என் மலர்
சென்னை
- டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக தொடர்கிறது.
- ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், தனியார் மதுபான நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக தொடர்கிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே. டாஸ்மாக் ஒப்பந்ததாரர் தலைமை அலுவலகம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.
ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கால்ஸ் மதுபான ஆலையில் நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- மீனவர்களின் விசைப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்கள் 14 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்:
-செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்கு கூட பாலியல் தொல்லை
-பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை
-பரமக்குடியில் பட்டப்பகலில், நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
-மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்து
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி என்பது யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காப்பதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.
நாள்தோறும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் திரு. @mkstalin
, மக்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத விஷயங்களை முன்னிலை படுத்தி, இதுபோன்ற சம்பவங்களை கடந்துவிட முனைவது, தமிழ்நாட்டின் மகளிருக்கு இழைக்கின்ற மன்னிக்கமுடியாத துரோகம்! இது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அந்த இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு "போலி போட்டோஷூட் அப்பா"வை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
- லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார்.
இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா இன்று லண்டன் புறப்பட்டார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய திரையுலகின் இசைத்துறையில் மூன்று தலைமுறையாக கோலோச்சி வருகிற இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு இந்திய இசையமைப்பாளரால் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் முழுமையான மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான "வேலியன்ட்" இசையை லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கிராமப்புரங்களில் இருந்து தொடங்கிய தனது இசைப்பயணத்தை தற்போது உலக அரங்கில் எடுத்து சென்று தனக்கென தனி முத்திரை பதித்து, சாதனைகள் பல படைத்து இன்னும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும், இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு மு.க.ஸ்டாலின் ?
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது தொடர்பாக அண்ணாமலை தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு மு.க.ஸ்டாலின் ?
ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள்.
வெட்கக்கேடு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் விருந்தளிக்க உள்ளார்.
- 15 பள்ளிவாசல் இமாம்களுக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுப்பு.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார்.
இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, டேபிள், நாற்காலி எதுவும் இன்றி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் தரையில் அமர்ந்து நோன்பு திறந்து தொழுகையில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள இஃப்தார் நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15 பள்ளிவாசல் இமாம்களுக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய் வருகை ஒட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
- தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு.
புதிய வருமான வரிச் சட்டம் 2025-க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
வங்கி, முதலீட்டு கணக்குகள், கம்ப்யூட்டர்களில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பாஸ்வேர்டு எதுவும் தேவைப்படாமல் உடைத்து உள்ளே சென்று சோதனையிடும் அதிகாரம் புதிய வருமான வரிச் சட்டம் பிரிவு 247-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் சமூக வலைதள கணக்குகள், இமெயில்களில் அவர்களின் பல அந்தரங்கமான விஷயங்கள், வருமான வரி அதிகாரிகளுக்கு தேவையில்லாத பல தகவல்கள் இருக்கும்.
மேலும், சிலர் தொழில் ரகசியம், தொழில் யுக்திகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்கள், இமெயில்கள் வைத்திருப்பார்கள். அவை அனைத்திலும், வருமானவரி அதிகாரிகள், அவர்களது அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்து தகவல்களை சேகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 19(1) (ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்குவதற்கு ஆளும் ஒன்றிய அரசு இதுபோன்று அதிகாரத்தை அளித்துள்ளதோ என சந்தேகமாகவுள்ளது.
தேவைக்கு அதிகமான அதிகாரமாகவே கருதப்படுவதால் இந்த மாற்றங்களை ஒன்றிய அரசு விலக்கிக் கொண்டு, புதிய வருமான வரிச் சட்டம் 2025 சட்டத்தை அமல்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மிகச் சிறந்த பத்திரிகையாளரான நக்கீரன் கோபாலுக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
- நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் கலைஞர் எழுதுகோல் விருது பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், தொலைக்காட்சி நெறியாளர் சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும். விருது பெற்ற அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
பத்திரிகை துறையில் புலனாய்வு செய்து செய்திகளை சேகரித்து துணிச்சலுடன் வெளியிடுவதில் சாதனைகளை புரிந்தவர் நக்கீரன் கோபால்.
பெயருக்கு ஏற்றாற்போல் யார் குற்றம் செய்தாலும் அதை கண்டிக்கின்ற வகையில் செய்திகளை வெளியிடுவதில் தனித்தன்மையுடன் செயல்படுபவர்.
கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் அவர்களை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற போது, அவரை மீட்பதற்காக அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், நக்கீரன் கோபால் அவர்களை காட்டிற்குள் அனுப்பித் தான் மீட்டார் என்பதை எவரும் மறக்க இயலாது.
அன்றைக்கு மிகுந்த துணிச்சலோடு காட்டிற்குள் சென்று வீரப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, நடிகர் ராஜ்குமாரை மீட்டததனால் தமிழக - கர்நாடக மக்களிடையே நிலவிய பதற்றத்தை தவிர்த்து நல்லிணக்கம் ஏற்பட தனது உயிரை பணயம் வைத்து செயல்பட்டவர் நக்கீரன் கோபால்.
மிகச் சிறந்த பத்திரிகையாளரான அவருக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தொலைக்காட்சி ஊடக நெறியாளராக செயல்பட்டு, விவாதங்களில் கருத்து மோதல்களை அனைவரையும் கவருகிற வகையில் நடத்துவதன் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்றவர்.
நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும். அந்த வகையில் சுகிதா சாரங்கராஜ் அவர்கள் நமது பாராட்டுக்குரியவராவார்.
நக்கீரன் கோபால் அவர்களுக்கும், சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் கலைஞர் எழுதுகோல் விருது மூலம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
- 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான விருது.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவாக ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிய சிறந்த இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
அதன்படி, கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, பெண்மையைப் போற்றும் வகையில், 2023-ஆம் ஆண்டின் சிறந்த பெண் இதழியலாளருக்காக பிரபல நியூஸ் சேனலின் செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலைஞர் எழுதுகோல்' விருதினை வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து 'நக்கீரன்' கோபாலுக்கும் முதலமைச்சர் 'கலைஞர் எழுதுகோல்'விருது வழங்கி கவுரவித்தார்.
- விசாரணைக்கு சென்ற காவலர்களை தாக்கியது மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டியது ஆகிய வழக்கில் இருவரும் கைது.
- ஒரு வழக்கில் இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் போலீசார் சம்மன் நோட்டீஸ் ஒட்டினர். இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி பகலில் ஒட்டி சென்றார்.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (பிப்ரவரி) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பாதுகாவலர் உள்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மற்றொரு வழக்கில் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமின் மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார்.
- ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆகும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். நாளை மறு நாள் லண்டனில் அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், சிறப்பாக அமையவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார். எனினும், சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் வேலியண்ட் படைத்திருக்கிறார். இதன் மூலம் ஜோசப் ஹேடன், வூல்ப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன், பிராண்ஸ் சூபேர்ட், பீலிக்ஸ் மெண்டல்சன் உள்ளிட்டோரின் வரிசையில் அவரும் இடம் பெறுவார். இது அவருக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆகும்.
உண்மையில் சிம்பொனி இசை மட்டுமல்ல. இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை தான். அதை வேலியண்ட் நிரூபிக்கும். வாழ்த்துகள் ராஜா!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வேளாண் விற்பனை குழுக்கள் மூலமாக 40-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு 1 சதவீதம் செஸ் வரி ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது.
- மக்காச்சோளத்திற்கு 1 சதவீதம் செஸ் வரியை விதித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண் விற்பனை குழுக்கள் மூலமாக 40-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு 1 சதவீதம் செஸ் வரி ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது. மக்காச்சோளத்திற்கு ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, கோவை, நாகை மாவட்டங்களில் 1 சதவீதம் செஸ் வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது.
தற்போது நாமக்கல், சேலம், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மக்காச்சோளத்திற்கு 1 சதவீதம் செஸ் வரியை விதித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்.
தமிழக அரசு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 3,500 க்கு விற்றால் மட்டுமே விவசாயிகள் பயன் பெறக்கூடிய நிலையில், தற்போது ரூ. 2,800 க்கு விற்று வந்த மக்காச்சோளம், இப்போதைய செஸ் வரி விதிப்பால் ரூ. 2,300 க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 500 நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே வேளாண் விற்பனை வணிகத்துறையின் பட்டியலிடப்பட்டுள்ள 40 பொருட்களுக்கும், விவசாய நிலங்களில் விவசாயிகள், வியாபாரிகள் இடையே நேரடியாக நடைபெறும் விற்பனைக்கு முழுமையாக வரி விலக்களிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






