என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consumer Court"

    • பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு.
    • அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை.

    திருவனந்தபுரம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரூவை சேர்ந்தவர் ஜெம்ஷீத். தொழில்நுட்ப வல்லுனரான இவர், கேரள மாநிலம் கோட்டக்கல் அருகே உள்ள திருரூருக்கு செல்ல யஷவந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தட்கல் முறையில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றுள்ளார்.

    பயணநாளில் பெங்களூரூ ரெயில் நிலையம் வந்த அவர் தான் செல்ல வேண்டிய ரெயிலில் இரவு ஏறி, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்ற போது அங்கு முன்பதிவு செய்யாத 5 பயணிகள் இருப்பதை பார்த்துள்ளார். அவர்களிடம் இது தனது இருக்கை என்று ஜெம்ஷீத் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் நகரவில்லை.

    இதனை தொடர்ந்து 10 மணி நேர பயணத்தை ஜெம்ஷீத் இரவில் நின்று கொண்டே சென்றுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.4 லட்சம் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த வழக்கு பல மாதங்கள் நடைபெற்ற நிலையில், ஜெம்ஷீத்துக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இது பற்றி ஜெம்ஷீத் கூறும் போது, நான் பாதிக்கப்பட்ட போது ரெயில்வே போலீசாரிடம், தெரிவித்தேன். அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.

    அவரிடம் கூறியும் பலன் கிடைக்காததால் ரெயில்வே உதவி எண் 139-க்கு தொடர்பு கொண்டேன். ஆனால் அது பயனற்றதாக இருந்தது. ரெயில்வே செயலியும் கை கொடுக்காததால் திருரூரை அடைந்ததும் ரெயில் நிலைய மேலாளரிடம் புகார் அளித்தேன்.

    ஐ.ஆர்.சி.டி.சியின் பாலக்காடு மற்றும் பெங்களூரூ ரெயில்வே பிரிவுகளுக்கு புகார் கொடுத்தும் பலன் கிடைக்காததால் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் என ஜெம்ஷீத் தெரிவித்தார்.

    பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்கும், டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட படுக்கைகளை வழங்குவதற்கும் இந்திய ரெயில்வே தான் பொறுப்பு என்று நுகர்வோர் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    ரெயில் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே துறையை பொறுப்பேற்க வைக்க வேண்டும். ரெயில்களில் கொசுக்கள் கடித்தால் கூட ரெயில்வே நிர்வாகம் மீது நாம் வழக்கு தொடர முடியும் என்றும் ஜெம்ஷீத் கூறியுள்ளார்.

    தற்போது இந்த வழக்கில் ரெயில்வேக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை. எனவே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    • கேரளா மாநில நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு கொடுக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.
    • ஃபோர்டு ஃபியஸ்டா மாடல் விளம்பர்த்தில் குறிப்பிடப்பட்ட மைலேஜ் கொடுக்கவில்லை என வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்தார்.

    புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதலில் கருத்தில் வைப்பது அதன் மைலேஜ் எவ்வளவு என்பது மட்டும் தான். கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கும் மைலேஜ் மற்றும் அன்றாட பயன்பாட்டில் கார்கள் கொடுக்கும் மைலேஜ் என இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு என்பது நம்மில் பலரும் அறிந்ததே.

    எனினும், கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது ஃபோர்டு ஃபியஸ்டா கார் அந்நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்ட மைலேஜை வழங்கவில்லை என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஃபோர்டு ஃபியஸ்டா காரின் விற்பனை 2015 முதலை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் இதே காரில் வழங்கப்பட்டு இருக்கிறது. 2011 ஆண்டு வாக்கில் ஆட்டோமொபைல் செய்திகளை வெளியிடும் நாளேடு காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களை ஓட்டி பார்த்தது.

    அதில் இந்த கார் லிட்டருக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கி இருக்கிறது. மிட்-சைஸ் செடான் மாடலில் இவ்வளவு மைலேஜ் கிடைப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். இதே தகவலை விளம்பரமாக வெளியிட ஃபோர்டு முடிவு செய்தது. அதன்படி இந்த செடான் மாடல் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற விளம்பரங்கள் வெளியாகின. இந்த விளம்பரம் தற்போது புது பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.

