என் மலர்
சென்னை
- இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.
- பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்றபோது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.
அதேபோன்று ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு இன்று விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை.
இவ்வாறு சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
- கேரள மாநில முதல்வர், தெலுங்கானா மாநில முதல்வர் பங்கேற்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் கே.டி. ராமராவ் பங்கேற்கின்றனர். அதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளம் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்" என்றார்.
- நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தர்மசெல்வன் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
- அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் கடந்த மாதம் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன் பேசியபோது எடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் தர்மசெல்வன் "நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது.
நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன்.
என்னிடம் தலைவர், 'அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி நீ சொல்வதை யாரும் கேட்கவில்லையென்றால், எனக்கு லெட்டர்பேடில் எழுதி கொடு' என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நீங்கள் எப்படியிருந்தீர்களோ, ஆனால் இனி எதுவாக இருந்தாலும் எனக்கு தெரிய வேண்டும்" என பேசியுள்ளார்.
- இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.
- பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது வேதனை அளிக்கிறது.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
- முதல்வர் மருந்தகங்களை திறந்து பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு- ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.
எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
- சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக தனக்கெதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கெதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முதல் தகவல் அறிக்கைகள் எங்கே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, எந்த விவரங்களும் இல்லாமல் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
- எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து, விஜயகாந்த் இல்லாமல் எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன். ஆனால் அவர்கள்தான் இந்த பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர் என்று கூறினார். மேலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, 2026 மார்ச் 18-ந்தேதி என்னுடைய அடுத்த பிறந்தநாளன்று தெளிவாக சொல்கிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
- அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல் கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு
- பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?
கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபுதான் இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.
இவ்வாறு அண்ணாலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
- இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காலை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.
- 50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.
சென்னை:
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க) பேசினார். அவரது ஒவ்வொரு கேள்விக்கும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்தனர்.
செல்லூர் ராஜூ-அண்ணாவின் கோட்பாடுகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் நிதி நிலை அறிக்கையில் ஒன்று கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.
செல்லூர்ராஜூ- கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதி தான் செலவு செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் ஐ. பெரியசாமி- நீங்கள் பசுமை வீடு திட்டம் அறிவித்து இருந்தீர்கள், அதை முழுமையாக செயல்படுத்தவில்லை. நீங்கள் அறிவித்ததை நாங்கள் கட்டி வருகிறோம்.
எடுத்த உடனே எந்த திட்டத்துக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. படிப்படியாக தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
செல்லூர் ராஜூ- பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது.
50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி- அ.தி.மு.க ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. நிறைய பள்ளிகள் கட்டப்பட்டு உள்ளது.
செல்லூர் ராஜூ- நாங்கள் 2016-ல் தனித்து நின்று வென்றோம்.
அமைச்சர் எ.வ.வேலு- இனி தமிழ்நாட்டில் தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது.
செல்லூர் ராஜூ- தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எத்தனை பஸ்கள் வாங்கப்பட்டது என விளக்கப்படவில்லை.
அமைச்சர் சிவசங்கர்- சனிக்கிழமை காலை வந்தால் எத்தனை பஸ்கள் வாங்க உள்ளோம் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மினி பஸ்களுக்கான அனுமதி தொடர்பாக வழித்தடங்கள் வழங்கப்பட்டு விட்டது. மே மாதம் முதல் வாரத்தில் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
செல்லூர் ராஜூ- 4 ஆண்டுகள் ஆகி விட்டது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. சரண்டர் விடுப்பு அறிவிப்பை இந்த ஆண்டு அறிவித்து இருக்கிறீர்கள். இது அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வர வேண்டியது
அமைச்சர் தங்கம் தென்னரசு- கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சலுகைகளை நீங்கள் தான் நிறுத்துனீர்கள். இப்போது ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறீர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சிறையில் அடைத்தது யார்? ஆட்சியில் என்பது மனசாட்சி இருந்தால் தெரியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- 24-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது.
- தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்றது ஏன்? என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை (2006) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது. இதில் உள்ள நிறைய விஷயங்களை இந்த முறை பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக தே.மு.தி.க சார்பாக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறினோம்.
முதியோர் இல்லம், காலை சிற்றுண்டி திட்டம் ஆகிய திட்டங்களை தே.மு.தி.க. வலியுறுத்தி இருந்தது.
தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், முதியோர்கள் இல்லம், வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்ததால் பட்ஜெட்டை வரவேற்றோம் என்று கூறினார்.






