search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    சொன்ன மைலேஜ் கிடைக்கல - வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
    X

    சொன்ன மைலேஜ் கிடைக்கல - வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

    • கேரளா மாநில நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு கொடுக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.
    • ஃபோர்டு ஃபியஸ்டா மாடல் விளம்பர்த்தில் குறிப்பிடப்பட்ட மைலேஜ் கொடுக்கவில்லை என வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்தார்.

    புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதலில் கருத்தில் வைப்பது அதன் மைலேஜ் எவ்வளவு என்பது மட்டும் தான். கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கும் மைலேஜ் மற்றும் அன்றாட பயன்பாட்டில் கார்கள் கொடுக்கும் மைலேஜ் என இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு என்பது நம்மில் பலரும் அறிந்ததே.

    எனினும், கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது ஃபோர்டு ஃபியஸ்டா கார் அந்நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்ட மைலேஜை வழங்கவில்லை என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஃபோர்டு ஃபியஸ்டா காரின் விற்பனை 2015 முதலை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் இதே காரில் வழங்கப்பட்டு இருக்கிறது. 2011 ஆண்டு வாக்கில் ஆட்டோமொபைல் செய்திகளை வெளியிடும் நாளேடு காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களை ஓட்டி பார்த்தது.

    அதில் இந்த கார் லிட்டருக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கி இருக்கிறது. மிட்-சைஸ் செடான் மாடலில் இவ்வளவு மைலேஜ் கிடைப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். இதே தகவலை விளம்பரமாக வெளியிட ஃபோர்டு முடிவு செய்தது. அதன்படி இந்த செடான் மாடல் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற விளம்பரங்கள் வெளியாகின. இந்த விளம்பரம் தற்போது புது பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.

    இந்த வழக்கை தொடர்ந்த வாடிக்கையாளர் சௌதாமினி பிபி, கார் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற காரணத்தால் தான் இந்த காரை தான் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காரை வாங்கியதில் இருந்து அது அத்தனை மைலேஜ் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றம் சென்றார். இந்த கார் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குகிறது என அவர் மேலும் தெரவித்தார்.

    வழக்கு விசாரணையின் போது இந்த கார் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததை விட 40 சதவீதம் வரை குறைந்த மைலேஜ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கார் உற்பத்தியாளர் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் விற்பனையாளர் கைராளி ஃபோர்டு கார் விற்பனைக்காக அதிக மைலேஜ் வழங்குவதாக விளம்பரம் கொடுத்தது தவறு செய்துள்ளன என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளருக்கு கார் உற்பத்தியாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், விற்பனையாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் இழப்பீடாக கேரளா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டப்போராட்டம் நடத்திய வாடிக்கையாளருக்கு ரூ. 10 ஆயிரம் கூடுதலாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×