என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து வால்பாறையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே வால்பாறையில் கனமழை பெய்து வருவதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சுவர் இடிந்து விழுந்து சிக்கி இருவர் உயிரிழந்தனர். 

    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வனபத்ர காளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.


    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு அம்மன், சிம்ம வாகனத்தில் கோவிலை வலம் வந்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளினார்.

    காலை 5.30 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி ஹரி நடத்திய சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மற்றும் போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டே குண்டம் இறங்கினர்.


    தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம் எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
    • படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மைய திறப்பு விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று மையத்தை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்று நினைப்பவர்களாக உருவாக வேண்டும். கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும்போது உதவியாக இருக்கும் என்றார்.

    தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய அளவில் 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் முன்னிலையில் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் முதன்முறையாக ஆகஸ்டு 24-ந் தேதி திரவ, திட எரிபொருள் இருண்டும் கலந்து செய்யப்பட்ட ராக்கெட் சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணுக்கு அனுப்பும் முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கிணத்துக்கடவு பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மாணவர்கள் பாடங்களை படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம். மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உலக அளவில் போட்டி உள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க அரசு உதவ முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சீமானை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிய அண்ணாமலை.
    • அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை.

    கோவை:

    கோவையில் தனியார் மருத்துவமனை தலைவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்பட அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொள்ள வந்த அண்ணாமலை முன்வரிசையில் அமர்ந்திருந்த சீமானை நோக்கி சென்று அவரை கட்டிப்பிடித்தார். இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதன் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    பொதுமேடைகளில் அண்ணாமலையும், சீமானும் ஒருவரையொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது அவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

    இவ்வாறு அரசியலில் எதிர், எதிர் துருவங்களாக உள்ள 2 தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொண்டபோது கட்டிப்பிடித்து அன்பை பரிமாறக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற கூற்றைப் போல், பொதுமேடைகளில் அரசியல் தலைவர்கள் ஒருவரைஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வதும், தனிப்பட்ட முறையில் நட்பு பரிமாறிக் கொள்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில்தான் அண்ணாமலை, சீமானின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
    • நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம்.

    கோவை:

    கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்த பள்ளியில் தான் அவர் பள்ளிப்படிப்பை படித்தார். பின்னர் மயில்சாமி அண்ணாதுரை 'தினத்தந்தி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ''நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்கமுடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதைத்தொடர்ந்து நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார்.
    • கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது.

    மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    இதைதொடர்ந்து, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார்.

    இதனால், காலியாக உள்ள கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர் தேர்தலுக்கான கூட்டம் வரும் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில், கோவை மேயர் பதவியை பிடிக்க 6 பெண் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

    அதன்படி, கோவை திமுகவில் பரீட்சயமான முகமான 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, 34வது வார்டு கவுன்சிலர் மாலதி, எம்.பி கனிமொழி மூலம் மேயர் பதவிக்கு காய் நகர்த்துவதாக தகவல் வௌியாகியுள்ளது.

    இதேபோல், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா, 36வது வார்டு கவுன்சிலர் தெய்வானை, 63வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோரும் கோவை மேயர் போட்டியில் உள்ளனர்.

    • கனிமவள கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
    • கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்துள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு பல நிறுவனங்கள் மூடிய பிறகும், தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் 3 முறை மின் கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது. 23 மாதங்களில் கிட்டத்தட்ட 34 விழுக்காடு மின்கட்டணத்தை தி.மு.க அரசு உயர்த்தி உள்ளது.

    இதனால் தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக சிறு, குறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மின்கட்டண உயர்வால் கடந்த 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    எனவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்ததும் மாதம், மாதம் மின் கணக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. எனவே தாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று மாதம், மாதம் மின் கட்டணம் கணக்கீடு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    கோவையில் கனிமவள கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. பாமக சார்பில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு இதில் மெத்தனம் காட்டி வருகிறது. இதிலிருந்து தான் பலருக்கும் வருமானம் செல்கிறது.

    மின் கட்டண உயர்வுக்கு காரணம் மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும் தான் காரணம்.

    கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்துள்ளது. கோவை மேயர் ஏன் பதவி விலகினார் என விசாரணை நடத்த வேண்டும். வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க பல லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளில் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. மதுவை கொடுத்து 3 தலைமுறை நாசப்படுத்தியது போல கஞ்சாவை கொடுத்து இந்த தலைமுறையை நாசப்படுத்தி வருகின்றனர்.

    தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதற்கான அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு இருக்கிறது. பீஹார், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இவ்வளவு மாநில முதல்வர்களுக்கும் அதிகாரம் இருக்கும்போது தமிழக முதல்வருக்கு இல்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் காரணமாக இந்த விவகாரத்தில் முதல்வர் தயங்குகிறார்.

    இதுவரை நடந்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எல்லா மாநிலத்தின் பெயரை கூறியுள்ளனரா? காங்கிரஸ் எல்லா மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் சொல்லியுள்ளதா. திட்டங்கள் வரும். தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை என்னென்னவென்று தெரியவரும். பெயர் சொல்லவில்லை என புறக்கணிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழகத்தின் உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. கோயம்புத்தூர் மெட்ரோவிற்கு நிதியை சண்டை போட்டு கட்டாயம் வாங்குவோம்.

    நீட் தேர்வு இருக்கக்கூடாது அது தேவையில்லாத தேர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப அதன் கொள்கைகளை விட்டு விட வேண்டும். நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, சமூக நீதி மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை.
    • தமிழக முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதிலும் அரசியல் இருக்கிறது.

    கோவை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலேயே எதிர்கொள்வோம்.

    2026-ம் ஆண்டில் வளமான தமிழகத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்வதிலும், தமிழக முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதிலும் அரசியல் இருக்கிறது.

    இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பங்கேற்று இருக்க வேண்டும். அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்காததன் மூலம் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறி விட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால் முதலமைச்சர் மக்கள் தேவையை நிறைவேற்ற தவறி விட்டார்.

    மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் முதல் மந்திரிகளுக்கு மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

    மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை. எந்தெந்த மாநிலத்திற்கு நிதி தேவையோ அந்தந்த மாநிலத்திற்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்குகிறார்கள். தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸின் வேண்டுகோள். கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை, கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). இவருக்கு பிரேமா(47) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன், கெம்பட்டி காலனி 3-வது தெருவில் நகை பாலிஷ் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபாடு இருந்துள்ளது. தினமும் தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பணத்தை இழந்துள்ளார்.

    இழந்தை பணத்தை மீட்க கடன் வாங்கியும் விளையாடியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தையும் அவர் இழந்து விட்டார். கடன் ஏற்பட்டால் ராதாகிருஷ்ணனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர், நகை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் சயனடை குடித்து விட்டார்.

    சிறிது நேரத்தில் மயங்கிய அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அவரது மனைவி, மகள் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாஜ்பாய் பிரதமராக இருந்த 98-ம் ஆண்டும் இவர் நீலகிரி எம்.பியாக இருந்தார்.
    • தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மாதன்(வயது93).

    இவர் அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக வீட்டில் இருந்தபடி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11.10 மணிக்கு வீட்டில் இருந்த மாஸ்டர் மாதன் காலமானார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இன்று காலை அவரது வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் மாதன் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மாஸ்டர் மாதன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 98 மற்றும் 99-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார். இதில் வாஜ்பாய் பிரதமராக இருந்த 98-ம் ஆண்டும் இவர் நீலகிரி எம்.பியாக இருந்தார்.

    அதுமட்டுமின்றி தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

    மாஸ்டர் மாதனுக்கு சரஸ்வதி அம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

    • சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல்.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார்.

    இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்பிடிப்பு பகுதிககள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணை முழு கொள்ளவை எட்டியது.

    தற்போது மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதனால் நேற்று இரவு முதலே பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி சுமார் 20000 கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது.

    தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக, நேற்று வரை 85 அடியாக இருந்து வந்த பில்லூர் அணை இன்று காலை 93 அடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்ததால் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, பில்லூர் அணையில் இருந்து அணைக்கு வரும் நீர்வரத்தான 20 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதுமாக ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    ஆற்றல் தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    ×