என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்?: சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
    X

    தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்?: சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

    • புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை- மத்திய அரசு.
    • ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது- தமிழக அரசு.

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    அதன்படி இன்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. தனது விளக்கத்தில் "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தது.

    இதற்கு தமிழக அரசு சார்பில் "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    நேற்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் "2021 முதல் 2023 கல்வியாண்டு வரை எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. முழு நிதியையும் மாநில அரசே செலுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை.

    மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது. RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேரக்கை இதுவரை தொடங்கவில்லை" என வாதம் முன் வைக்கப்பட்டது.

    இதற்கு மத்திய அரசு சார்பில் "சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கக்பபடவில்லை" பதில் அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், "RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பிய நிலையில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×