்வை மேம்படுத்துவது தான் விரதத்தின் சிறப்பு.

    அந்த வகையில் ஆன்மீக பாதையில் விரதம் இருப்பதால், தெய்வீகத்தின் தீவிரத்தை சற்று நெருக்கமாக உணர முடியும். ஆன்மீக ரீதியான சாதனாக்கள் செய்கிற போது அதற்கு ஒத்துழைக்கும் விதமாக மனமும், உடலும் சமநிலை அடைகிறது. உணவு உட்கொள்ளும் முறை குறித்து சத்குரு அவர்கள் கூறும் போது கூட, யோக முறையில் ஒரு உணவுக்கும் மற்றொரு உணவுக்குமான இடைவெளி குறைந்தது 8 மணி நேரம் இருக்க வேண்டும் என்கிறார்.

    மேலும் அவர் "வயிறு காலியாக இருக்கும் போது உணவை ஜீரணித்து வெளியேற்றும் மண்டலம் சிறப்பாக வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி ஒருவர் ஒருபோதும் கட்டாயமாக, இந்த விரதத்தை மேற்கொள்ளாமல் இருப்பது அவசியம். உடலின் இயற்கையான சுழற்சியோடு ஒன்றி இந்த விரதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை தான் நாம் மண்டலம் என்று அழைக்கிறோம். ஒரு செயல்முறையை 40 இல் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து செய்கிற போது நம் உடல் குறிப்பிட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.

    இந்த சுழற்சி தொடரும் போது உடலுக்கு எப்போது உணவு தேவை என்கிற விழிப்புணர்வு கிடைக்கும். அதற்கு உணவு தேவைப்படாத போது நீங்கள் வெகு இயல்பாக விரதத்தை மேற்கொள்ள முடியும். அதோடு வயிறு காலியாக இருப்பதற்கும் பசியோடு இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும். அதுவே உங்கள் வயிறு காலியாக இருந்தால் உங்கள் உடலும் மனமும் அதன் உட்சபட்ச திறனில் வேலை செய்யும்" என்கிறார்.

    இதனால் தான் சிவாங்கா சாதனாவில் இருக்கும் சாதகர்கள், இரு வேளை உணவு மட்டுமே உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் வேளை உணவு நண்பகல் 12 மணிக்கு மேல் உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது.

    அதன்படி விரதமிருந்து சிவாங்கா சாதனா மேற்கொள்ளும் சாதகர்கள் பலர், தற்போது ஆதியோகி ரத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு ஏராளமான தொண்டர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதியோகி ரத யாத்திரையில் பங்கெடுத்துள்ளனர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு 4 ஆதியோகி ரதங்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் நான்கு திசைகளிலும் வலம் வந்தவாறு இருக்கிறது. 35,000 கி.மீக்கும் மேற்பட்ட தூரத்தை கடந்து, மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரி அன்று இந்த ரதங்கள் கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளன.

    • காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
    • இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்தில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீவிபத்து குறித்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
    • நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது அய்யர்பாடி எஸ்டேட். இந்த எஸ்டேட்டில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்கள் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள 7-ம் நம்பர் குடியிருப்பு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட்டுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது.

    இந்த வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு திடீரென கரும்புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்து. இதை பார்த்த பொதுமக்கள் வேகமாக ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொது மக்களும் உதவி செய்தனர்.

    நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில், வனத்தில் இருந்த செடிகள், கொடிகள், மரங்கள் என அனைத்தும் எரிந்து சேதமாகி விட்டன.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வன பகுதி வழியாக செல்லும் மக்கள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த விசாரணையின் போது அவர் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    இதற்காக அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மனோஜ் சாமி விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார், கொள்ளை சம்பவத்தின் போது அங்கு நடந்தது என்ன? யார் உங்களை அங்கு அழைத்து சென்றது? யாருக்காக கொள்ளையடிக்க சென்றீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
    • கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய மந்திரி எல்.முருகன் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். அவரது வேலை இன்னும் மக்களுக்கு சென்று சேரட்டும்.

    மத்திய மந்திரி எல்.முருகனிடம் நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் போட்டியிட வேட்பாளர் தயாராக உள்ளார். தமிழகத்தில் எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இன்று சட்டமன்றத்தில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது. 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 முறை இந்திராகாந்தி, ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் காலம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?

    இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024-ம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

    கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அக்குற்றவாளிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்க கூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை.

    தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் இணைய தயாராக இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை. விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் இணைகிறார்கள். ஒரு கட்சியை உடைத்து கட்சியை வளர்க்கும் வேலையை பா.ஜ.க. செய்யாது.

    எங்கள் கட்சியில் இணைந்தவர்களை வயதானவர்கள் என எஸ்.பி. வேலுமணி பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் வயது என்ன? வயதை பற்றி பேசி வேலுமணி அவரது கட்சி தலைவரை கேவலப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என்ன இளைஞரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். கோவையில் நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம் என்றார்.

    ×