என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அட்டை எடுத்து கொள்ளலாம் என்று கலெக்டர்(பொறுப்பு)தனசேகரன் தெரிவித்துள்ளார்.
    அரியலுர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்  6-வட்டாரங்களிலும் 15,699 முன்பருவக்கல்வி குழந்தைகள் பயனடைகின்றனர். இக்குழந்தைகளுக்கு  யூனி பார்ம், காலனிகளுடன் அங்கன் வாடியில் வாரத்திற்கு 3 நாட்கள் வேகவைத்த முட்டை  மற்றும் கலவை சாதம் வழங்கப்படுகிறது. முன் பருவக்கல்வியும் அளிக்கப்படுகிறது.

    6 மாதம் முதல் 3வயதுக்குட்பட்ட 27,000 குழந்தைகளுக்கு, குழந்தைகளின் வளர்ச்சியை தெரிந்துக் கொள்ள மாதந்தோறும்  அங்கன்வாடியில் எடை எடுக்கப்படுகிறது. எடைக் குறைவான 22201 எண்ணிக்கையிலான குழந்தைகள் அனைவருக்கும் இணை உணவு (சத்துருண்டை) வழங்கப்படுகிறது.

    ஆதார் புகைப்படம் பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, பிறந்தது முதல் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் எடுக்கப்பட வேண்டும். இனி வருங்காலங்களில் ஆதார் அட்டை இருந்தால் அரசாங்கம் வழங்கும் அனைத்து பயன்களையும் குழந்தைகளுக்கும் பெற முடியும்.  குழந்தைகளை ஆரம்பப் பள்ளியில் சேர்க்கவும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்து பயன்பெறவும் மிகவும் அவசியம் தேவை. ஆகவே தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் ஊரில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று இலவசமாக ஆதார் புகைப்படம் எடுத்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு)  தனசேகரன் தெரிவித்துள்ளார்.
    பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த 10 வெள்ளாடுகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள பட்டகட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பையன் (வயது40), பாண்டியன்(35), கனநாதன்(39), லான்(38). இவர்கள், தங்களது வெள்ளாடுகளை அப்பகுதியில் நேற்று மேய்த்துக்கொண்டிருந்தனர்.

    நாளாபக்கமும் மேய்ந்துகொண்டிருந்த வெள்ளாடுகள் தண்ணீரைச் தேடிச் சென்றுள்ளனர். அதே பகுதியில் செல்வராஜ்(50) என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்துள்ள பயிர்களின் மேல் தெளிப்பதற்காக தண்ணீரில் பூச்சிமருந்து கலந்து வைத்துள்ளார். இதனை கண்ட வெள்ளாடுகள் தண்ணீர் இருப்பதை கண்டு மடவென குடித்துவிட்டன.அப்போது அங்குவந்த செல்வராஜ் ஆடுகளை விரட்டியுள்ளார். சிறிது தூரம் சென்ற அந்த வெள்ளாடுகள் ஒவ்வொன்றாக சுருண்டு கீழே விழுந்து பலியானது.

    உடனே செல்வராஜ் ஆட்டுக்கு சொந்தக்காரர்கள் யார் கூச்சலிட்டு கூப்பிடுள்ளார். அங்கு ஓடிவந்த ஆட்டுக்கு சொந்தமான நான்கு பேரும் தங்களது ஆடுகள் செத்து கிடப்பதை கண்டு பெரும் சோகத்தில் இருந்தனர். இதில் கருப்பையாவுக்கு சொந்தமான 7 ஆடுகளும், பாண்டியன், கனநாதன், லான் ஆகிய மூவரின் தலா ஒரு ஆடுகள் என 10 ஆடுகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் ரவுண்டானா அமைத்ததில் முறைகேடு செய்தவர்களை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி நான்கு வழிச் சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சென்டர் மீடியனுடன் ரவுண்டானா அமைக்க ரூ.1.43 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைப் பெற்று வருகிறது.

    இந்நிலையில் அமைக்கப்பட்ட ரவுண்டானா முறைப்படி அமைக்காமல், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறுகலாக தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்தும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரவுண்டானா அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டு ஊழல் செய்தவர்களை கண்டித்து, மாவட்ட தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார்.

    அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதி வேல், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திரசேகரன், சவுந்தர்ராஜன், தி.மு.க. நகர செயலாளர் சிவக்குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன், முரசொலி குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தகவலறிந்து அரியலூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அதுவரை ரவுண்டானா பணி நிறுத்தி வைக்கப்படும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் புளியமரங்கள் அகற்றப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் சுமார்  மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொ) தனசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1400 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ஏரியில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக 2 கிராம முக்கியஸ்தர்களுடன் தாசில்தார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னப்பன் ஏரியில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக மேலூர் கிராம மக்களுக்கும் கீழவெளி கைகளத்தெரு கிராம மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதை கண்டித்து ஒரு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதுதொடர்பாக இரு கிராம மக்களையும் அழைத்து பேசி தீர்வு காணப்படும் என்று தாசில்தார் அறிவித்திருந்தார். அதன்படி ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தாசில்தார் திருமாறன், 2 கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இரு கிராம மக்களிடையே பிரச்சினை ஏதும் ஏற்படாமல் வண்டல் மண் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அப்போது 2 கிராம முக்கியஸ்தர்களும் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதனை நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார். 
    பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலியாக, செந்துறை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெறுகிறது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடையால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டதோடு, குடியால் பல குடும்பங்கள் சீரழிவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டினார்கள். எனவே, அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    இருப்பினும் அந்த கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கடந்த 17-ந்தேதி அந்த கடையின் பூட்டை உடைத்து அங்கு இருந்த மதுபாட்டில்களை சாலையில் கொண்டு வந்து போட்டு உடைத்தனர். இதனால் கடை மூடப்பட்டது. இது தொடர்பாக தளவாய் போலீசார் 20 பெண்கள் உள்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ், செந்துறை இன்ஸ்பெக்டர் கருணாநிதி, அரியலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக அந்த கடை முன்பு குவிக்கப்பட்டனர்.

