என் மலர்
சென்னை
- தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது.
- சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது மோடி போடும் வரி இல்லை. எல்லா மாநில நிதியமைச்சர்களும் அடங்கியதுதான் கவுன்சில். நடுத்தர மக்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்ற வாதம் தவறானது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாகவே வரி இருந்தது. முன்னதாக இருந்ததை விட ஜிஎஸ்டி வந்த பின் வரி விகிதம் குறைந்துள்ளது.
* தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டு வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது.
* சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.
* நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
* நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களை நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா? இல்லை பாஜக கூட்டணிக்காக?
* குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று
* தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வட மாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை.
- கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
- தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதை டி.ஜெயக்குமார் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை.
அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகி விட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை கழகத்தில் தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
கூட்டணி அமைந்த பிறகு நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்? தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி தொடர்பான அதிருப்தியை கட்சியினரிடம் போக்குவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.
- முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது.
- போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பணியாளர்கள், உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை.
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவர்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2, 2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதென்பது மிகவும் வருந்தத்தக்கது.
மே 2 ம்தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது.
அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசாணை எண்.117, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை நாள்: 30.04.2025-ன்படி குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி மையங்கள்) மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25-ம் நாள் முடிய 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
தேசிய விடுமுறை, பண்டிகை நாட்களுக்கான விடுமுறை , உள்ளுர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளையும் கணக்கிட்டு, 300 நாட்கள் கண்டிப்பாக மைய செயல்பாடுகளும் அதன் மூலம் முன் பருவ பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால், அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு 2022ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாட்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது.
குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் THR – (TAKE HOME RATION) – ஆக வழங்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை.
- சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டும்.
திமுக ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள, செய்தியை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன்.
தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் திமுக அரசு கண்டுபிடிக்காத நிலையில் கொங்குப் பகுதியில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு, திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையையும் நமக்கு உணர்த்துகிறது.
எனவே, தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைக் குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளதால், இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்வதுடன், சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
பிரபல தனியார் மையம் ஒன்று நீட் மற்றும் ஐ.ஐ.டி. தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த மையம் சார்பில் பெற்றோர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண வசூலும் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் திடீரென மையத்தை மூடியதால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குனர்கள் மீதும் கீழ்பாக்கம் தனியார் மையக் கிளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருங்கிணைந்த பயிற்சி என்ற அடிப்படையில் பெற்றோர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு மோசடி அரங்கேறி இருக்கிறது.
கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் தனியார் பயிற்சி மைய தலைமையகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திடீரென மையங்கள் மூடப்பட்டது தெரிய வந்து உள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் 6 மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- 2,064 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
- 10 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
சென்னை:
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், விவசாயிகளுக்கு "நம்மாழ்வார்" பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அந்த வகையில் 2024-ம் ஆண்டு 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்குமாருக்கு முதல் பரிசாக ரூ. 2½ லட்சம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசுக்கு 2-ம் பரிசாக ரூ.1½ லட்சம் பரிசுத் தொகை மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாசுக்கு 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் ரூபாய் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் வழங்கி சிறப்பித்தார்.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை வேளாண்மை-உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,799 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 265 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், என மொத்தம் 2,064 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?
- திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?
பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?
திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டுமொத்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதலமைச்சர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள் என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
- அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28-ந்தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து 150 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.
அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
- கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயர்ந்து, வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நல்லதல்ல.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை.
கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களை அமைச்சர் துரைமுருகன் கடந்த 27-ந்தேதி அழைத்துப் பேசினார். அப்போது சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன் ஒன்றுக்கு ரூ.33 எனக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட ஜல்லி மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயர்ந்து, வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நல்லதல்ல.
எனவே, அரசு இந்த சிக்கலில் தலையிட்டு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கனிமங்கள் மீதான கட்டணங்களை குறைப்பது குறித்த அரசாணை வெளியிடப்படாதது தான் சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுவதால், அரசாணையை உடனடியாக வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
- கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, அண்ணாநகர், நுங்கம்பாக்கம் உள்பட 10 இடங்களில் வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு தனியார் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக நிறுவனம் சார்பில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 1 மணி நேரத்துக்கு இரு சக்கரவாகனங்களுக்கு 5 ரூபாய், 4 சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், பஸ்-வேன்களுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கான ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பாக 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
- பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, ஏப்ரல் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 6,15,850 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,447 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 128 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 39,11,883 பயணிகள் (Online QR 1,45,753; Paper QR 19,12,904; Static QR 2,65,787; Whatsapp - 5,83,351; Paytm 4,09,358; PhonePe – 3,29,949; ONDC – 2,64,781), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 42,30,279 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளது.
- 29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
- சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:
1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.
9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.
29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.
14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.
இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.






