என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
    • நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும்.

    சென்னை:

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    நடப்பு கல்வியாண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளது. கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை சீராக நடைபெற வலியுறுத்தப்பட்டு உள்ளது. தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணம் தவிர விடுதி கட்டணம் போன்ற பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து, மாணவர்களின் மேல்நிலைப்பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.

    நடப்பாண்டில், நாளை (6-ந் தேதி) முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×