search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி நிறுவனங்களில் மாணவ,மாணவியர் முககவசம் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி
    X

    சென்னை மாநகராட்சி

    கல்வி நிறுவனங்களில் மாணவ,மாணவியர் முககவசம் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி

    • சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 221 என்ற நிலையில் உள்ளது.

    முதலமைச்சரின் ஆலோசனையின்படி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை உடனடியாக கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை முக கவசம் அணிய அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை குழுக்கள் தொற்று பாதிப்பு சற்று அதிகமாக உள்ள மண்டலங்களான அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு 2 என மொத்தம் 8 நடமாடும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை குழுக்கள் வெள்ளிக்கிழமை முதல் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த மண்டலங்களை சார்ந்த பொதுமக்கள் 1,913 உதவி எண்ணில் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு நடமாடும் குழுக்களின் மூலமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

    காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் உடனடியாக அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், தொற்று பாதித்த நபர்களுக்கும், தொற்றிற்கான அறிகுறியுள்ள நபர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் இலவசமாக பாரசிட்டமால் 500 மி.கி., வைட்டமின் சி 500 மி.கி. மற்றும் ஜிங்க் 50 மி.கி. ஆகிய மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தலா 500 மாத்திரை தொகுப்புகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×