என் மலர்
சென்னை
- பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
- அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது.
சென்னை:
வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை ரத்த நிலவு என்றும் சொல்வார்கள்.
செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும். இதை எந்த வித கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கலாம். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே போதும் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம்.
பூமியின் லேசான நிழலுக்குள் சந்திரன் நுழையும் கட்டத்தை பெனும்பிரல் என்று அழைக்கிறார்கள். அதில் தொடங்கி கிரகணம் மேலும் வளர்கிறது. இதை காண்பதற்கு மட்டும் தொலைநோக்கி தேவைப்படலாம். பூமியின் மைய இருண்ட பகுதியான அம்ப்ரா சந்திரனை மறைக்கத் தொடங்கி முழுமை அடையும் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்கும்.
இரவு 11.41 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் நிகழும். இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் உலகின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் இந்த நிகழ்வு தெரியும்.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும்.
ஏனென்றால் சந்திர கிரகணம் நிகழ்ந்து முடியும் நேரத்தில்தான் இங்கு நமக்கு சந்திரன் உதிக்கும்.
இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்.
- சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
- தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகரம் முதல் குக்கிராமம் வரை சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் கடந்து செல்லும் பொது இடங்களில், சாலையோரங்களில், இருட்டான பகுதிகளில் புகைப்பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் உடல்ரீதியாக மன ரீதியாக பாதிக்கப்படுவதோடு அவர்களின் குடும்பத்தினரும் உடல்ரீதியாக மன ரீதியாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
இச்சூழலில் பொது இடத்தில் புகைப்பிடிக்கவும், மது அருந்தவும் தடை இருந்தும் அதை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
எனவே எவரும் பொது இடங்களில் புகைப்பிடிக்காமல், மது அருந்தாமல் இருக்க தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாக்கல் செய்த பின்பு மனு விசாரிக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ந்தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு.பாரதி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "இந்த ஒப்பந்தப்பணியினால், இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் 2 ஆயிரத்து 42 நிரந்தர பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள். 1,953 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "இந்த வழக்கிற்கு பதில் மனு தயாராக உள்ளது. இருந்தாலும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கூறினார்.
மனுதாரர் தரப்பில், "சுமார் 2 ஆயிரம் பேர் தெருக்களில் போராடி வருகிறார்கள். குப்பையை போல் அவர்கள் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது பாதுகாப்பு வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாகவும், அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு வக்கீல் வினோத் என்பவர் ஆஜராகி, "மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால் அந்த மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம் என்று அரசு விளக்கம் அளித்தது.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு என தலைமை நீதிபதி முன் வழக்கறிஞர் வினோத் மீண்டும் முறையிட்டார்.
தினந்தோறும் முறையீடு செய்ய வேண்டாம் என வழக்கறிஞர் தரப்புக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாக்கல் செய்த பின்பு மனு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
- 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்...
- மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்... இடையில் எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால் கடந்து வந்துகிட்டே இருக்கோம்...
வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்... இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில், நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு... அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி...
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.
மாற்று சக்தி நாமன்று.
முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார்.
- தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
- வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்:
மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஆற்றில் வந்த நீரை வைத்து விவசாயிகள் நெல்நடவு செய்து, போதிய உரமிட்டு வளர்த்து எடுத்துள்ளனர். இதற்காக ஏக்கருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று மதியம் வரை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
பருவம் தவறிய இந்த மழையால் திருவாரூர் அருகே உள்ள பழையவலம், தென்ஓடாச்சேரி கானூர், கள்ளிக்குடி, அலிவலம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
வயலில் தேங்கி உள்ள மழைநீரை வடிய வைக்க வடிகால்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் இளம் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்ப தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
- அரசுக்கு ரூ.30 கோடியே 16 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை:
முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்டையார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடு தேடிச் சென்றடைய செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு தாயுமானவர் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை கோபால் நகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று ரேசன் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 ரேசன் கார்ட்டில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளிகளும், 91 ஆயிரத்து 969 ரேசன் அட்டைகளில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் பயன் அடைய உள்ளனர்.
அதாவது மொத்தம் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 ரேசன் கார்டுகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளிகளுக்கு இதன்மூலம் பொருட்கள் கிடைக்க உள்ளது.
ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ள ரேசன் கார்டுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்கள் அனைத்தும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் இருந்து பெறப்பட்டு அந்தந்த பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூடிய வேன்களில் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும்போது மின்னணு எடை தராசு, பெருவிரல் ரேகை பதிவு செய்யும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையும் கொண்டு சென்று ரேசன் பொருட்களை வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.30 கோடியே 16 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'தாயுமானவர்' திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரேசன் பொருட்களை வீடு தேடி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரெயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம்.
- இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம்.
சென்னை:
உலக யானைகள் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் இயற்கை மரபையும் வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கினைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
கோவையில், ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் யானைகள் நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, மதுக்கரையில் நாம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பைப் பார்வையிட உள்ளார். இந்த அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் ரெயில் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன. இதனால் 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரெயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தெப்பக்காட்டில் யானைப் பாகர்களுக்கான கிராமத்தையும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தொடங்கி வைத்தேன். நமது யானைகளை அக்கறையோடு பராமரிக்கும் பாகர்களுக்கான சுற்றுச்சூழலோடு இயைந்த வீடுகளை அது கொண்டுள்ளது. யானைகளைப் பாதுகாப்பதோடு யானைப் பாகர்களின் நலனையும் இது மேம்படுத்துகிறது. இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும்.
- பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.
ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?
பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு அவர் விடையளிக்க வேண்டும்.
- உள்நாட்டில் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளின் நிலையும் திருப்தியளிப்பதாக இல்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத் தொடக்கத்திலோ இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வியடைந்து விட்ட நிலையில், மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு அவர் விடையளிக்க வேண்டும்.
எந்தவொரு மாநிலமும் தொழில் துறையில் வளர்ச்சி அடைந்தால் தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்; வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஆனால், புதிதாக எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு முன்பாக, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதேபோன்ற திட்டங்களால் ஏற்பட்ட பயன்கள் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
அதேபோல், விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அதற்கு முந்தைய வெளிநாட்டு பயணங்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்பது குறித்து ஆராய வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 நாள் பயணமாக துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நிறுவனங்களிடம் நடத்திய பேச்சுகளின் அடிப்படையில், லூலூ நிறுவனம் மூலம் ரூ.3500 கோடி, நோபுள் ஸ்டீல்ஸ் ரூ.1000 கோடி, ஒயிட் ஹவுஸ் ரூ.500 கோடி உட்பட மொத்தம் ரூ.6100 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த முதலீடுகளின் வாயிலாக 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
அதன்பின் 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட பயணத்தில் ரூ.1342 கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
2024-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஸ்பெயின் நாட்டில் 14 நாள்கள் பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2500 கோடி, எடிபன் நிறுவனம் ரூ. 540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ. 400 கோடி என மொத்தம் ரூ. 3,440 கோடி தொழில் முதலீடுகள் கையெழுத்திடப்பட்டன. இதில் ஒரு ரூபாய் கூட இன்னும் வரவில்லை; அதனால் யாருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் மொத்தம் 17 நாள்கள் பயணமாக சென்றார். இப்பயணத்தின் போது ரூ.7616 கோடிக்கும் முதலீடுகள் திரட்டப்பட்டதாகவும் அதன்மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், நடக்கவில்லை.
இதுவரை 4 கட்டங்களாக 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவற்றின் மூலம் மொத்தம் ரூ.18,498 கோடி முதலீடு கிடைக்கும்; ஸ்பெயின் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளின் வாயிலாக மட்டும் 28,516 பேருக்கு முதலீடு கிடைக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், முதலமைச்சர் உறுதியளித்தவாறு எதுவும் நடக்கவில்லை என்பதால், கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் தோல்வியடைந்து விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, உள்நாட்டில் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளின் நிலையும் திருப்தியளிப்பதாக இல்லை. அண்மையில், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம் 32.78 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 10% கூட தொழில் திட்டங்களாக மாற்றப்படவில்லை. 5 விழுக்காடு அளவுக்குக் கூட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
மேலும் தமிழக அரசு கூறும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 10.62 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ரூ.18,498 கோடி தான். இது மொத்தமாக கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மதிப்பில் வெறும் 1.72% மட்டும் தான். தமிழக அரசு வெளியிட்ட தரவுகளின்படி பார்த்தாலும் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வி என்பது உறுதியாகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை நியாயப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது? முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் வாயிலாக எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இவற்றில் எவ்வளவு முதலீடுகள் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன? எவ்வளவு பேர் வேலை பெற்றுள்ளனர்? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிட வேண்டும். அதன்பிறகே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எந்தவொரு நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
- தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
- எப்போது வாக்குறுதி கொடுத்தோம் என கேட்டவர்கள் எப்படி பணி பாதுகாப்பு அளிப்பார்கள்.
தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்தனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,
எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துறை அமைச்சரான நேரு சந்திக்காதது ஏன்? அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். எப்போது வாக்குறுதி கொடுத்தோம் என கேட்டவர்கள் எப்படி பணி பாதுகாப்பு அளிப்பார்கள்.
மேலும் கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களை மிரட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். பணத்தாசை காட்டி போராட்டத்தை கலைக்க முயல்வதாகவும் அவர்கள் கூறினர்.
- பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
- எந்த தற்காலிக தூய்மை பணியாளரும் பணிநீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சி வலியுறுத்தி உள்ளது.
எந்த தற்காலிக தூய்மை பணியாளரும் பணிநீக்கம், பணி மறுப்பு செய்யப்படவில்லை. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும். பணிப்பாதுகாப்பு மற்றும் பணப்பலன்கள் வழங்குவதை மாநகராட்சி உறுதி செய்யும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- நேற்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையானது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75ஆயிரத்துக்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000
10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560
09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560
08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760
07-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-08-2025- ஒரு கிராம் ரூ.127
10-08-2025- ஒரு கிராம் ரூ.127
08-08-2025- ஒரு கிராம் ரூ.127
08-08-2025- ஒரு கிராம் ரூ.127
07-08-2025- ஒரு கிராம் ரூ.127






