என் மலர்tooltip icon

    சென்னை

    • புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை- மத்திய அரசு.
    • ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது- தமிழக அரசு.

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    அதன்படி இன்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. தனது விளக்கத்தில் "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தது.

    இதற்கு தமிழக அரசு சார்பில் "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    நேற்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் "2021 முதல் 2023 கல்வியாண்டு வரை எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. முழு நிதியையும் மாநில அரசே செலுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை.

    மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது. RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேரக்கை இதுவரை தொடங்கவில்லை" என வாதம் முன் வைக்கப்பட்டது.

    இதற்கு மத்திய அரசு சார்பில் "சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கக்பபடவில்லை" பதில் அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பிய நிலையில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ந்தேதி வாக்கில் உருவாகக்கூடும்.
    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.

    தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை அதே பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.

    மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ந்தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

    இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.

    நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் குறையக்கூடும்.

    இன்றும் நாளையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
    • நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாக குழுக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    முந்தைய ஆண்டுகளில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

    இதற்காக அவர் இன்று காலை 9.50 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளர் சண்முகம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

    விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், மயிலை த.வேலு, பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் பிரியா, அறிவாலயம் தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் புழல் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

    பகல் 1.15 மணியளவில் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் மேளதாளங்கள் முழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லம் சென்றடைந்தார். அங்கு தங்கி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்குமாறு பேச உள்ளார்.

    தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியை தருமாறு வலியுறுத்துவதுடன் பேரிடர் நிவாரண நிதி, திட்டங்களுக்கான கூடுதல் நிதி கேட்டும் வற்புறுத்துவார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தமிழ கத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த உள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்துக்கான நிதியை போராடி பெறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை இன்று மாலை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதே போல் நாளை நிதி ஆயோக் கூட்டம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளதால் அங்குள்ள கூட்ட அரங்கில் நேரம் கிடைக்கும் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அது மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



    • போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்.
    • பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிறப்பினை போற்றி வணங்குவோம்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வரலாற்றில் பொற்கால ஆட்சியை வழங்கிய தலைசிறந்த மன்னர்களில் முதன்மையானவராக, முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தராக, போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவில் அவர்தம் பெரும் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட தரணி புகழ் வீரன், தோல்வியே காணாத மாமன்னர் நம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவில், அவரது சிறப்பினைப் போற்றி வணங்குவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார்.

    இதுகுறித்து பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் மா.சுப்ரமணியன் மீதான வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்தனர்.

    சென்னை கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் விசாரித்து வந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    வேறு நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதால் இன்று அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு ஜூன் 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • ஜூலை 30-ந்தேதிக்கள் கோவையில் குண்டுவெடிக்கும், எஸ்.பி.வேலுமணியை கொலை செய்வோம்.
    • காளப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ரூ.1 கோடி பணப்பையை வைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் ரூ. 1 கோடி கேட்டு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தில்,

    * ஜூலை 30-ந்தேதிக்குள் கோவையில் குண்டுவெடிக்கும், எஸ்.பி.வேலுமணியை கொலை செய்வோம்.

    * காளப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ரூ.1 கோடி பணப்பையை வைக்க வேண்டும்.

    * இமெயில் ஐ.டி.யில் ஒரு ரகசிய குறியீடு வரும், அந்த குறியீட்டை பகிர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கடிதத்தின் பின்பக்கம் கூகுள் மேப் வரைபடம், drop the bad hear என்று எழுதப்பட்டுள்ளது.

    • பொன்முடிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
    • கவுதமசிகாமணியின் பொறுப்பையும் கட்சி மேலிடம் குறைத்தது.

    தி.மு.க. அமைச்சர்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் மாட்டிக்கொள்பவர் பொன்முடி. அவரது பேச்சு சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவி, கட்சி பதவி ஆகியவற்றை இழந்துள்ளார்.

    பொன்முடி பேசிய சர்ச்சைகள் சிலவற்றை குறித்து பார்ப்போம்...

    அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை பொன்முடி, 'ஓசி பயணம்' என்று பேசியதும், அதன் பின்னர் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும் சர்ச்சையானது.

    மேலும், பள்ளிக்கட்டிட திறப்பு விழாவில் பொன்முடி பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக புகார் அளித்தார். பெண்ணின் கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரிடம் பொன்முடி விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பேசிய பொன்முடி, எனக்கா ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ் விட்டது நான், குடி தண்ணீர் விட்டது நான்! ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம் என்று கூறினார்.



    இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அய்யா ஆஸ்பத்திரி வேணும் என்று கேட்ட பொதுமக்களிடம், நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய் என்று கேட்டார்.

    மேலும், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஆய்வு செய்த பொன்முடி, அங்கிருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்காமல் ஒருமையில் பேசினார். இதனை தொடர்ந்து, அவரது உயர்க்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது.

    கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொன்முடியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் உள்ளார்.

     


    இதனிடையே, தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் ஏழு மண்டல பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமித்தது. கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி ஆகியோர் ஏழு மண்டலங்களிலும் கூட்டங்களை நடத்தி வந்தனர். இதனிடையே ஏழு மண்டங்களாக இருந்தது எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. கட்சி ரீதியிலான கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதில் பொன்முடிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

    மேலும் பொன்முடி மகன் கவுதமசிகாமணியின் வசம் இருந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளை பறித்து புதிக கட்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் கவுதமசிகாமணியின் பொறுப்பையும் கட்சி மேலிடம் குறைத்தது.

    இதனால், பொன்முடி மீது கட்சி தலைமை கடும் கோபத்தில் உள்ளது வெட்ட வெளிச்சமானது.



