search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ப சிதம்பரம் - சிவி சண்முகம்
    X
    ப சிதம்பரம் - சிவி சண்முகம்

    பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- மனுதாக்கல் இன்றுடன் நிறைவு

    காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் அனைவருமே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 57 மேல்சபை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது.

    நாளை (1-ந்தேதி) மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 3-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தற்போது 6 மேல்சபை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து காலியாகும் 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு, எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும். அதில் 3 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு இடத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. 2 இடங்களில் போட்டியிடுகிறது.

    தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடும் எஸ்.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோர் கடந்த 27-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர்.

    காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் அனைவருமே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

    மேலும் சுயேட்சை வேட்பாளர்களாக பத்மராஜன், அக்னி, ஸ்ரீராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன், சோழகனார், தேவராஜன் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில் நாளை காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. ஒரு வேட்பாளருக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். அத்துடன் வேட்புமனு தாக்கலின்போது 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது முன்மொழிவு கடிதம் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். அதன் அடிப்படையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் எஸ்.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    வேறு தகுதியான வேட்பு மனுக்கள் வராதபட்சத்தில் தேர்தல் நடைபெறாது. இதுதொடர்பான இறுதி அறிவிப்பு வருகிற 3-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    Next Story
    ×