என் மலர்
சென்னை
- முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு?
- இது முதலீடு எனும் பெயரில், மக்கள் பணத்தில் திமுக நடத்தும் மோசடி விளையாட்டல்லவா?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சற்று முன்பு ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களோடு ரூ. 3200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், மாநில முதல்வரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன? ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு?
அதிலும், தமிழகம் போன்ற ஒரு அதிகப்படியான GDP கொண்ட மாநிலத்திற்கு, ரூ. 3200 கோடி முதலீடெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரியே! கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்து, மாண்புமிகு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் ரூ. 15 லட்சம் கோடி முதலீட்டை தனது மாநிலத்திற்கு கொண்டு வந்தார். அதே போல, தான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமலேயே, அமைச்சர்களை மட்டும் அனுப்பி, சுமார் ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகளை மாண்புமிகு உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள் ஈர்த்தார்.
நமது தமிழக முதல்வரோ ஆறு முறை உலகத்தை சுற்றி வந்து, சொற்பத் தொகையான ரூ. 18,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளார். அவற்றிலும் இன்றுவரை 95% ஒப்பந்தங்கள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிட்டன!
ஆக, இது முதலீடு எனும் பெயரில், மக்கள் பணத்தில் திமுக நடத்தும் மோசடி விளையாட்டல்லவா? இப்பொழுதாவது வாயைத் திறக்குமா விளம்பர மாடல் அரசு?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதி.
- சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேற் சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சசிகாந்த் தொடர்ந்து உண்ணவிரதத்தை கடைப்பிடித்த வருகிறார். இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும் சசிகாந்தை, திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சசிகாந்தை சந்தித்த பின் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளரகளுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அவரை சந்தித்து இதனை தெரியப்படுத்தினேன். நமது உரிமைகளை பெறுவதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன.
உடல் நலனை வருத்திக் கொள்ள வேண்டாம். திமுகவும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து போராடி கல்வி நிதியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- 5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ஒப்பந்தம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் 3,201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.8.2025 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜெர்மனி நாட்டின் டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை
வட ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாகாணத்தின் முதலமைச்சர் ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பாக, அவருடைய அரசின் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்புப் பிரிவின் அன்யா டி வூஸ்ட், இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே உள்ளிட்ட அலுவலர்கள் அன்புடன் வரவேற்றனர். மேலும், ஜெர்மனி வாழ் தமிழர்களும் முதலமைச்சர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.8.2025 அன்று ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் (1.9.2025) டசெல்டோர்ஃப் நகரில் Knorr Bremse. Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Knorr Bremse நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்ட நார்– பிரெம்ஸ் (Knorr Bremse) நிறுவனம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே கூறுகள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Knorr Bremse நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா (Mr. Marc Llistosella), துணைத் தலைவர் திரு. ஓலிவர் கிளக் ஆகியோர் கையெழுதிட்டனர்.
Nordex குழும நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரைக் தலைமையகமாக கொண்ட Nordex குழும நிறுவனம், உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில்மயமாக்கலில் தமிழ்நாட்டின் தலைமையை வலுப்படுத்துகிறது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், Nordex குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் திரு. லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுதிட்டனர். இந்த விரிவாக்கம் காற்றாலை உற்பத்தியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும்.
ebm-papst நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின் மல்ஃபிங்கன் (Mulfingen) நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள ebm-papst நிறுவனம், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இது அதன் புதுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட காற்று இயக்க தீர்வுகளுக்கு உலகளவில் பெயர் பெற்றது.
இந்நிறுவனம் மின்னணு ரீதியாக மாற்றப்பட்ட (Electronically Commutated) மோட்டார் தொழில்நுட்பத்தை முன்னோடியாகக் கொண்டு HVAC, ஆட்டோமோட்டிவ், குளிர்பதனம் மற்றும் தொழில்துறை பொறியியல் போன்ற தொழில்களுக்கு சேவை ஆற்றுகிறது.
இந்நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தியை அடுத்த
5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ebm-papst நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அதுல் திரிபாதி அவர்கள் கையெழுதிட்டார்.
BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் சந்திப்பு
ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள BMW குழும நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனங்களுக்கான ஆட்டோமொடிவ் அசல் உபகரணங்கள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோமொடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகனப் பிரிவில் அந்நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், BMW குழும நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான உலகளாவிய தலைமை அலுவலர் தாமஸ் பெக்கர், BMW இந்திய நிறுவனத்திற்கான அரசு மற்றும் வெளியுறவு இயக்குநர் திரு. வினோத் பாண்டே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டிய அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
- அந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அய்யா வழி என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கிய சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் அவரை முடிவெட்டும் கடவுள் என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காட்டிய அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான முதல் விருப்பவாய்ப்பாக "முடிசூடும் பெருமாள் மற்றும் முத்துக்குடி என்று அழைக்கப்பட்டார்" என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பில் முடிசூடும் பெருமாள் என்பதை "Vishnu with a crown" என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக 'the god of hair cutting' என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர். இது அய்யா வழியை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு சாதாரண சொல்லைக் கூட சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத நிலையில் இயங்கி வருவது வருத்தமளிக்கிறது. சுவாமி அய்யா வைகுண்டரை 'the god of hair cutting' என்று குறிப்பிட்டதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறினார்.
- அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
2025 ஆகஸ்டு மாதத்தில் 99.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 48,71,627 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 2,24,246 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,13,759 பயணிகள் (Single journey Paper QR /Token 21,74,413; Static QR 3,10,521; Whatsapp - 6,12,757; Paytm 4,28,846; ONDC – 7,58,871; PhonePe – 3,45,562; CMRL Mobile App 1,82,789) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
- புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எம்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
டெண்டர் முறைகேடு குறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதிக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதித்ததாக விஜிலெசன்ஸ் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு கால தாமதம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
- தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7-ந் தேதி வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாடு இடத்தை இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையில் நடைபெற உள்ள வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் மாநாட்டுக்கு கால் கோள் நாட்டு விழாவில் பங்கேற்றுள்ளேன்.
இந்த மாநாடு ஒரு திருப்பு முனையான மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள். டெல்லியில் இருந்து மேலிட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியிலும், பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒன்றும் புதிது அல்ல. உத்தரபிரதேசத்தில் இதுவரை 5 முறை பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சரிடம் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது கூட வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் பிரதமர் மோடி. அவர் வெள்ளை அறிக்கை விடட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. ஒரு வருடத்தை கடந்துவிட்டது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்கும்போது இந்த கொலை வழக்கில் சரியான கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.
இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இணக்கமாக உள்ளது. இந்த கூட்டணி 5 தேர்தல்களில் வெற்றி கண்ட கூட்டணி. தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசு வழங்கக்கோரி சசிகாந்த் செந்தில் எம்.பி. உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நலம் கருதி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க நடத்தும் அவரது போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனாலும் அவரது உடல் நலம் முக்கியம்.
ஜி.கே.மூப்பனார் ஒரு காலமும் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்தது கிடையாது. சமீபத்தில் அவரது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கூட காங்கிரஸ் திடலில் தான்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். வெளியேறி உள்ளனர். ஆனால் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல.
- கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம், இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழி பெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.
அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை,
"It Begged the United Nations award"- பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
திமுக தலைவர்கள் காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது.
எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.
- நான் துரோகியா? கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா?
- துரை வைகோவை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஒரே நாளில் விளக்க கடிதமும் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா? என்னுடைய விளக்கத்தை பெறாமலேயே தற்காலிக நீக்கம் செய்திருக்கிறீர்கள். இது ஜனநாயக படுகொலை அல்லவா? மரண தண்டனை கைதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றும் முன்கால அவகாசம் வழங்கப்படும்.
ஆனால் என் பொருட்டு அந்த அவகாசம் தர ஏன் தங்களுக்கு மனம் வரவில்லை. இந்த நடவடிக்கைக்கு பின்னால் உங்கள் மகன் துரை வைகோ இருக்கின்றார் என்பது தானே உண்மை.
நான் துரோகியா? கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா? துரை வைகோவை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது, எதையும் நாங்கள் நம்பாமல் கண் மூடித்தனமாக வாழ்வது என்றாலும் வீழ்வது என்றாலும் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களைப் பின்பற்றி வந்தோம்.
ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி யாராவது புறம் பேசினால் அதை நம்புவீர்கள். 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள்.
இவ்வாறு மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்.
- டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார் வெங்கட்ராமன்.
- ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
நேற்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆனால், சென்னை காவல் ஆணையர் அருண், வெட்கட்ராமன் பொறுப்பேற்றபோது நேரில் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை சென்னை காவல் ஆணையர் அருண் சந்தித்துள்ளார்.
சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் நேரில் சென்று அவர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.
- தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது.
சென்னை:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டன. இதனால் கடுமையான உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடமாநிலங்களில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.
வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபக்கற்ப பகுதிகளை தவிர்த்து நாடு முழுவதும் பரலாக அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 209.7 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் 214 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6 மில்லி மீட்டர் அதிகமாகும். மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.
அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. தென்காசியில் 88 மி.மீ., கோவை 52 மி.மீ. மயிலாடுதுறை 49 மி.மீ. திருவள்ளூர் 44 மி.மீ., தேனி 41 மி.மீ., ராணிப்பேட்டை 40 மி.மீ., சென்னையில் 23 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக பெய்துள்ளது. இந்த மாதம் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
- 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகளுக்கு கடந்த 5 நாட்களாக பூஜை செய்யப்பட்டன.
இந்த விநாயகர் சிலைகள் சென்னையில் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டோக்கள் மினி லாரிகள் மற்றும் லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் முழுவதும் கரையாத விநாயகர் சிலைகளின் எஞ்சிய பாகங்கள், மாலைகள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் என டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் கரை ஒதுங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
குப்பைகளை 100-க்கணக்கான லாரிகள் மூலம் அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






