என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது- முதலமைச்சர் வழங்கினார்
    X

    உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது- முதலமைச்சர் வழங்கினார்

    • 2,064 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
    • 10 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.

    சென்னை:

    2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், விவசாயிகளுக்கு "நம்மாழ்வார்" பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அந்த வகையில் 2024-ம் ஆண்டு 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக, 2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்குமாருக்கு முதல் பரிசாக ரூ. 2½ லட்சம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசுக்கு 2-ம் பரிசாக ரூ.1½ லட்சம் பரிசுத் தொகை மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாசுக்கு 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் ரூபாய் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் வழங்கி சிறப்பித்தார்.

    இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை வேளாண்மை-உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,799 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 265 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், என மொத்தம் 2,064 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×