    இந்த வழக்கை தொடர்ந்த வாடிக்கையாளர் சௌதாமினி பிபி, கார் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற காரணத்தால் தான் இந்த காரை தான் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காரை வாங்கியதில் இருந்து அது அத்தனை மைலேஜ் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றம் சென்றார். இந்த கார் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குகிறது என அவர் மேலும் தெரவித்தார்.

    வழக்கு விசாரணையின் போது இந்த கார் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததை விட 40 சதவீதம் வரை குறைந்த மைலேஜ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கார் உற்பத்தியாளர் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் விற்பனையாளர் கைராளி ஃபோர்டு கார் விற்பனைக்காக அதிக மைலேஜ் வழங்குவதாக விளம்பரம் கொடுத்தது தவறு செய்துள்ளன என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளருக்கு கார் உற்பத்தியாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், விற்பனையாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் இழப்பீடாக கேரளா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டப்போராட்டம் நடத்திய வாடிக்கையாளருக்கு ரூ. 10 ஆயிரம் கூடுதலாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தினார்
    • தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டுறவு துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கலந்து கொண்டு பேசியது: தற்போது இந்தியா முழுவதும் 5 லட்சம் கூட்டுறவு அமைப்புகளில் 21 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

    குறைந்த விலையில் பொருள்களையும், சேவைகளையும் நுகர்வோர் பெறுவதற்காக தனியார் வணிக நிறுவனங்களைப் போல விற்பனை மற்றும் சேவை வழங்கும் பணிகளை கூட்டுறவு நிறுவனங்கள் வழங்குகின்றன. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

    பிரச்சனை ஏற்படும் போது பாதிக்கப்படும் நுகர்வோர் மாவட்டத்திலுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகுவதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. கூட்டுறவு துறையில் செயல்படும் குடிமைப்பொருள் அங்காடிகள், விற்பனை நிலையங்கள், கடன் சங்கங்கள், வேளாண்மை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு கூட்டமைப்புகள் அனைத்தும் நுகர்வோர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

    கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றுவது, நியாயமற்ற ஒப்பந்தத்தை திணிப்பது போன்ற நுகர்வோருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என்றார். பயிற்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி தலைமை வகித்தார். திருசெங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குனர் விஜய்சக்தி பங்கேற்று பேசினார். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ஜெயராமன் வரவேற்றார்.


    • நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், இழப்பீடு வழங்கக்கோரி உத்தர விடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
    • 200-க்கும் மேற்பட்ட வர்களுக்காக, வருகிற 15-ந் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், இழப்பீடு வழங்கக்கோரி உத்தர விடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

    இவ்வாறு வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு பணம் செலுத்தாமல் உள்ள 200-க்கும் மேற்பட்ட வர்களுக்காக, வருகிற 15-ந் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான நோட்டீஸ் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை பணம் செலுத்தாததால் கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்களும், மேல்முறையீடு செய்த வர்களும் சமரச பேச்சு வார்த்தைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வரும் 15-ந் தேதி நடை பெறும் சமரச பேச்சு வார்த்தைக்காக வக்கீல்கள் பரமத்திவேலூர் ராம லிங்கம், திருச்செங்கோடு பாலசுப்ரமணியம், நாமக்கல் அய்யாவு, குமரேசன், சதீஷ்குமார், முரளி குமார், அந்தோணி புஷ்பதாஸ் மற்றும் சந்திரசேகர் ஆகி யோர் மத்தியஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

    ஏற்கனவே 10 வழக்கு களில் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்காத நபர்களை கைது செய்யக் கோரி உத்தரவிட்ட வழக்குகளில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் களுக்கு அனுப்பப்பட்ட கைது வாரண்டின் நிலை என்ன என அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி டாக்டர் ராமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த உத்தரவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 72 -படி நுகர்வோர் கோர்ட் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க நுகர்வோர் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே 3 வாரங்களுக்கு முன்னர் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ.55 ஆயிரத்துக்கான காசோ லையை சம்மந்தப்பட்ட நுகர்வோருக்கு நீதிபதி டாக்டர் ராமராஜ் வழங்கினார்.

    • பிஸ்கெட் சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (48). பால் வியாபாரி.

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் தனது சகோதரர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள கடையில் பிரபல நிறுவனத்தின் 5 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார்.