    இந்த நிலையில் விழுப்புரத்தில் நடைபெறும் தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடர்பான பேனரில் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விழுப்புரத்திலேயே பொன்முடி ஓரம்கட்டப்படுவதால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தி.மு.க.வில் இருந்து மொத்தமாக பொன்முடி ஓரங்கப்பட்டப்படுகிறாரா? என கேள்வி எழுந்துள்ளது.

    பொன்முடி என்றால் விழுப்புரம், விழுப்புரம் என்றால் பொன்முடி என்ற வகையில் பிரபலமான அவருக்கு தற்போது இறங்குமுகமாகவே உள்ளது. விழுப்புரம் மாவட்ட தி.மு.க. தலைமையகம் தற்போது லட்சுமணன் கைவசம் உள்ளது.

    • 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.
    • 2025 - 26 நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு வழங்க, மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது.

    தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    கல்வியையும் டிஜிட்டல் பின்னணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2011 செப்டம்பர் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மடிக்கணினி திட்டம் என்ற உன்னத திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

    2019 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்த திட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறிய மாற்றங்களுடன் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.

    2025-2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில் 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம். 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி.எஸ்.எஸ்.டி. கொண்ட ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் திரை ஆகிய செயல் திறன் கொண்ட வகையில் இந்த மடிக் கணினி இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • தமிழையும் தமிழினத்தையும் காக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.
    • கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வது சதய விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்சி ஒத்தகடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அவரைத்தொடர்ந்து முத்தரையரின் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தமிழையும் தமிழினத்தையும் காக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.

    * கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    * வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடன் வரம்பு, தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • தனியார் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீத மக்களுக்கு மேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு அவசரத் தேவை ஏற்படின், அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து, நிலைமையை சமாளிக்கும் சராசரி மக்கள் ஆவார்கள்.

    இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நகை அடமானத்திற்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

    * இதுவரை, நகை மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் அளிக்கப்பட்டு வந்தது. இனி, 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    * நகை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்கள் இனி, இது தங்களது சொந்த நகைதான் என்பதற்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும். அதாவது, கடன் வாங்குபவர்கள் தங்கத்தை வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இல்லையென்றால், ஒரு தகுந்த ஆவணம் அல்லது சுய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

    * தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் வங்கிகளால் விற்கப்படும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் (22 காரட் அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மையுடன் இருக்கும் நகைகளுக்கு) மட்டுமே நகைக் கடன் வழங்க தகுதியானவை ஆகும்.

    * கடன் வரம்பு, தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    * தங்கக் காசு அடமானம் வைத்தால், அது 50 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தங்கக் காசு, வங்கிகள் விற்கும் தங்கக் காசாக இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் தங்கக் காசுகளுக்கு நகைக் கடன் கிடையாது.

    * தங்கக் கடனை முழுமையாக அடைத்தால்தான் புதிய கடன் வழங்கப்படும். இதுதவிர, மேலும் பல புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    * தங்க நகைகளின் தரம், எடை, போன்றவைகள் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும்.

    மேற்கண்ட புதிய நிபந்தனைகளின்படி, தங்களின் அவசரத் தேவைகளுக்கு, சொந்த நகைகளின் பேரில் அருகில் உள்ள கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    எனவே, மக்கள் நலன் கருதி, இந்தப் புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தனியார் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    • ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
    • இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட்டது.

    முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    அதன் பிறகு ஊரகப் பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 30,992 அரசு பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

    நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது.

    பட்ஜெட்டில் அறிவித்த படி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதியில் இருந்து காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் உள்ள இந்த பணிகளுக்கு கடைசியாக 2019-ஆம் ஆண்டில் தான் ஆள்தேர்வு நடத்தப்பட்டது.
    • அரசின் தவறுக்காக அரசு வேலை தேடும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றாண்டுகளுக்கும் குறைவாக காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களை மாவட்ட அளவில் நிரப்பிக் கொள்ளலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த பணிகளில் சேர்வதற்காக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பை நிர்ணயிப்பதில் பெரும் சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

    ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் உள்ள இந்த பணிகளுக்கு கடைசியாக 2019-ஆம் ஆண்டில் தான் ஆள்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான அறிவிக்கை 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட போது பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகளும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. அப்போதும் கூட சில மாவட்டங்களில் மட்டும் தான் ஆள்தேர்வு நடைபெற்றதே தவிர பல மாவட்டங்களில் ஆள்தேர்வு நடைபெறவில்லை.

    அதன்பின் இப்போது தான் இந்த பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறுவதாகக் கணக்கிட்டு பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 35-லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் சரியான நடவடிக்கை தான். இதேபோல், பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 37 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பு 39ஆகவும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை. இது பெரும் சமூக அநீதி ஆகும்.

    சில மாவட்டங்களில் 2029-ஆம் ஆண்டுக்குப் பிறகும், பல மாவட்டங்களில் அதற்கு முன்பிருந்தும் ஆள்தேர்வு நடைபெறவில்லை என்பது உண்மை. மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் 07.05.2025ஆம் நாள் எழுதிய கடிதத்தில் பல்வேறு நிர்வாகக் காரணங்களாலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை பணியாளர் குழுவின் ஒப்புதலைப் பெற்றுத் தான் நிரப்ப வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டதாலும் பல ஆண்டுகளாக காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசின் தவறு தான்.

    அரசின் தவறுக்காக அரசு வேலை தேடும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது. எத்தனை ஆண்டுகள் பணி நியமனம் நடைபெறவில்லையோ, அத்தனை ஆண்டுகள் வயது வரம்பு விலக்கு அளிப்பது தான் இயற்கை நீதி ஆகும். அவ்வாறு செய்ய மறுப்பது வேலை தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். அந்த துரோகத்தை தான் திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருக்கிறது.

    ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பட்டியலினத்தவருக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதைப் போலவே பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை 37 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பை 39ஆகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×