என் மலர்tooltip icon

    சென்னை

    • டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சென்னை, சூளைமேடு, கல்யாண புரத்தில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகத்தில அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழக கவர்னர் வேந்தர் பதவிக்குரிய கண்ணியத்தை தவறவிட்டுள்ளார்.
    • ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்கு உரியது என்றார்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழாவினை தமிழ்நாடு கவர்னர்-அதுவும் கவர்னர் மாளிகையிலேயே நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்கலைக்கழகங்கள் தோறும் மதவாத பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கவர்னர், ஊழல் வழக்கில் உள்ளவரையும்- அதிலும் குறிப்பாக பினாமி கம்பெனியை உருவாக்கி ஊழல் புகாரில் சிக்கியுள்ளவரை எந்த முகத்தை வைத்துக்கொண்டு கவர்னர் மாளிகையில் வரவேற்றார்?

    முறைகேட்டுப் புகாரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய விசாரணைக்கு ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர். துணைவேந்தராக இருக்கும்போதே சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரைத் திட்டியதால் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழான வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

    விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைதுசெய்ய நேரிடும் என்று ஐகோர்ட்டாலேயே எச்சரிக்கப்பட்டவர். இவருக்கு பதவிக்காலம் முடிந்த பின்னரும் பணி நீட்டிப்பு வழங்கியதோடு - இப்படிப்பட்ட துணைவேந்தர் ஒருவருக்கு ராஜ்பவனில் பிரிவு உபசார விழாவினையும் நடத்தியதன் மூலம் "வேந்தர்" என்ற பொறுப்பில் இருப்பதற்கான தகுதியை கவர்னரே இழந்துவிட்டார் என்றுதான் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

    தி.மு.க. ஆட்சிக்கு எதிராக- தனது மதவாத கருத்துக்களைப் பரப்ப பாடுபட்ட துணைவேந்தருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ள கவர்னர், வேந்தர் பதவிக்குரிய கண்ணியத்தை தவறவிட்டுள்ளதோடு- மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு எல்லாம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    உயர்கல்வியின் மாண்பை சீர்குலைத்துள்ளார். ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்குரியது மட்டுமின்றி- பல்கலைக்கழக வரலாற்றில் கவர்னர் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் என தெரிவித்துள்ளார்.

    • மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.
    • எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    சென்னை புரசைவாக்கத்தில் பிரபல இனிப்பகம் உள்ளது. இந்த இனிப்பகத்தில் ரவிசங்கர் என்பவர் இனிப்பு வாங்கும்போது கிலோவுக்கு ரூ.25 கூடுதலா வசூலித்ததாக குற்றம்சாட்டினார்.

    இதனால், இனிப்பகத்திற்கு எதிராக ரவிசங்கர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த புகார் மனுவில்,"தான் கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் வாங்கயதாகவும், இதற்கு ரூ.425 பணம் பெறுவதற்கு பதிலாக ரூ.450 வசூலித்தனர்" என்றும் குற்றச்சாட்டினார்.

    மேலும், "இனிப்புக்கு கூடுதலாக ரூ. 25 வசூலித்ததில் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.

    அப்போது," மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இனிப்பகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், திருப்பி அளிக்கப்பட்டபோதும், இனிப்பகத்தின் செயல்பாடு, சேவை குறைபாட்டை காட்டுகிறது" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • கடந்த தேர்தலில் பலாப் பழ சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்றேன்.
    • உண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கட்சி மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று நிர்வாகிகளின் கருத்துகளை கேட்க உள்ளோம்.

    மாவட்ட செயலாளர்கள், மக்களை சந்தித்து கருத்தை கேட்டறிந்த பின்னரே கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் தான் போட்டியிட்டோம். எங்களைப் பொருத்தவரை என்டிஏ கூட்டணியில் தொடர்கிறோம்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்காலிகமாக தான் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் என்னை எதிர்த்து பலர் போட்டியிட்டதால் தான் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டேன்.

    கடந்த தேர்தலில் பலாப் பழ சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்றேன்.

    உண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது.

    பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதன்மைத் தேர்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது.
    • 13வது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளது.

    தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.

