என் மலர்
சென்னை
- கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கியிருக்கும் அவலநிலையை உருவாக்கியிருப்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.
- அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை.
சென்னை:
முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பேராசிரியர்களும், ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு, போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கியிருக்கும் அவலநிலையை உருவாக்கியிருப்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.
திமுக ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் கடன் சுமை, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமாகிவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?
உடனடியாக, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிலையில், ஆசிரிய பெருமக்களை நிறுத்த வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் உள்ளது.
- 7 வன உயிரின காப்பகங்கள் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வனத்துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* காடுகள் என்றால் மேப்பில் உள்ளதை போன்று பச்சை திட்டுகள் என யாரும் நினைத்து விடக்கூடாது.
* காடுதான் புவி மூச்சுவிட உதவும் நுரையீரல், காடுகளை எளிதாக நினைக்க கூடாது.
* நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் உள்ளது.
* சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* கடந்த 4 ஆண்டுகளாக தொலைநோக்குடன் பல முன்னெடுப்புகளை தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
* இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் கிடையாது.
* ராம்சார் அங்கீகாரம் பெற்ற 21 ஈர நிலங்கள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என சாதனை பெற்றுள்ளோம்.
* இப்போது நாம் செய்யும் செயல்களை பொறுத்துதான் குழந்தைகளின் எதிர்காலம் அமையும்.
* தமிழ்நாட்டில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
* சதுப்பு நில காடுகளை மீட்டு எடுத்திருக்கிறோம்.
* பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கு மேலான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.
* அருகி வரும் உயிரினங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
* யானைகள், புலிகள் போன்ற வன உயிரினங்களை பாதுகாப்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது தமிழகம்.
* காடுகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் வனத்துறையினர்.
* 7 வன உயிரின காப்பகங்கள் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
* 1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்பது பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பது தான் இலக்கு.
* 2021-ல் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து போராட மீண்டும் மஞ்சப்பை திட்டம் உருவாக்கினோம்.
* நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம் என்பதுதான் இந்தாண்டின் சுற்றுச்சூழல் விழாவுக்கான மையக்கருத்து.
* வீட்டை விட்டு வெளியேறும்போது செல்போன் சார்ஜ் போட்டு எடுத்து செல்வதைபோல், மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும்.
* ஐரோப்பிய நாடுகளை போல் நமது நாடு மாற வேண்டும் என்றால் அந்த மக்கள் போல் நாமும் சுய ஒழுக்கத்துடன் மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் மெட்ரோ ரெயில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
- மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரெயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ. 1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ. 1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) 28.04.2025 அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ. ஆர். ராஜேந்திரன், (மெட்ரோ ரெயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), இணை பொது மேலாளர் பி. தியாகராஜன் (மெட்ரோ ரெயில்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர் AEON மற்றும் Alstom Transport India நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரெயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரெயில் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரெயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். இதில் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் சேவை சோதனைகள் அடங்கும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரெயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி ஒப்பந்தமாகும். முதல் இரண்டு ஒப்பந்தங்கள் முன்பே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விளம்பரத்தில் பெற்றோர் பிள்ளைகளின் சுயவிவரக் குறிப்பை அளிப்பர்.
- சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற அறிவிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல மணவாழ்க்கை அமைத்து தர பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாதவை. அவர்களுக்கு ஏற்றவாறு நிறம், வயது, கல்வித் தகுதி, சமூகம், பொருத்தம், வசதி உள்ளிட்டவற்றை பார்த்து பேசி முடித்து திருமணம் முடிப்பது என்பது அப்பப்பபா...
வரன்களை தேடி அலையும் பெற்றோர்களின் சுமையை குறைக்க இன்றைய காலக்கட்டத்தில் மேட்ரிமோனிகள், திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை உள்ளது. இதற்காக பெற்றோர் பிள்ளைகளின் சுயவிவரக் குறிப்பை அளிப்பர். அதில் பெரும்பாலும் வயது, நிறம், கல்வித் தகுதி, சமூகம் என்று காணப்படும். ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட பலரும் ஆச்சரியத்துடன் 'என்னப்பா இது' என்று சொல்ல வைக்கிறது.

கொரோனா அதிகரித்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- வாலாஜா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி 5 தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
- நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,720-க்கு விற்பனையானது.
- கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனை.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், நேற்றுமுன்தினம் ரூ.160-ம், நேற்று சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,720
03-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,640
02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-06-2025- ஒரு கிராம் ரூ.114
03-06-2025- ஒரு கிராம் ரூ.113
02-06-2025- ஒரு கிராம் ரூ.111
01-06-2025- ஒரு கிராம் ரூ.111
31-05-2025- ஒரு கிராம் ரூ.111
- சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்தவர் காயிதே மில்லத்.
- காயிதே மில்லத் பிறந்தநாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.
காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்
தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள். சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்த அன்னாரது பிறந்தநாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
- நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
சென்னை:
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
நடப்பு கல்வியாண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளது. கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை சீராக நடைபெற வலியுறுத்தப்பட்டு உள்ளது. தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணம் தவிர விடுதி கட்டணம் போன்ற பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து, மாணவர்களின் மேல்நிலைப்பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.
நடப்பாண்டில், நாளை (6-ந் தேதி) முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது.
- வங்கி கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியவில்லை.
சென்னை:
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது. அதற்கு கீழ் உள்ள தொகையினை கேட்டால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை என்று தான் வருகிறது. அதனால் ஏழை-எளியோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏனென்றால் அவர்களது கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு அதிகளவில் புகார்கள் சென்றன.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும். அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும். அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நமது ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இல்லை. அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை. முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ஜீவன் பீமா நகர், சிவன் கோவில், படவட்டம்மன் கோவில் தெரு, வள்ளலார் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ரெட்ஹில்ஸ்: சோழவரம், சோத்துப்பெரும்பேடு பகுதி, காரனோடை பகுதி, ஒரக்காடு சாலை, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம்
முகப்பேர்: பாடி டிவிஎஸ் காலணி, டிவிஎஸ் நகர், டிவிஎஸ் அவென்யூ, ரேடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், சிவன் கோவில், படவட்டம்மன் கோவில் தெரு, வள்ளலார் தெரு ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி காலை 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.5 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






