என் மலர்tooltip icon

    சென்னை

    • ஆலோசனைக் கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர-நகர- பகுதி-வட்டக் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை ஆலோசனைக்காக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி தி.மு.க. நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    நடப்பு பருவமழையின்போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும், இளைஞரணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் "சென்னை – தாம்பரம் - ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்-துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்" நாளை காலை 10.00 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர-நகர- பகுதி-வட்டக் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும்.
    • வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வட மாவட்டங்களில் தீவிரமாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில், 16, 17, 18 ஆகிய 3 நாள்களுக்கும் பரவலாக பலத்த மழை பெய்தது.

    மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார்.

    அப்போது, ஆயத்த நிலை மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வந்தது.

    இதன் காரணமாக, இன்று (செவ்வாய்கிழமை) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து நாளை (22-ந்தேதி) பிற்பகலில் ஆந்திர கடற்கரைகளுக்கு அப்பால் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு அது மேற்கு வடமேற்காக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 25-ந்தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    இதனால் இன்று ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும்.

    வீடுகளில் உள்ள மின்சாதன பொருள்களை பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, இடி, மின்னல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அந்த நேரங்களில், கைப்பேசியைப் பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுவை பகுதிகளிலும் கன முதல் மித கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வட மாவட்டங்களில் தீவிரமாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • மழை அதிகளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
    • பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். மழை அதிகளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன்.

    மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன்.



    • 11 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • வரும் 23-ந்தேதி 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    10 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    11 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    வரும் 23-ந்தேதி 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் 23-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தல் காரணமாக ராமநாதபுரம் மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானதால் மறு அறிவிப்பு வரும் வரை மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நிலவ சாதகமான சூழல் உள்ளது.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு குறைவு.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக, இன்று மாலை முதல் மழையின் தீவிரம் அதிகமாகும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    அதன்படி, சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான பல்வேறு மாவட்டங்களிலும் இன்று மாலை முதல் மழை தீவிரம் அடையும் என கூறப்படுகிறது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நிலவ சாதகமான சூழல் உள்ளது. மேலும் சென்னையில் அதி கனமழை வரை பெய்யக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு குறைவு எனவும் கூறப்படுகிறது.

    தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதலே மழை தொடங்கியிருக்கும் சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை தொடங்கும். அந்த மழையானது படிப்படியாக அதிகரித்து அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழையாக அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.

    • மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    மழை அதிகளவு பெய்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில், மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடைபெற்றது. 

    • இன்றைய தமிழ்நாடு.... கல்வியில் சிறந்த தமிழ்நாடு அல்ல.... மாறாக கல்வியில் சீரழித்த தமிழ்நாடு.
    • அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் அந்த பயன் கிடைக்க வேண்டும்;

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழக அரசு விடுத்த அறிவிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. தனியார் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்தத் திட்டத்தின்படி சேர்க்கப்பட வேண்டிய இடங்களில் பாதியளவுக்கும் குறைவாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது அரசின் அலட்சியம் மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற தன்மைக்காக மாணவர்களுக்கு கிடைத்த தண்டனை ஆகும்.

    கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளை சேர்ப்பதற்கான அறிவிக்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசு, கடந்த இரண்டாம் தேதி தான் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட்டது. இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களும், ஏற்கனவே கட்டணப் பிரிவில் சேர்ந்த மாணவர்களும் இதன்படி விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.

    ஆனால்,இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும் புதிதாக விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மாறாக, ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்தியக் கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படும்; அவர்களின் எண்ணிக்கை 25%க்கும் கூடுதலாக இருந்தால், முதல் 25 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று அறிவித்தது தான் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு காரணம் ஆகும்.

    தனியார் பள்ளிகளில் நர்சரி பள்ளிகள் என்ற ஒரு பிரிவும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என்று இன்னொரு பிரிவும் உள்ளன. நர்சரி பள்ளிகள் சற்று சாதாரணமானவையாகவும், ஏழைக் குழந்தைகள் அணுகும் வகையிலும் இருக்கக்கூடும். அதனால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் சற்று அதிக அளவில் சேர்ந்துள்ளனர். மாறாக உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டணம் அதிகம், மாணவர் சேர்க்கை விதிகள் கடுமையானவை என்பதால் குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். நர்சரி பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி உள்ள 45,721 இடங்களுக்கு 65,306 விண்ணப்பங்கள் வந்திருப்பதில் இருந்தும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 34,666 இடங்களுக்கு வெறும் 16,006 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதிலும் இருந்து இதை உறுதி செய்து கொள்ளலாம்.

    மாணவர் சேர்க்கை அறிவிக்கையை கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்த போதே, இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அவ்வாறு செய்திருந்தால் அனைத்து மாணவர்களும் அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள். அதனால் சில பள்ளிகளில் உபரி இடங்களும், சில பள்ளிகளில் பற்றாக்குறை இடங்களும் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இது அரசின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட குழப்பம் ஆகும்.

    இப்போது நர்சரி பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட 20 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான கட்டணத்தை அரசால் செலுத்த முடியாது. அதேநேரத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 18,600 இடங்களில் சேர மாணவர்கள் இல்லை. அதனால் அந்த இடங்களுக்குரிய பணம் தமிழக அரசிடம் உபரியாக இருக்கும். எனினும், அதை கல்விப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதற்குத் தான் திமுக அரசு ஆசைப்பட்டதா? திமுக அரசு அதன் தவறான கொள்கைகளால் தான் தமிழகத்தில் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி ஆகிய இரண்டையும் சீரழித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தமிழ்நாடு.... கல்வியில் சிறந்த தமிழ்நாடு அல்ல.... மாறாக கல்வியில் சீரழித்த தமிழ்நாடு.

    அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் அந்த பயன் கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகி விடக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும்.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்யும்.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும் என்றும், வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவல் ஆளிநர்கள் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

    காவலர் வீரவணக்க நாளையொட்டி காவலர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    அப்போது, காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவல் ஆளிநர்கள் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகையை முதலமைச்சர் வழங்கினார். காவல்துறையின் தகவல் பதிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கினார்.

    • காஷ்மீரின் உரிமைகளுக்காக பரூக் அப்துல்லா போராடி வருகிறார்.
    • பரூக் அப்துல்லா மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    காஷ்மீரின் உரிமைகளும் தன்னாட்சியும் சிதைக்கப்பட்டு வருவதற்கு எதிரான காஷ்மீரின் குரலின் அடையாளமாக பரூக் அப்துல்லா போராடி வருகிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் பரூக் அப்துல்லா மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    ×