search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வெண்ணந்தூர் அருகே கோவில் திருப்பணியில் ஈடுபட்ட சிற்பி சரமாரி வெட்டிக்கொலை

    வெண்ணந்தூர் அருகே கோவில் சிற்பி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையொட்டி உடன் இருந்த சக சிற்பியை வெண்ணந்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் போலீஸ் சரகம், ஓலப்பட்டி அருகே உள்ள ராசாபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. கோவிலின் சிற்ப வேலைபாடுகளுக்காக நாகை மாவட்டம், திருகடையூர், டி ரஸ்தா கீல வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் செந்தில்குமார் (வயது 24), மயிலாடுதுறை அருகே உள்ள திருவிழுந்தூர் தோப்பு தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் சீனிவாசன் (31) உள்பட 3 பேர் கடந்த 2 மாதங்களாக சிற்ப வேலைப்பாடுகளை செய்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் கோவில் அருகே உள்ள வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதனால் நேற்று இரவு சீனிவாசனும், செந்தில்குமாரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாகவே செந்தில்குமார் சீனிவாசனை கெட்டவார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

    அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த சீனிவாசன் சூரிக் கத்தியால் செந்தில்குமாரின் தலையின் பின் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் டி.எஸ்.பி. (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன், வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை தேடி வருகின்றனர்.

    பிறந்தநாள் அன்று செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகம் அடைந்தனர். செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது குடும்பத்தினர் வெண்ணந்தூருக்கு விரைந்து வந்தனர்.

    கோவில் சிற்ப வேலைக்காக வந்திருந்த சிற்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×