என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள்.
    • தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம்.

    சென்னை :

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர் மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள். தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர்.

    அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம் என்று கூறியுள்ளார். 

    • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழுக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை சந்திக்கிறார். மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய பிரதமரை சந்தித்து வலியுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • நேற்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,945-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,520-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 111-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800

    21-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    20-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,680

    19-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-05-2025- ஒரு கிராம் ரூ.112

    21-05-2025- ஒரு கிராம் ரூ.111

    20-05-2025- ஒரு கிராம் ரூ.108

    19-05-2025- ஒரு கிராம் ரூ.109

    18-05-2025- ஒரு கிராம் ரூ.108

    • கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
    • அரசு சார்பில் முகக்கவசம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.

    நடப்பாண்டில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.

    உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் அணிய வேண்டும் என தகவல் பரவிய நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    * கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்

    * பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. அரசு சார்பில் முகக்கவசம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    * வீரியம் இ ல்லாத கொரோனா என்பதால் நோய் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
    • நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

    மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். கோவை- தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலைகொண்டுள்ள இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 27-ந்தேதி வாக்கில் உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 7-ந்தேதி தொடங்கியது.
    • பதிவு ஆரம்பித்ததில் இருந்தே மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. பதிவு ஆரம்பித்ததில் இருந்தே மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தினமும் குறைந்தது 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 28 ஆயிரம் பேர் வரை இதுவரை விண்ணப்பித்துள்ளனர். நேற்று வரையிலான தகவலின்படி, 2 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருக்கின்றனர்.

    விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 404 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 210 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
    • முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது.

    தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதில் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும், பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், கிராமப்புறங்களில் நில விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக, தமிழக அரசு "வில்லேஜ் மாஸ்டர்" என்ற இணையதளத்தை உருவாக்கியது. இதில், ஒரு நிலத்தின் சர்வே எண் தெரியாவிட்டாலும், அதன் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்து, உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

    ஆனால் இப்போது, பொதுமக்களுக்கு நில விவரங்களை மிகவும் தெளிவாக வழங்க தமிழக அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எந்த உரிமை ஆவணமும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நில விவரங்களை ஒரே இடத்தில் விரைவாகப் பெறலாம். இதற்காக புவியியல் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம், தமிழகத்தின் எந்த பகுதியில் உள்ள நிலத்தை தேர்வு செய்தால் நிலத்தின் எல்லை எங்கு இருக்கிறது?, உரிமையாளர் யார்?, நிலத்தின் பரப்பளவு எவ்வளவு? யார் பெயரில் பட்டா இருக்கிறது? யார் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? வில்லங்க சான்றிதழ்? நிலத்தின் அரசு மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.

    மேலும், அந்த நிலம் எந்த மாவட்டம், தாலுகா, அருகிலுள்ள போலீஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற தகவல்களும் முழுமையாக காட்டப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த தகவல் அமைப்புகளை உருவாக்கி இருந்தாலும், பல புதிய வசதிகளை ஒரே அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்கும் முயற்சி தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நடைமுறையில் வந்துள்ளது.

    முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் தற்போது, எந்த ஆவணமும் இல்லாவிட்டாலும், நமது நில விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக https://tngis.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கூகுள் மேப்பில் இருப்பிடத்தை தேர்வு செய்வது போல், நமது இருப்பிடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாவட்டம், கிராமம் வாரியாகவும் தேடி நமது நிலத்தை எளிதாக கண்டறிய முடிகிறது.

    தற்போது இந்த இணையதளத்தில் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து ஊரக பகுதிகளின் நில விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மற்ற மாவட்டங்களில் உள்ள நகர் பகுதிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. எனவே இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் அனைத்து நிலத் தகவல்களும் இதில் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வசதிகளை இணையதளத்தோடு மட்டுமல்லாமல், TN-GIS என்ற மொபைல் செயலியாகவும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
    • மின் தடையை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் இன்று சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த மின் ஊழியர்கள் மின் தடையை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கட்டுமான பணியின்போது மின் வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    தொடர் மின் தடையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    • ‘உலகெங்கும் கலைஞர்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
    • நூலை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார்.

    'உலகெங்கும் கலைஞர்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. சென்னை வளர்ச்சி கழகம் சார்பில் சட்டக் கதிர் ஆசிரியர் எழுதிய இந்த நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    அதனை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்த பிறகு, திராவிடர் கழக தலைவர் வீரமணி நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    துணைவேந்தர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது, திட்டமிட்ட ஏற்பாடு.

    முறையற்ற அரசியல் எனவும் சட்டத்திற்கும் நடைமுறைக்கும் விரோதமாக 2 பேர் திட்டமிட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தைவிட உயர்நீதிமன்றம் உயர்ந்தது என்ற தவறான சட்ட விரோதமான ஒரு தடை யானை கொடுக்கப்பட்டு உள்ளது. அவசரமாக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல.

    அந்த வழக்கை குறிப்பிட்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரித்து கடைசி நாளில் தடை வழங்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    மாலை 6 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்வோம் என்று சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

    முற்றிலுமாக நீதிபதிகளின் போக்கு கெட்ட எண்ணத்தில் ஆனது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தமிழகத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ளது.

    ஒரு அரசாங்கத்தை ஒரு வாரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என சொல்லுவது, நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செயல்படுவோம் என்பது போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
    • பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கி வருவதால் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது." என அறிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கி வருவதால் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

    • 2021 முதல் 2023 கல்வியாண்டு வரை எந்த நிதியையும் ஒதுக்கவில்லை- தமிழக அரசு வாதம்.
    • சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கக்பபடவில்லை- மத்திய அரசு பதில்.

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் "2021 முதல் 2023 கல்வியாண்டு வரை எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. முழு நிதியையும் மாநில அரசே செலுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. கூட இல்ல்லை என்பதால் ஒதுக்கவில்லை.

    மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது. RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேரக்கை இதுவரை தொடங்கவில்லை" என வாதம் முன் வைக்கப்பட்டது.

    இதற்கு மத்திய அரசு சார்பில் "சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கக்பபடவில்லை" பதில் அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பிய நிலையில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

    • அமலாக்கத்துறை (ED) வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
    • உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக வரவேற்பு அளித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை செயலாளரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறை (ED) வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

    அரசு ஊழியர்கள் ரூ.1 லட்சம் வரை பணம் வைத்திருந்த புகார்களை வைத்துக்கொண்டு டாஸ்மாக்கில் நுழைந்து ED அத்துமீறியுள்ளது.

    டாஸ்மாக் ஊழியர்கள் மீது பதியப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கத்தை கொடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டன. சில வழக்குகள் விடுதலையும் ஆகி இருக்கின்றன.

    இதையெல்லாம் வைத்துக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று அமலாக்கத்துறையின் நடவடிக்கை முறையற்றவை, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை.

    அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கின்றார்கள், கூட்டாட்சி என்ற அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறி இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கிறார்கள்.

    எனவேதான் உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

    அமலாக்கத்துறையின் நடவடிக்கை மாநில சுய ஆட்சிக்கு எதிரானவை என்பதை ஏற்றுக்கொண்டு தடை வதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

    டாஸ்மாக் வழக்கில் EDக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பது இந்தியா முழுமைக்குமான உத்தரவு.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் ED நடவடிக்கைகளுக்கு எதிரான உத்தராகவே டாஸ்மாக் வழக்கு உத்தரவை பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×