என் மலர்tooltip icon

    சென்னை

    • மாநில அளவில் துணைச்செயலாளர் பதவிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • அனகை முருகேசன் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர் ஆவார்.

    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தே.மு.தி.க. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து தே.மு.தி.க.வில் புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா நியமித்துள்ளார்.

    மீண்டும் பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பொருளாளராக எல்.கே. சுதீஷ், செயலாளராக பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளராக விஜய காந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மாநில அளவில் துணைச்செயலாளர் பதவிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில், இந்த புதிய பதவிகள் நியமனத்தால் இரண்டு தே.மு.தி.க. முன்னாள் எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.

    தே.மு.தி.க. செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இருந்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் விஜயகாந்த் மன்றத்தை தொடங்கிய காலத்தில் இருந்து அவரோடு பயணித்து வந்தவர் ஆவார்.

    விஜயகாந்த் தே.மு.தி.க. தலைவராக இருந்தபோது பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

    இந்த நிலையில் மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவருக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பொறுப்பு வகித்து வந்த அவர் இந்த முறை மீண்டும் அதுபோன்ற ஒரு பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அதுபோன்ற பதவி எதுவும் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் காரணமாக அனகை முருகேசன் கட்சியிலிருந்து விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இது பற்றி அனகை முருகேசனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-

    கேப்டன் மன்றம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே நான் பணியாற்றி வருகிறேன். 43 ஆண்டுகளுக்கும் மேலாக மன்றம் மற்றும் தே.மு.தி.க. பணிகளில் ஈடுபட்டு கட்சிக்காக விசுவாசத்தோடு செயல்பட்டு வருகிறேன். விஜயகாந்த் தலைவராக இருந்த போது பொருளாளராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்திருக்கிறேன்.

    தற்போது மாநில அளவில் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்னைவிட இளையவர்கள்தான்.

    மாநில அளவில் பொறுப்பு கிடைக்காததில் எனக்கு சிறிய மனம் வருத்தம் உள்ளது. என்னுடன் பயணிக்கும் தே.மு.தி.க.வினருக்கும் அந்த வருத்தம் உள்ளது.

    இதற்கெல்லாம் கட்சி வேண்டாம் என்று வெளியில் செல்வதற்கு நான் தயாராக இல்லை. தே.மு.தி.க.விலேயே தொடர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான நல்ல தம்பியும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நல்ல தம்பிக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதவியை நல்ல தம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதாவுக்கு நல்ல தம்பி பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தர்மபுரியில் நடந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த கேப்டனின் மறுஉருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புதம்பி விஜயபிரபாகரனை கழக இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டசபையில் கழக தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.

    எனவே எங்களின் காவல் தெய்வம் அண்ணியின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை, என்றைக்கும் நான் கழகத்தின் கடைக்கோடித் தொண்டன் எனபதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும்.

    நீங்கள் வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத் தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மனவருத்தத்திலும் கூறவில்லை. மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு நல்லதம்பி கூறியுள்ளார்.

    தே.மு.தி.க.வில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தே.மு.தி.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தே.மு.தி.க.வில் இருந்து ஏற்கனவே பலர் விலகி மாற்று கட்சிகளில் சேர்ந்துள்ள நிலையில் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மகளிர் விடியல் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக ஏப்ரல் மாதத்தில 28-ந்தேதியில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 13.59 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

    மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.
    • இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

    கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.

    அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100°F க்குமேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலை நினைத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    • நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கு விற்கப்பட்டது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 22-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 23-ந்தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,120-க்கு விற்கப்பட்டது.

    மறுநாள் தங்கம் விலை ரூ.72,040 ஆக குறைந்தது. தொடர்ந்து 4 நாட்கள் அதே விலையே நீடித்தது. கடந்த 28-ந்தேதி தங்கம் விலை மேலும் குறைந்து ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29, 30-ந்தேதிகளில் சற்று உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையானது.

    அட்சய திருதியை முடிவடைந்த நிலையில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும் சவரன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது. 