    அதைப் பிரித்து சாப்பிட்டபோது பிஸ்கெட் முழுவதும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் பிறந்தநாள் விழா பாதிக்கப்பட்டது. அதை சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறப்பட்டது. பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தது குறித்து கடை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.

    இதை தொடர்ந்து வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் கடந்த 5-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

    தீர்ப்பின் நகல் வழக்கு தொடுத்த வடமலைக்கு நேற்று வக்கீல் சரவணன் மூலம் அளிக்கப்பட்டது. அதன்படி பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தநிலையில், அதை வாங்கிய வடமலைக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் வடமலைக்கு ரூ.20 மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
    • தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.

    அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.

    சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

    திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா வரையிலான ரெயில் பயணத்தின் போது 55 வயது நபரும் அவரது குடும்பத்தினரும் கடும் சிரமத்திற்கு ஆளானதால் அவருக்கு இழப்பீடாக 30,000 ரூபாய் வழங்குமாறு இந்திய ரெயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருமலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் மூர்த்தி என்பவர் 4 ஏ.சி. டிக்கெட்டுகளை பதிவு செய்து பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது அவர்களின் பெட்டியில் ஏர் கண்டிஷன் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் கழிப்பறை அசுத்தமாகவும், தண்ணீரும் வரவில்லை. பயணம் முழுவதும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சிரமங்களை எதிர்கொண்டு பயணம் மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றச்சாட்டை மறுத்த ரெயில்வேதுறை, பொய்யான குற்றச்சாட்டை மூர்த்தி கூறியுள்ளதாகவும், ரெயில்வே வழங்கிய சேவைகளைப் பயன்படுத்தி மூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறியது.

    இருப்பினும், நுகர்வோர் நீதிமன்றம், புகாரைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அதைப் பார்வையிடவில்லை என்றும் கழிப்பறைகளுக்கு நீர் தடைபட்டதைக் கண்டறிந்ததாகவும் தெரியவந்தது. இதனால் குறைந்தபட்ச வசதிகளைக் கூட சரிபார்க்காமல் பிளாட்பாரத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதை நிரூபித்த நீதிமன்றம், திருப்பதியில் இருந்து துவ்வாடா (வைசாக் மாவட்டம்) செல்லும் போது ஏற்பட்ட சிரமத்திற்காக மூர்த்திக்கு 25,000 இழப்பீடு வழங்க ரெயில்வேக்கு உத்தரவிட்டது. வழக்கிற்கு ஏற்பட்ட செலவுகளுக்காக ஈடுகட்ட கூடுதலாக 5,000 என மொத்தம் ரூ.30,000 வழங்க உத்தரவிட்டது.

    • தில்மில் மேட்ரிமோனி நிறுவனம் பாலாஜிக்கு 45 நாட்களில் மணப்பெண் தேடித்தருவதாக உறுதியளித்துள்ளது.
    • மனஉளைச்சலால், வேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பெங்களூருவைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு தில்மில் மேட்ரிமோனி நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து மணப்பெண்ணை தேடி வந்தனர்.

    பெங்களூருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மார்ச் மாதத்தில் தனது மகன் பாலாஜிக்காக, தில்மில் என்கிற மேட்ரிமோனியில் ரூ. 30 ஆயிரம் கொடுத்து பதிவு செய்துள்ளார்.

    தில்மில் மேட்ரிமோனி நிறுவனம் பாலாஜிக்கு 45 நாட்களில் மணப்பெண் தேடித்தருவதாக உறுதியளித்துள்ளது.

    ஆனால், நாட்கள் ஆகியும் நிறுவனம் தரப்பில் இருந்து மணப்பெண்ணை தேடித் தரவில்லை எனத் தெரிகிறது. இதனால், கல்யாண் நகரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிபவர்கள் அவரை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

    இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் செலுத்திய ரூ.30,000, சேவை குறைபாட்டிற்காக ரூ.20,000, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.5,000, வழக்கு செலவு ரூ.5000 என மொத்தம் ரூ.60,000-ஐ விஜயகுமாருக்கு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் மேட்ரிமோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    • சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.
    • சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வாடிக்கையாளரை ஏமாற்றி அதிக பணம் வசூலித்ததாக ஸ்விக்கி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.35,000 அபராதம் விதித்துள்ளது.

