என் மலர்tooltip icon

    சென்னை

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யும்.
    • சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும், சென்னையிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
    • “நியாயம் – சமத்துவம் – சமூக நீதி” என்பதையே தங்கள் அரசியல் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

    ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது என்ற அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய "ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது" என்ற கருத்து, உண்மையில் மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

    இந்த நாடு ஜனநாயக நாடாகும். பிரதமர் யார் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களின் வாக்குகள் தான். ஒன்றிய உள்துறை அமைச்சர் அல்லது ஏதேனும் ஒருவரின் வாய்மொழிக் கட்டளையோ, தாழ்வான அரசியல் கருத்தோ அதைக் குறிக்கவில்லை.

    இன்று முழு இந்தியாவிலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் "நியாயம் – சமத்துவம் – சமூக நீதி" என்பதையே தங்கள் அரசியல் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். அந்த இலட்சியங்களுக்காகத் தான் ராகுல் காந்தி அவர்கள் போராடுகிறார்.

    நீதி, அன்பு, சமத்துவம் ஆகியவற்றை குரலாக எடுத்துரைக்கும் ஒருவரை மக்கள் பிரதமராக கொண்டு வருவார்களா, இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் . வரலாறு கூறுவது ஒரே உண்மை – மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது.

    உண்மையில், இந்த மாதிரியான ஆளும் கட்சியின் தோல்விப் பயத்தை வெளிப்படுத்தும் கூற்றுகளே, ராகுல்காந்தி அவர்கள் நாளைய பிரதமர் என்ற உண்மையை உறுதியாக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் அதிகபட்சமாக துரைபாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
    • தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

    மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    சென்னையில் பரவலாக அதிகாலே முதலே மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் அதிகபட்சமாக துரைபாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, மடிப்பாக்கத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பள்ளிக்கரணை, பாரீஸ், அடையார் பகுதிகளில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    மேலும், தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
    • நள்ளிரவில் பெய்த மழை அதிகாலை வரை தொடர்ந்தது.

    சென்னை:

    மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    சென்டிரல், கோயம்பேடு, எழும்பூர், புரசவைவாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, பழவந்தாங்கல், விருகம்பாக்கம், வடபழனி, அசோக்பில்லர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    இதேபோல், புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், போரூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நள்ளிரவில் பெய்த மழை அதிகாலை வரை தொடர்ந்து நீடித்தது.

    • ஆகச்சிறந்த கொள்கை கோட்பாடுகளை வைத்து தான் வீழ்த்த முடியும்.
    • விஜய் முகத்திற்காக ஓட்டுப் போடுவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அப்போது, அனைத்துக் கட்சி தலைவர்களையும் தாக்கி விஜய் கருத்துகளை பேசினார்.

    இதுதொடர்பாக சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர்," 2011-ல் விஜயகாந்திற்காக வாக்கு சேகரித்தவன் நான். அப்போது அவருக்கு ஆதரவாக விஜய் வரவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

    இதுகுறித்து சீமான் மேலும் கூறியதாவது:-

    60 ஆண்டுகளுக்கு மேல அதிகாரத்தில் இருக்கும் ஒரு சித்தாந்தத்தை வெறும் சினிமாவை வைத்து வீழ்த்திவிட முடியாது அண்ணா வழியில் சென்று திமுகவை வீழ்த்துவேன் என சொல்வதே வேடிக்கையாக உள்ளது.

    முகம் இன்று இருப்பதுபோல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இருக்காது: விஜய் முகத்திற்கு வாக்கு செலுத்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    2011-ல் விஜயகாந்திற்காக வாக்கு சேகரித்தவன் நான். அப்போது அவருக்கு ஆதரவாக விஜய் வரவில்லை

    இவ்வாறு கூறினார்.

    • அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல.
    • அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்?

    நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அவரது கருத்துக்கு திமுக எம்.பி. ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    துணை முதலமைச்சர் உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதல்வர் அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்து தான் வருவார்கள். வாக்குத் திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை திருட முடியாது.

    அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டுப் போட்டா தேர்ந்தெடுத்தார்கள்? மக்கள் வாக்களித்தால் யாரும் முதலமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை அமித்ஷா முடிவு செய்ய முடியாது.

    மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் தான். வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல.

    என ஆ.ராசா கூறினார்.

    • மஹா கும்பாபிஷேக விழா வருகிற 27.0 8 .2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
    • திறப்பு விழாவில் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் கலந்து கொண்டு ஸ்டுடியோவைத் திறந்து வைக்கிறார்.

    ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த 'பருத்திவீரன்' படத்திற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே 'பருத்திவீரன்' சரவணன் என்றானது. அதன் பிறகு, ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார்.

    எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார்.

    அண்மையில் வெளியான 'சட்டமும் நீதியும்' இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    நடிகர் சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டி இருக்கிறார்.

    தனது தோட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விநாயகராக அதை வணங்கி வந்தவர், தற்போது அதற்காக ஓர் ஆலயம் கட்டி இருக்கிறார்.

    அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த ஆலயத்தின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வருகிற 27.0 8 .2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

    ஆலய கும்பாபிஷேகம் நடக்கும் அதே நாளில் சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்கிற பெயரில் படப்பிடிப்பு தளம், ஒரு ஸ்டுடியோவையும் அன்று தொடங்குகிறார். அதன் திறப்பு விழாவில் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் கலந்து கொண்டு ஸ்டுடியோவைத் திறந்து வைக்கிறார்.

    • ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து, இலவசமாக பெறலாம்.
    • பாடநூல்களை படித்தாலே, ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இத்தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து, இலவசமாக பெறலாம் எனவும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

    சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய- மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்.

    இந்த அகாடமியில் கடந்த ஆண்டுகளில் படித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றிபெற்று பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தொகுத்துள்ள, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பயிற்சி நூல்களை, தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் வெளியிட, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜவகர் ஐ.ஏ.எஸ் பெற்றுக் கொண்டார்.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல்

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் (தாள்-1 மற்றும் தாள்-2) தேர்வுகள் 15.11.2025 அன்று தாள்-1 மற்றும் 16.11.2025 அன்று தாள்-2 ம் நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுகளை எழுதும் ஆசிரியர்களின் வெற்றிக்கு உதவும் வகையில், புதிய பாடத்திட்டத்தின்படி சமச்சீர் பாடப்புத்தகங்களை 'ஆசிரியர் தகுதித் தேர்வு நோக்கில்' தொகுத்து, இந்த 'ஆசிரியர் தகுதித் தேர்வு பாடநூல்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாட நூல்கள் அனைத்தும் இ-புத்தகங் களாக வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும். இந்த பாடநூல்களை படித்தாலே, ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

    முன்பதிவுக்கு... இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) ஆகிய இரண்டு தாள்களுக்கான பாட நூல்களை இலவசமாக பெற 'TNTET PAPER-I,II FREE TEXT BOOKS' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியுடன் 9176055542 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

    • நூற்றாண்டு காணும் குட் ஷெப்பர்ட் பள்ளியில் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் உருவாகி உள்ளனர்.
    • பல நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை, திறமையான கலைஞர்களை உருவாக்கிய பள்ளி.

    சென்னை நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    இந்த விழாவில் எம்பி தயாநிதி மாறன், அமைச்சர் அன்பில் மகேஷ், எம்எல்ஏக்கள் எழிலன், இனிகோ இருதயராஜன், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இன்றைக்கு சென்னை நாள், சென்னை பல்வேறு அடையாளங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் குட் ஷப்பர்ட் பள்ளி.

    நூற்றாண்டு காணும் குட் ஷெப்பர்ட் பள்ளியில் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் உருவாகி உள்ளனர்.

    பல நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை, திறமையான கலைஞர்களை உருவாக்கிய பள்ளி.

    பாடப்புத்தகங்களை கடந்து பண்பாட்டை வளர்க்கும் கல்வியால் குட் ஷெப்பர்ட் பள்ளி உயர்ந்துள்ளது.

    இரக்கம், தைரியம், பொறுப்பான குடியுரிமை, ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை கொள்கை கொண்ட மாணவர்களை உருவாக்கியுள்ளீர்கள்.

    ஒரு காலத்தில் கல்வி என்பது மறுக்கப்பட்டிருந்தது, ஏராளமான போராட்டத்திற்கு பின்னர் தான் கல்வி கதவு நமக்கு திறந்தது.

    இந்தியளவின் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுவதற்கு மத்திய அரசே துணை போகிறது. சாதி, மதம் பார்க்காமல் பழகும் பண்பை மாணவர்கள் பள்ளியில் இருந்து கற்க வேண்டும்.

    இதுவரை இல்லாத அளவிற்கு சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வு, பிளவுவாதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நிலவும் சூழலால் பள்ளி நிகழ்விலும் கூட அரசியல் பேச வேண்டியதாக உள்ளது.

    பள்ளியில் படிக்கும் நீங்கள் பட்டப்படிப்பு, ஆராய்ச்சி என முன்னேற வேண்டும், தேவையான அறிவை பெற நிறைய வாய்ப்புகள் உள்ளது.

    ரீல்சில் பார்ப்பதை எல்லாம் ரியாலிட்டி என நம்பிவிடாதீர்கள். இன்ஸ்டாவில் ரோல் மாடலை தேட வேண்டாம்.. Like-ல் ஒன்றும் கெத்து இல்லை. படிப்பைப்போல் மாணவர்கள் நன்கு விளையாட வேண்டும். உடல்நலனில் அக்களை கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் தங்கள் பெஸ்ட் பிரண்ட்ஸ் பெற்றோர்கள் என சொல்லும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
    • எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 30.8.2025 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

    நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிப்பு.
    • இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு.

    நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்துக்கான இழப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து, மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மேலும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • விமானத்தில் பயணிப்பதற்காக புறப்பட்ட ஏராளமான பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
    • விமான நிலையம் செல்வோர் உடனடியாக தாங்கள் புக் செய்த விமான நிறுவனங்களுக்கு தகவல் கூறியுள்ளனர்.

    சென்னை பல்லாவரம் அருகே இன்று காலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான வாகனங்கள் சாலையில் வரிசை கட்டி நின்றன.

    இதில், விமானத்தில் பயணிப்பதற்காக புறப்பட்ட ஏராளமான பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.

    பேருந்து விபத்தால் 3 கி.மீ தூரம் நெரிசல் ஏற்பட, விமான நிலையம் செல்வோர் உடனடியாக தாங்கள் புக் செய்த விமான நிறுவனங்களுக்கு தகவல் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

    ×