என் மலர்tooltip icon

    சென்னை

    • தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது.
    • தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.

    தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்றது ஏன்? என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை (2006) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது. இதில் உள்ள நிறைய விஷயங்களை இந்த முறை பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக தே.மு.தி.க சார்பாக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறினோம்.

    முதியோர் இல்லம், காலை சிற்றுண்டி திட்டம் ஆகிய திட்டங்களை தே.மு.தி.க. வலியுறுத்தி இருந்தது.

    தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.

    விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், முதியோர்கள் இல்லம், வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்ததால் பட்ஜெட்டை வரவேற்றோம் என்று கூறினார்.

    • கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.
    • ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான அன்பழகன் தனது தொகுதிக்குட்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி கோவிலில் திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா ? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    உறுப்பினர் குறிப்பிட்டு உள்ள கோவிலுக்கு அடுத்த மாதம் 11-ந்தேதி பாலாபிஷேகம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆண்டு தோறும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி 2022- 2023-ம் ஆண்டில் ரூ.100 கோடியும் 2023-2024-ம் ஆண்டில் 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர உபயதாரர் நிதியாக ரூ.60 கோடியும் திருக்கோவில்கள் சார்பாக ரூ.70 கோடியும் கிடைக்கப் பெற்று மொத்தம் ரூ.430 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.

    ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஏற்கனவே 100 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 70 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் 100 கோவில்கள் கும்பாபிஷேகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. சுவாமிமலையில் மின் தூக்கி சீரமைக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதில் உறுப்பினர் ஜவாஹிருல்லா உடன் நானும் பங்கேற்க உள்ளேன்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

    • சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை.
    • திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநிலை தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.

    ஒரு ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.

    இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என கூறியுள்ளார். 



    • பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் பேச அனுமதி கேட்டார்.
    • சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதத்தின்போது செங்கோட்டையன் பேச அனுமதி கேட்டார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதற்கு பதிலடி கொடுப்பதற்கு ஆயத்தமான செங்கோட்டையனுக்கு கடைசி வரை வாய்ப்பு தரப்படவில்லை.

    3, 4 முறை கையை உயர்த்தியும் சபாநாயகர் செங்கோட்டையனை கண்டு கொள்ளாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

    செங்கோட்டையனை பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

    • சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.
    • இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 29 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதம் ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 10 சதவீதம் ஆக உயர்த்தி அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தெலுங்கானாவில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மையாகவே சமூக நீதிப் புரட்சி தான்.

    சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா?
    • நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம் என்று கூறினார்.

    நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும் என செல்லூர் ராஜூக்கு டிஆர்பி ராஜா பதில் அளித்தார்.

    ஓசூர் ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதை தான் செய்தோம், தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது.
    • அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதி கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பிரச்சனைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துமா ?

    அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் அமலாக்கத்துறையை தூண்டிவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆற்றல்மிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது. இதை எதிர்கொள்கிற பேராற்றலும், துணிவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.

    தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால் அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேர் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக பயணிப்பவர்கள், ஒருவழிப்பாதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாகன சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போதிலும் கடந்த 2 மாதங்களாக மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2½ மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து சந்திப்புகளில் ஸ்டாப் லைன் என்று அழைக்கப்படும் நிறுத்த கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேரும் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். 3 ஆயிரத்து 328 பேர் செல்போன் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டியதால் பிடிப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதாக 7 ஆயிரத்து 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 33 ஆயிரத்து 331 பேர் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்று விடுபட்டு இருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாமல் அவர்களை ஓட்டிச்சென்ற 2 ஆயிரத்து 26 1 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை போலீசார் வாகன சோதனை மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பிடித்து வருகிறார்கள்.

    இதன்படி சென்னை மாநகரில் தாமாகவே முன் வந்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 293 சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மூலமாகவும் வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் எந்த சந்திப்பாக இருந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை இயக்காவிட்டால் நிச்சயம் மாட்டிக் கொள்வது உறுதி. இதுபோன்ற அபராதங்களை தவிர்க்க வேண்டும் என்றால் விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வாகனங்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
    • காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதில், வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.

    நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச்செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும். ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கிடையே கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைபிடிக்கவில்லை.

    காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நடைபயிற்சி செல்லும் போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும் போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதாவது, உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, வாய்மூடி அணிவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும். பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளில் அபராதம் குறித்து தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
    • ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

    இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22-ந்தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக்குழுவினர் 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    • ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
    • மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகரில் ஆட்டோக்களில் இப்போது யாருமே மீட்டர் போடுவது கிடையாது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால், தோராயமாக ஒரு தொகை கேட்பார்கள். பயணிகள் அப்போது பேரம் பேசுவார்கள். இதில் உத்தேசமாக ஒரு தொகையை கேட்டு அதன் பிறகுதான் பயணம் செய்ய முடியும்.

    இதுதான் இன்றைய யதார்த்தம். ஓலா, ஊபர், ராபிட்டோ, ஆட்டோ, கார்களில் அந்த அளவுக்கு பேரம் பேசுவதில்லை. ஒரு சிலர் தான் கூடுதலாக 20 ரூபாய் 50 ரூபாய் கேட்பது இப்போது தொடர் கதையாகி வருகிறது.

    இது பற்றி ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்கிறார்கள். தவறு எங்கள் மீது கிடையாது. அரசு மீதுதான் என்று கூறுகின்றனர். இப்போது ஆட்டோ சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்து உள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    இன்றைய காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசு கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.

    2013-ம் ஆண்டுதான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கி.மீ.க்கு ரூ.12 என்றும் உயர்த்தி நிர்ணயித்தது அன்றைய அரசாங்கம். இப்போது விலைவாசி பல மடங்கு ஏறி விட்டது. அன்றைக்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது.

    எனவே ஆட்டோ கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று நிர்ணயிக்குமாறு கேட்டு உள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் தாருங்கள் என்கிறோம். அரசு இதில் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.

    எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.

    எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணாசாலை, தாராபூர் டவர் சாலை, தாராபூர் டவர் ஆகிய இடங்களில் நாளை காலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறோம். இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
    • இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது.

    முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் சமீபகாலமாக அ.தி.மு.க. கூட்டங்களை புறக்கணித்து வருகிறார்.

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதேபோல் இன்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையில் கலந்து கொள்ளவில்லை.

    நான்கு நாட்கள் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன், சட்டசபையின் 4-வது நாள் அமர்வில் பங்கேற்றுள்ளார்.

    நேற்றைய தினம் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சட்டசபை வளாகத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் செங்கோட்டையனை சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது. மேலும், செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான கருத்து வேறுபாடு தொடர்வதாகவே பார்க்கப்படுகிறது.

    ×