    அதே நேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200

    30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-05-2025- ஒரு கிராம் ரூ.109

    01-05-2025- ஒரு கிராம் ரூ.109

    30-04-2025- ஒரு கிராம் ரூ.111

    29-04-2025- ஒரு கிராம் ரூ.111

    28-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்பட மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருக்கிறது. மாணவர்கள், கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    • பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 16 பெட்டிகளாக மாற்றப்பட்டது.
    • தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. சேவை தொடங்கப்பட்டபோது 8 பெட்டிகள் மட்டுமே இருந்தது. பின்னர் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 16 பெட்டிகளாக மாற்றப்பட்டது.

    இதற்கிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்க எழும்பூர்-நாகர்கோவில் இடையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் மொத்தம் 20 பெட்டிகளாக மாற்றப்பட இருக்கிறது.

    வரும் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மதுபோதையில் இருந்த காவலர் மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சென்னை அயனாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான 33 வயது பெண் கடந்த 30-ந்தேதி நள்ளிரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் சென்றபோது, இவர்களின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், தேவையின்றி 'ஹாரன்' அடித்தும், அப்பெண்ணிடம் ஆபாச சைகையும் காட்டியுள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஓட்டேரி காவல் நிலையம் அருகே அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவைச் சேர்ந்த காவலர் தினேஷ் என்பது தெரியவந்தது. மேலும், மது போதையில் இருந்துள்ளார்.

    இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட தினேஷ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பெண்ணை நோக்கி ஆபாச சைகை செய்த காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தன்னை தாக்கியதாக காவலர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் புகாரளித்த பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுபோதையில் இருந்த காவலர் மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார்.
    • அவரை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

    சென்னை:

    தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா மே 3-ம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளாா். அப்போது மாநில நிா்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தவுள்ளாா் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார். அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

    எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு.
    • நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி.

    தமிழகத்தில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தடுப்பு நவடிக்கைகளை் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 முக்கிய உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.

    அதில், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உடல்நலம் பாதித்து சாலைகளில் திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தீர்மானம் நிறைவேற்றம்.

    தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அதன்படி, மக்களிடம் நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தேர்தலின்போது 525 வாக்குறுதி அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் தவறான தகவல் பரப்பும் திமுகவுக்கு எதிர்ப்பு என தீர்மானம் நிறைவறே்றம்.

    நீட் விவகாரத்தில் இனியும் ஏமாற்றாமல் திமுக தலைவர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.

    மக்களின் கோபத்தை மறைக்க கல்விக்கொள்ளை, மொழிக் கொள்கை, கச்சத்தீவு மீட்பு, மாநில சுயாட்சி என்று திமுக நாடகம் என தீர்மானம்.

    நீர் மேலாண்மையை முறையாக பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.

    நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு அனுமதி பெற்றுத்தந்த இபிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றம்.

    அதிமுக என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என உறுதி அளித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

    திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

    நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி முதல் குப்பை வரி வரை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.

    பெண்களை ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொண்ட இபிஎஸ்க்கு பாராட்டு என தீர்மானம்.

    சமூக விரோத செயல்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் என தீர்மானம் நிறைவேற்றம்.

    மக்கள் நலன்களை புறந்தள்ளிவிட்டு சுய விளம்பர ஆட்சி, போட்டோ ஷூட் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம் என தீர்மானம்.

    பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என தீர்மானம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை.
    • உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு.

    சாதிச்சான்றிதழ்கள் முழுமையான விசாரணைக்கு பிறகே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சாதிச் சான்றிதழ்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

    மேலும், பட்டியலின, பழங்குடியினர் சாதிசான்றிதழ்கள் வழங்க விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

    சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கான விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு அமைக்க நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளது.

    குழுக்கள் விதிகளின்படி விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • 21.76 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்.
    • மத்திய அரசின் நிதி பங்களிப்பிற்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் அனுமதி.

    சென்னை, கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையே சென்னை வெளிவட்ட சாலையில் மெட்ரோ ரெயில் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, 21.76 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    ரூ.9928.33 கோடி மதிப்பீட்டில், 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிற்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ×