search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா சாகுபடி குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க வலியுறுத்தல்
    X

    தரிசாக கிடக்கும் வயல்கள்.

    சம்பா சாகுபடி குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க வலியுறுத்தல்

    • கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி வருகிறது.
    • 13 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவதா?

    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் 5.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோடை காலம் போல கொளுத்திய வெயிலால் குறுவை பயிர்செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்பட்டது.

    மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு காவிரி மற்றும் வெண்ணாற்றில் 6 நாட்களுக்கு ஒரு முறை மாறி மாறி தண்ணீர் விடப்பட்டது. அவ்வாறு 6 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்பட்ட போதும் முழு அளவில் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படவில்லை .இதனால் குறுவை நடவு செய்த வயல்கள் டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் காய்ந்து வெடிப்பு நிலை காணப்பட்டது.

    இது போன்ற ஒரு சூழ்நிலையில் விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய வேளாண் துறை நீர் பற்றாக்குறை காலங்களில் எந்த விதமான யுக்தியை மேற்கொண்டால் நல்ல முறையில் விளைச்சல் எடுக்கலாம் என்ற எந்த ஆலோசனையையும் வழங்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும் முன்சம்பா மற்றும் இயல்பான சம்பா சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களில் நாற்றங்கால் தயாரிப்பு பணிகளை தொடங்காத சூழ்நிலையும் தற்போது நிலவுகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ,நீர் இருப்பு மிகவும் குறைவான நிலையில் உள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையிட்டு , உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது. இதிலும் கூட கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி வருகிறது.

    இதனால் தற்போது பயிர் செய்யப்பட்டுள்ள 5.75 லட்சம் ஏக்கர் குறுவை பயிர் விளைந்து அறுவடை செய்யமுடியுமா?என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் 13 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி பணிகளை துவக்குவதா? தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமா?என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர். ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை மேற்கொண்டாலும் ,வெயில் காரணமாகநிலத்தடி நீர் குறைந்து பயிர் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர்.

    மேட்டூர் அணையின் நீர் இருப்பு மிகவும் குறைந்துள்ள நிலையில். இன்னும் எத்தனை நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது புரியாத நிலையில் விவசாயிகள் தவித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை வேளாண் துறை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    குறைந்த நீரைக் கொண்டு குறுவை சாகுபடி நிறைவு செய்வது எப்படி? சம்பா சாகுபடி பணிகளில் எந்தவிதமான முறைகளை கையாண்டால் குறைந்த நீர் திட்டமிடலில் அதிக மகசூல் அல்லது விவசாயிகளை நஷ்டப்படுத்தாத மகசூல் பெறலாம் என்பது குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×