என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரே இடத்தில் தொடர்ந்து விபத்தா? ஒப்பந்ததாரருக்கு இனி அபராதம்- நெடுஞ்சாலைத்துறை 'கிடுக்கிப்பிடி'
- மோசமான சாலைகளால் விபத்து ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 ஆயிரத்து 500 இடங்கள் விபத்து ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி 63 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை வசதி இருக்கிறது. இதில், 1 லட்சத்து 46 ஆயிரத்து 204 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 1 லட்சத்து 79 ஆயிரத்து 535 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலை மற்றும் 60 லட்சத்து 19 ஆயிரத்து 723 கிலோ மீட்டர் இதர சாலைகள் ஆகும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டணத்தை தனியார் சுங்க கட்டணம் அமைத்து வாகன ஓட்டிகளிடம் வசூலித்துக்கொள்கிறார்கள். சுங்க கட்டணம் வசூலித்துக்கொள்கிறார்களே தவிர, நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து வருகிறது. மோசமான சாலைகளால் விபத்து ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 ஆயிரத்து 500 இடங்கள் விபத்து ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுபோன்ற இடர்களை தவிர்க்க தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவர சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை முடிவெடுத்துள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட 500 மீட்டர் தொலைவில் 2-வது தடவையாக விபத்து நடந்தால் சம்பந்தப்பட்ட காண்டிராக்டருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
விபத்து நடந்த மறு ஆண்டு மீண்டும் விபத்து பதிவானால் காண்டிராக்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் ஒப்பந்த பணிகளை எடுத்த காண்டிராக்டர்கள் மாதத்துக்கு ஒரு முறை கட்டுமான பணிகளின் நிலை குறித்து டிரோன்கள் மூலம் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