    இதேபோன்று, கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர், அமைச்சுப் பணியாளர்களில் உதவியாளர்கள், இளநிலை கணக்காளர் போன்ற பணியிடங்கள் குரூப் 2-ஏ பிரிவின் கீழ் வருகின்றன.

    அதன்படி, குரூப் 2 பிரிவில் 534 காலியிடங்களுக்கும், 2-ஏ பிரிவில் 2,006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர். தொடர்ந்து, முதன்மைத் தேர்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

    தொடர்ந்து 13வது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகள் 53 வேலை நாட்களில் தேர்வாணையத்தில் விரைவாக வெளியிட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    தேர்வு முடிவுகள் www.tnpsc.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

    • ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.வும் கரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.
    • கட்சி சார்பற்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக வரலாற்றில், உலகின் பல இடங்களில் நடைபெற்ற இனப்படுகொலைகளில் 2009-ம் ஆண்டில் இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாத அரசு உலக வல்லரசு நாடுகளிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு முப்படைகளையும் ஏவி கோரமான தமிழீழ இனப்படுகொலை நடத்தியது. அதில் தமிழர்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைக்கும்போதே நமது நெஞ்சம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

    தற்போது தமிழர் தாயகத்தில் 90 ஆயிரம் இளம் விதவைகள் இருக்கிறார்கள். ஐ.நா. சபை தலைவராக இருந்த பான் கி மூன், இலங்கைத் தீவில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றிய ஆராய மார்சுகி தாரீஸ்மென் தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சார்பில் அனுப்பினார். அந்தக் குழுவினர் தங்களது அறிக்கையில், ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரமாயிரம் இளம்பெண்கள், தாய்மார்கள் பாலியல் கொடுமைகளால் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.

    நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு முன்வரவில்லை என்பதோடு, தமிழர்களை அழிப்பதற்கு ஆயுத உதவி செய்தது. தமிழகத்தில் ஈழ உணர்வுள்ள மக்கள் அனைவரும் கொந்தளித்தனர்.

    மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆண்டு தோறும் சென்னை கடற்கரையில் ஆயிரக்கணக்கில் தமிழர்களைத் திரட்டி, மடிந்த ஈழத்தமிழர்களுக்காக நினைவஞ்சலி சுடர் ஏற்றும் கடமையைச் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.வும் கரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.

    இந்த ஆண்டும் வரும் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி சுடர்களை ஏந்தி வீரத்தியாகிகளான ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி புகழ் வணக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    தமிழ் உணர்வாளர்களும், ஈழத் தமிழ் பற்றாளர்களும், ம.தி.மு.க. கண்மணிகளும் 18-ந்தேதி மாலை 4 மணிக்கெல்லாம் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வருவதற்கும், கட்சி சார்பற்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.

    18-ந்தேதி தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதிய வேளையில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். 

    • அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, சட்டசபை தேர்தலில் தற்போது வரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. இதனிடையே, அ.தி.மு.க.-வுடன் த.வெ.க. கூட்டணி என்று கூறப்பட்டு வந்த நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணி அமைக்கலாம் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் விஜய் அறிவிப்பார் என்றும் கூறினார். 

    • மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
    • பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்த அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் சார்பில் ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பாஜகவின் கட்டளைப்படி தமிழக ஆளுநர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

    ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி இது. இது சட்டத்தின் மகத்துவத்தையும் அரசியலமைப்பின் விளக்கவுரையாளராக இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நேரடியாக சவால் செய்கிறது.

    * ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்?

    * மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறதா?

    * பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?

    நமது நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகள், நமது அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த சட்டப் போராட்டத்தில் இணையுமாறு அனைத்து பாஜக அல்லாத மாநிலங்களையும் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தப் போரில் நாம் நமது முழு பலத்துடன் போராடுவோம்.

    தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்! என்று கூறியுள்ளார்.

    • தி.மு.க.வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.
    • நாங்கள் யாரும் ஒரு போதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், கடந்த 4 ஆண்டுகள் ரகுபதி, முட்டுக்கொடுத்து கொடுத்து அ.தி.மு.க. தொண்டர்களிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போதுதான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் விதமாக, அமைச்சர் இலாகா கொடுத்துள்ளார் முதலமைச்சர். அந்த உற்சாகத்தில் பலத்த முட்டுகளுடன் நேற்று, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    யார் இந்த ரகுபதி? இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா கை காட்டவில்லை என்றால், அ.தி.மு.க. தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இவர் எங்கு இருந்திருப்பார்? இவருக்கு அரசியல் வாழ்வளித்த அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியை விடக் கேவலமானவர் தானே இந்த ரகுபதி?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உத்தரவிட்டார் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கும் தி.மு.க.-வுக்கும் சம்மந்தமே இல்லை என்று பச்சைப் பொய் பேசியவர் தானே இந்த ரகுபதி? இந்த ரகுபதியின் பொய்யால் சட்டப் பேரவையில் ஸ்டாலினே, ஞானசேகரன் தி.மு.க. பொறுப்பாளர் அல்ல, அனுதாபி என உருட்ட வேண்டிய நிலைக்குத் தானே தள்ளப்பட்டார்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் எப்.ஐ.ஆர். லீக் ஆனதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலின் அரசின் நடவடிக்கைகளை காரித் துப்பியதே, இதெல்லாம் மறந்துபோச்சா ரகுபதி? உங்கள் முதலமைச்சரை போன்றே, உங்களுக்கும் ஞாபக மறதியா?

    கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து, சார்ஜ் சீட் போட்டது அ.தி.மு.க. அரசு. கேரளா குற்றவாளிகளுக்கு வாதாடி ஜாமின்தாரராக இருந்தது தி.மு.க.வினர்.

    கொடநாடு வழக்கை விரைவில் முடியுங்கள் என்று தானே, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்? நான்கு ஆண்டுகளாக கொடநாடு வழக்கை விசாரித்து முடிக்க வக்கில்லாத ரகுபதிக்கு இது ஏன் புரியவில்லை?

    முக்கி முக்கி வராத நிதி, எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசியதும் வந்துவிட்டது என்ற கடுப்பு இருக்கத் தானே செய்யும்?

    அ.தி.மு.க.வால் அரசியல் அடையாளம் பெற்று, அ.தி.மு.க.வில் கொள்ளையடிப்பவர்களுக்கு இடமில்லை என்று தெரிந்ததும், தி.மு.க.வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.

    மக்களோடு மக்களாக நின்று, மக்களுக்கான அரசியலைச் செய்யும், எடப்பாடி பழனிசாமி மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

    நாங்கள் யாரும் ஒரு போதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை.

    1991-ல் சட்டமன்ற உறுப்பினரானபோது ரகுபதியின் சொத்து மதிப்பு என்ன? அதே ரகுபதியின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? பினாமி பெயர்களில் எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? இப்படி எண்ணிலடங்கா சொத்துக்களை வாரிக் குவித்த ரகுபதி தான், நாளை காலை ரெய்டு வந்துவிடுமோ? என்ற பயத்திலேயே தினந்தோறும் இரவுகளைக் கழிக்க வேண்டும்.

    அறிவாலயத்தில், மேலே ரெய்டுக்கு பயந்து, கீழே கட்சியை காங்கிரசுக்கு அடமானம் வைத்த கொத்தடிமைகள், மாநில உரிமைகள் பற்றி பாடமெடுக்க துளியும் தகுதியற்றவர்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மெட்ரோ ரெயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியது.
    • பயணிகள் பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியது.

    எனவே, அனைத்து பயணிகளும் CMRL மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவர்னருடன் அவரது மனைவி மற்றும் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.
    • கவர்னரின் திடீர் டெல்லி பயணத்திற்கு காரணம் என்ன என்று அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு ஏர்-இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். கவர்னருடன் அவரது மனைவி மற்றும் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.

    கவர்னர் 4 நாள் பயணமாக, டெல்லி சென்று உள்ளதால், வருகின்ற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகிறார்.

    கவர்னரின் இந்த திடீர் டெல்லி பயணத்திற்கு காரணம் என்ன என்று அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவர் வழக்கமாக டெல்லி செல்லும் பயணம்தான் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனாலும், 4 நாட்கள் பயணமாக திடீரென டெல்லி சென்றுள்ள கவர்னர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னரின் 4 நாட்கள் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×