    ஐதராபாத்தில் வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.

    அந்த புகாரில், "ஸ்விக்கி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன்மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தேன். எனது வீட்டிற்கும் உணவகத்திற்கும் இடையிலான தூரம் 9.7 கிமீ ஆகும். ஆனால் 9.7 கி.மீ-ஆக இருந்த டெலிவரி தூரத்தை வேண்டுமென்றே 14 கி.மீ-ஆக அதிகரித்து என்னிடமிருந்து அதற்காக 103 வசூலித்தார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் இந்த இழப்பீடு தொகையை ஸ்விக்கி நிறுவனம் வழங்கவேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2017 ஆம் ஆண்டு பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார்.
    • அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் தான் வாங்கிய சிலிண்டரின் விலையை விட ரூ.1.50 அதிகமாக பெற்ற கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்த சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் இழப்பீடாக ரூ.4,000 பெற்றுள்ளார்.

    2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது. ஆனால் சிலிண்டரை டெலிவரி செய்தவர் அவரிடமிருந்து 755 ரூபாய் வசூலித்துள்ளார். மீதம் 1.50 ரூபாயை சக்ரேஷ் கேட்டபோது அந்த பணத்தை கேஸ் ஏஜென்சியிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

    7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மனுதாரருக்கு 4000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இது மட்டுமன்றி சக்ரேஷிடம் பெற்ற ரூ1.50யை ஆண்டுக்கு 6% வட்டியுடன் சேர்த்து வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    'இது வெறும் 1.50 ரூபாய்க்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல. எங்களது உரிமை மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம் இது' என்று வழக்கில் வெற்றி பெற்ற சக்ரேஷ் தெரிவித்தார்.

    • குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது.
    • வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை.

    அரியலூர் ;

    அரியலூர் அடுத்த தேளூர் கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி (54), வேல்விழி(43), கோவிந்தராஜ்(52), முருகேசன்(53), பாரிவள்ளல்(55), அம்பிகா(48), அருட்செல்வம்(49) உள்ளிட்ட 15 பேர் தங்களது வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம ஊராட்சியில் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களிடமிருந்து ஊராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்புக்கான வைப்புத் தொகையை பெற்றுள்ளது.ஆனால் இதுவரை அவர்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்து, அவர்கள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

    அந்த தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்து செய்துள்ளவர்கள் எவ்வித சேவை கட்டணத்தையும் ஊராட்சி மன்றத்தில் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் நுகர்வோர் அல்ல என்பதால் நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற அரசின் வாதம் ஏற்புடையதல்ல.

    குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது. வறட்சியின் காரணமாக தனிநபர் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் அவ்வாறு இருக்க ஏன் தனி நபரிடம் வைப்புத் தொகையை பெற்றுள்ளீர்கள் என்பதற்கான பதில் ஊராட்சி மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை .

    வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் வழங்க வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு, ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த பின்பும் அதனை மதிக்காமல் குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ள ஊராட்சி மன்ற சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே வழக்கு தொடுத்துள்ள அனைவரது வீடுகளுக்கும் நான்கு வாரத்துக்குள் தேளூர் ஊராட்சி மன்றம் குடிநீர் வழங்க இணைப்பு வழங்க வேண்டும். இதனை அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால் வழக்கை தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையமும் தொடங்கப்படவுள்ளது.
    • மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

    அரியலூர்:

    சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் அரியலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, அதன் விசாரணை நாள் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த 250 வழக்குகளை விரைந்து விசாரணை மேற்கோண்டு, தீர்ப்பு வழங்குவதற்காக, அந்த வழக்குகள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளுக்கு விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆணையத்தில் உள்ள நாட்குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் அல்லது நுகர்வோர் ஆணையகளுக்கான இணையதளத்தின் மூலம் வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

    இந்த வழக்குகளை நடத்துவதற்கு புகார்தாரர்களும், எதிர்தரப்பினரும் வழக்குரைஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையமும் தொடங்கப்படவுள்ளது. தொடங்கப்படும் மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. நுகர்வோர் வழக்குகளை சமரச மையத்தின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×