search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம், ஜவுளி உற்பத்தியாளர்களின் துணி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் வாபஸ் - விசைத்தறியாளர்களின் நலன் கருதி அறிவிப்பு

    வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2 1/2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை.

    பல்லடம்:

    தமிழகத்தில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி தொழிலில் நேரிடையாக சுமார் 10 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 50 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்த விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது.

    இந்த நிலையில்,உற்பத்தியான துணிக்கு உரிய விலை கிடைக்காதது, தொழிலாளர் பிரச்சனை, வங்கி கடன், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் விசைத்தறி தொழில் ஏறகனவே நலிவடைந்து உள்ளது. இந்த சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வரும் நூலின் விலை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளித் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், விலையை கட்டுப்படுத்தக்கோரியும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த மே.22 முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2 1/2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை.

    இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக தினமும் ரூ 100 கோடி மதிப்பிலான காடா ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களின் நலன் கருதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது; நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை தவிர்க்கவும் குடோனில் துணி தேக்கத்தை கட்டுப்படுத்தவும் ஏதுவாக கடந்த மே 22ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்கள் துணி உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன்படி திருப்பூர்,கோவை மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பினரும் பாதிப்படைந்து இருந்தனர். இந்த நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்து இருப்பதால் ஒரு சிப்ட் நேர துணி உற்பத்தியாவது மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை திருப்பூர்,கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து ஆலோசித்தோம்.

    விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களின் நலன் கருதி அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று நாளை ( இன்று) ஜூன் 1ம் தேதி முதல் துணி உற்பத்தியை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம்.

    மேலும் காட்டன் நூல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருவதால் வங்காளதேசம், சீனா போன்ற நாடுகளுடன் தொழில் போட்டியை சந்திக்கும் வகையில் ரேயான், நைலான் போன்ற செயற்கை நூல்களை கொள்முதல் செய்து துணி உற்பத்தி செய்வது என்றும் டிசம்பர் 30ம் தேதி வரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து ரக நூல்களுக்கும் மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×