search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்பி மோகத்தால் ஆற்றின் நடுவில் சிக்கிய 3 வாலிபர்கள்
    X

    செல்பி மோகத்தால் ஆற்றின் நடுவில் சிக்கிய 3 வாலிபர்கள்

    • மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் செல்பி மோகத்தால் ஆற்றின் நடுவில் சிக்கிய 3 வாலிபர்கள் சிக்கனார்கள்.
    • பெரும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை நேற்று நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காலையில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பானது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலையில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    செல்பி மோகம்

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த ரவி, பிரபு, தினேஷ் ஆகிய 3 வாலிபர்கள் செல்பி மோகத்தால் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே தண்ணீர் வெளியேறும் பாதையில் இறங்கி காவிரி ஆற்றின் நடுவே ஒரு பாறையின் மீது நின்று தண்ணீர் சீறி பாய்ந்து ஓடும் காட்சியை செல்பி எடுத்து ரசித்தனர்.

    இந்த நிலையில் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு திடீரென அதிகரிக்கப்பட்டதால் பாறையை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களால் பாறையில் இருந்து தண்ணீரை கடந்து கரையேற முடியாமல் தவித்தனர். உடனடியாக அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.

    அவர்களின் கூக்குரல் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் மேட்டூர் கருமலைக்கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 3 வாலிபர்களையும் மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் வெள்ளம் அலை அடித்தப்படி சீறி பாய்ந்து ஓடியதால் மீட்பு குழுவினருக்கு சாவல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்தது. இருப்பினும் மீட்பு குழுவினர் ஒருவருக்கொருவர் கயிறு கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கி சற்று தூரம் நடந்தனர். ஆற்றில் கரடு முரடான பாறைகள் உள்ளதால் தண்ணீர் சுழல் அடித்தப்படி சென்றது. இதில் காப்பாற்ற முயன்ற வீரர் ஒருவரை வெள்ளம் இழுத்து சென்றது. அவர் நீச்சல் அடித்து கரை திரும்பினார்.

    இதனால் மீட்பு நடவடிக்கையில் ேதாய்வு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்து மேட்டூர் உதவி கலெக்டர் சரண்யா, தாசில்தார் முத்துராஜா மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரின் நடுவில் சிக்கிக்ெகாண்ட 3 வாலிபர்களை பத்திரமாக மீட்பதற்கான வழிமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்தனர்.

    மீட்பு குழுவினர் கயிற்றில் கல்லை கட்டி இளைஞர்களிடம் வீசினர். அவர்கள் கயிற்றை பிடித்துக் கொள்ள மறுமுனை கயிற்றை மீட்பு குழுவினர் பத்திரமாக பிடித்துக்கொண்டனர். அதன் பிறகு இளைஞர்கள் தங்களது இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு தண்ணீரில் குதித்து அடுத்தடுத்து பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்பு குழுவினர் 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதன் காரணமாக மேட்டூர் அனல் மின் நிலைய சாலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மீட்பு குழுவினரை பொதுமக்கள் பாராட்டினர். ஆபத்தை உணராமல் இளைஞர்கள் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்க முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×