    அதன்பின்னர் ஊழியர்கள் அகரம்சீகூர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்து அந்த கடையை திறந்து மது பாட்டில்களை விற்பனை செய்தனர். சிறிது நேரத்திலேயே மது பாட்டில்கள் அனைத்தும் வீற்று தீர்ந்ததால் மாலை 3 மணிக்கே கடை மூடப்பட்டது. இதேபோல் நேற்று மாலையும் அந்த கடையில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. இதை அறிந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.  பூமிநாதனம், ரவிவளவன், மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் ஜூன்-15 அன்று ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டத்திற்கு கலந்துகொள்ள வரும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அரியலூர் புறவழிச்சாலையில் சிறப்பாக வரவேற்பு அளித்து அழைத்து செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில பொறுப்பாளர்கள் அன்பானந்தம், தனகோடி, ஆகியோர் சிறப்பு அழைப் பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் எனவும் தொண்டர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுகூட்டத்தை சிறப்பாக நடத்தவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

    இந்த கூட்டத்தில் வங்குடி திருஞானம் மருதவாணன், சுதாகர், இராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  நிறைவாக நகர பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
    அரியலூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூரை சேர்ந்தவர் சுந்தரராமன். இவர் பெரிய கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இன்று காலை அவரது கடை முன்பக்க கதவின்பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக சுந்தரராமனுக்கு ததவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடைக்கு சென்று பார்த்த போது கடைக்குள் பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் லாக்கரில் இருந்த 16 பவுன் நகை மற்றும் 84 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார் கிரி சென்று விசாரணை நடத்தினார். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள்மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் மர்மநபர்கள் கடையின் பூட்டை கடப்பாரை கம்பியால் உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 6 வருடத்திற்கு முன்பு சுந்தரராமனின் கடையை உடைத்து 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. எனவே சீரான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூரில் இந்தியகம்யூ னிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் துரை.பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உலகநாதன், துணைச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் போதிய பருவமழை இல்லாததாலும், அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் எதுவும் செய்திடாத காரணத்தாலும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. எனவே வாகனங்கள் மூலம் சீரான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளுக்கு விளை நிலங்களை பறிக்கொடுத்து, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்பின்றி தவிக்கும் மக்களுக்காக வாழ்வாதார பாதுகாப்பு கோரிக்கை மாநாடு ஜூன்.27 -ம் தேதி அரியலூரில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அரியலூர் கிளை நிர்வாகிகள் நல்லுசாமி, ராசேந்திரன், ராஜேந்திரன், பெரியசாமி, மணிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவரது மனைவி சந்திரா (வயது 45). நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காட்டுப்பிரிங்கியம் வேளாண்மைகூட்டுறவு கடன் சங்க வங்கிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    வி.கைகாட்டி அருகே வந்த போது, அந்த வழியாக சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக இறந்தார். கருப்பையா படுகாயமடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து நடத்த இடத்தில் குவிந்தனர். பின்னர் விபத்து நடந்த பகுதிகளில் தொடர் விபத்து நடைபெறுவதாகவும், சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் உரிமம் இல்லாமலும், மதுபோதையிலும் லாரிகளை அதிவேகமாக இயக்குவதாலும் தான் இதுபோன்ற அப்பாவி பொதுமக்களின் உயிர் பறிபோவதாக வேதனை தெரிவித்தனர்.

    மேலும் சிமெண்டு லாரிகள் ஓட்டும் டிரைவர்களிடம் உரிமம் மற்றும் அவர்கள் குடித்து விட்டு லாரி ஓட்டுகிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே போலீசார் சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வி.கைகாட்டி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த கருப்பையன் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் டாஸ்மாக் அல்லாத தாலுக்காவாக செந்துறை தாலுகாவை மாற்றி அமைத்து பெருமைப்பட செய்திருக்கும் செந்துறை மக்களுக்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டியுள்ளார்.
    அரியலூர்:

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த தாலுகாவிற்கு உட்பட்ட 8 டாஸ்மாக் கடைகளை தொடர் போராட்டங்களை நடத்தி மூடியுள்ளனர். மதுவிற்கு எதிராக செந்துறை பெண்கள் அதிகமாக தன்னெழுச்சியாக பங்கேற்று ஆர்ப்பரித்து இந்த போராட்டங்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

    தமிழகத்தில் டாஸ்மாக் அல்லாத தாலுக்காவாக செந்துறை தாலுகாவை மாற்றி அமைத்து பெருமைப்பட செய்திருக்கும் செந்துறை மக்களுக்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறப்போராட்டங்களை முன்னேடுத்துச் சென்று தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக மாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். போராட்டங்களுக்கு வழி வகுக்காமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    அரியலூர் மாவட்ட "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்'' வருகிற 31.05.2017 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்'' வருகிற  31.05.2017 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
    ×